மிதாலி ராஜ்: மகளிர் கிரிக்கெட்டின் மகத்தான வீராங்கனை

மிதாலி ராஜ்: மகளிர் கிரிக்கெட்டின் மகத்தான வீராங்கனை
Updated on
3 min read

எல்லாப் பயணங்களும் ஏதோ ஒரு இடத்தில் முற்றுப்பெறத்தான் செய்கின்றன. ஆனால், முற்றுப்பெறும் அத்தனை பயணங்களும் வரலாற்றில் இடம்பிடித்துவிடுவதில்லை. வெகு சிலரின் பயணங்களும் வழிநெடுக அவர்கள் பதித்துவந்திருக்கும் தடங்களும் மட்டுமே வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியப் பெண்களின் கிரிக்கெட் முகமாகத் திகழ்ந்த மிதாலி ராஜ், இப்போது தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவுசெய்திருக்கிறார். வரலாற்றில் இடம்பெறுவதற்கான அத்தனை தகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பயணத்தையே மிதாலி ராஜ் மேற்கொண்டு ஓய்ந்திருக்கிறார்.

மார்ச் 08, 2020. பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, லட்சம் பேர் அமரும் வசதியுடைய ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் அரங்கேறியது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அந்த இறுதிப்போட்டியில் மோதின. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோற்று உலகக்கோப்பையை வெல்லும் மதிப்புமிக்க வாய்ப்பை இழந்தது.

ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் அதுவல்ல. லட்சம் பேர் கூடும் வசதியுடைய அந்த மைதானம் அன்றைக்கு ஏறக்குறைய முழுமையாக நிரம்பியிருந்தது. 86,174 பேர் அந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்திருந்தனர். பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டுக்குக் கூடிய மிகப்பெரும் மக்கள்திரளில் இதுவும் ஒன்று என்கிற சாதனை அன்று நிகழ்த்தப்பட்டது. மைதானத்தில் மட்டுமல்ல, தொலைக்காட்சி நேரலையில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கையிலும் அந்தப் போட்டி புதிய சாதனையைப் படைத்தது.

பெண்கள் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் எட்டியிருக்கும் ஒரு மாபெரும் உயரத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் ஈர்ப்பையுமே இது காட்டுகிறது. இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மாவுக்கு இன்று இணையதளங்களில் எக்கச்சக்க ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பெண்களுக்கான ஐ.பி.எல். தொடரை இன்னும் ஏன் நடத்தாமல் இருக்கிறீர்கள் என பிசிசிஐ-யை ரசிகர்கள் நிற்க வைத்துக் கேள்வி கேட்கின்றனர்.

இதெல்லாம் நிச்சயமாக வரவேற்க வேண்டிய விஷயங்கள். ஆனால், மிதாலி ராஜ் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் இது எதுவுமே பெண்கள் கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்திருக்கவில்லை. மைதானங்கள் ஆள் அரவமின்றி வெறுமையாக இருக்கும். பெண்கள் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சி நேரலையெல்லாம் கிடையவே கிடையாது. ரசிகர்களின் ஆதரவு? அது இருந்திருந்தால்தான் மேற்கூறியவை சாத்தியப்பட்டிருக்குமே? இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மிதாலி ராஜ் அறிமுகமானார்.

முதல் சர்வதேசப் போட்டியில் ஆடியபோது அவருக்கு 16 வயதுதான். அந்த முதல் போட்டியிலேயே சதமடித்துத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்தார். இந்திய அணிக்கு முதல் முறையாக அவர் கேப்டன் ஆனபோது, அவருக்கு 22 வயதுதான். 2005-ல் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்திய முதல் உலகக்கோப்பைத் தொடரிலேயே இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆடியது அதுதான் முதல் முறை. நீண்ட காலத்துக்குப் பிறகு அந்தப் போட்டிக்குத்தான் தொலைக்காட்சி நேரலையும் சாத்தியப்பட்டது. இந்தியாவுக்காகப் பெண்களும் கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்பதே பலருக்கும் அதன்பிறகுதான் தெரியவந்தது.

கிரிக்கெட் உலகில் செல்வத்தில் கொழித்த கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ. ஆனால், அவர்களே ஆண் கிரிக்கெட்டர்களையும் பெண் கிரிக்கெட்டர்களையும் சமமாக நடத்துவதில்லை. கடந்த ஆண்டில், இங்கிலாந்து தொடருக்கான பயணத்துக்காக ஆண் கிரிக்கெட்டர்களுக்குத் தனி சொகுசு விமானத்தை ஏற்பாடு செய்துவிட்டு, பெண்களுக்கு வழக்கமான விமானப் பயணத்தையே பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பாலின பாகுபாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிசிசிஐ, அதன் பிறகு பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் தனி விமானத்தை ஏற்பாடு செய்துகொடுத்தது.

2020-களிலேயே இதுதான் நிலைமை. எனில், 2005-க்கு முன்பான காலகட்டங்களை யோசித்துப் பாருங்கள். அப்போது, பெண்கள் கிரிக்கெட் பிசிசிஐயின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. அதற்கென ஒரு தனி அமைப்பு இயங்கிக்கொண்டிருந்தது. வீராங்கனைகளுக்கு முறையான பயணப்படிகளும் பயிற்சி வசதிகளுமேகூடக் கிடைக்காது. மிதாலி ராஜின் பெற்றோர் சிரமப்பட்டுத் தங்கள் சொந்த செலவிலேயே பல வேளைகளில் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்திருக்கிறார்கள். ரசிகர்களின் ஊக்குவிப்பு இல்லாமல், அடிப்படை வசதிகளும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட்டில் பிழைத்திருத்தலே பெரும் சாதனை என்றிருந்த சூழலிலும் மிதாலி ராஜ் விடாப்பிடியாக பல சாதனைகளையும் செய்தார். அதிகப் போட்டிகளில் ஆடியவர், அதிக ரன்களை அடித்தவர் என பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் மிதாலி ராஜின் பெயரே அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

இந்த 23 ஆண்டுகளில் ஏகப்பட்ட காயங்கள், சர்ச்சைகள், பயிற்சியாளர்களுடன், சக வீராங்கனைகளுடன் கருத்து வேறுபாடு என எத்தனையோ தடங்கல்கள் மிதாலி ராஜுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் எந்த இடத்திலுமே மிதாலி ராஜை ஒதுக்கிவிட்டு, இந்திய அணி என்கிற ஒரு குழுவை யோசித்தே பார்க்க முடியாது. மிதாலி ராஜ் தனது 200-வது ஒருநாள் போட்டியை ஆடிய சமயத்தில், இந்திய அணியே ஏறக்குறைய 260 போட்டிகளில்தான் ஆடியிருந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஆக, இங்கே இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேச வேண்டுமெனில், மிதாலி ராஜின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது. தவிர்க்க நினைத்தால் பெண்கள் கிரிக்கெட் பற்றிப் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்காது.

இன்றைக்குப் பெண்கள் கிரிக்கெட் கொஞ்சமேனும் கவனிக்கப்படுகிறதெனில், அதற்குத் திருமணமே செய்துகொள்ளாமல் சமூக அழுத்தங்களுக்குத் தன்னை இரையாக்கிக்கொள்ளாமல், உறுதியாக கிரிக்கெட்டை மட்டுமே உயிராக நினைத்து, இந்திய அணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மிதாலி ராஜ் போன்றோரே மிக முக்கியக் காரணம்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடரை மிதாலி ராஜுக்காக இந்திய அணி வெல்ல வேண்டும் என அனைவரும் பிரார்த்தித்தனர். ஆனால், அந்தத் தொடரில் இந்திய அணியால் அரையிறுதிக்குக்கூடத் தகுதிபெற முடியவில்லை. மோசமான தோல்வி. அந்தத் தொடரே மிதாலி ராஜின் நீண்ட நெடிய பயணத்தின் முடிவாகவும் அமைந்துவிட்டது. உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பது வருத்தம்தான். ஆனாலும், வெற்றிகளாலும் தோல்விகளாலும் மட்டுமே மிதாலி ராஜை அளவிட்டுவிட முடியாது. கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு இடத்திலிருந்து ரசிகர்களிடையே பேசுபொருளாகியிருக்கும் இந்த இடத்துக்குப் பெண்கள் கிரிக்கெட்டைக் கொண்டுவந்து சேர்த்த அவரின் போராட்டம்தான் இங்கே முக்கியம். அதுதான் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கப்போகிறது.

- உ.ஸ்ரீராம், தொடர்புக்கு: sriramanarayanan3199@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in