Published : 10 Jun 2022 05:06 PM
Last Updated : 10 Jun 2022 05:06 PM

தவறான தண்டனைகளைத் தடுத்து நிறுத்தும் வழி என்ன?

இந்தியச் சிறைகளில் குற்றம் இழைக்காத அல்லது குற்றம் இழைத்தார்கள் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத பலர் விசாரணைக் கைதிகளாகவே தம் வாழ்வின் கணிசமான ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நேரும் அவலத்தைத் தொடர்ந்து முன்வைத்து மனித உரிமையாளர்கள் விவாதப்பொருளாக்கி வருகின்றனர்.

போலியான அல்லது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தர்ப்பச் சூழ்நிலை சார்ந்த தடயங்களின் காரணமாகவோ (Circumstantial evidence) சந்தேகத்தின் பெயரிலோ கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்காலம் சிறையில் வாடுகிறார்கள்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வழக்கானது, சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களும் வசதி படைத்தவர்களும் கூட இதுபோல் செய்யாத குற்றத்துக்குத் தண்டிக்கப்படும் அநீதியிலிருந்து முற்றிலும் தப்பிவிட முடிவதில்லை என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று மும்பையிலிருந்து கோவாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் (Narcotics Control Board) அதிகாரிகள் சோதனை நடத்தினர். போதை மருந்து பயன்படுத்தியதாகக் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போக்கில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் கானின் பிணை மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. ஆர்யன் கான் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர் என்றும் சர்வதேச போதை மருந்துக் கடத்தல் வலைப்பின்னலில் அவருக்குத் தொடர்பிருப்பது அவருடைய திறன்பேசியில் கண்டெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு குற்றம்சாட்டியது. இது ஆர்யன் கானின் பிணை மறுக்கப்படுவதற்கு முக்கியக் காரணமானது. மேல் முறையீட்டில் மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கான் உட்பட மூவரைப் பிணையில் விடுவித்தது.

20 நாட்களுக்கு மேல் ஆர்யன் கான் சிறையில் கழிக்க நேர்ந்தது. பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் எளிதில் தவறிழைப்பார்கள், பாலிவுட் பிரபலங்கள் பலர் போதை மருந்துப் பழக்கத்தில் இருப்பவர்கள், செல்வந்தர்களுக்குச் சட்டம் எளிதில் வளைந்துகொடுத்துவிடும் என்பது போன்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையின் காரணமாக ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டது ஊடகங்களின் பிரதான பேசுபொருளாகியது. அவருக்கு எதிராகவும் அவர் கைதுசெய்யப்பட்டதை ஆதரித்தும் பலர் கருத்துத் தெரிவித்தனர். அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பெழுதினர். ஆர்யன் கான் சரியாக வளர்க்கப்படவில்லை என்று ஷாருக் கான் மீதும் வன்மம் கொட்டப்பட்டது. ஷாருக் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் சிலர் மதவாதரீதியான வசைகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

சொகுசுக் கப்பலில் சோதனை நடத்தி ஆர்யன் கான் உள்ளிட்டோரைக் கைது செய்த குழுவுக்குத் தலைமை வகித்தவர், அப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே. இவர் ஷாரூக் கானை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக ஆர்யன் கானை வேண்டுமென்றே சிக்க வைத்திருக்கிறார் என்று மஹாராஷ்டிர அரசின் சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நவாப் மாலிக் உட்படச் சில அரசியலர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டு வலுத்ததை அடுத்து, சொகுசுக் கப்பல் போதைப் பொருள் வழக்கின் விசாரணை டெல்லியைச் சேர்ந்த துணைத் தலைமை இயக்குநர் சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டார் என்பதற்கோ போதைப் பொருள் கடத்தல் காரர்களுடன் அவருக்கு எந்த வகையிலேனும் தொடர்பிருந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று இந்தக் குழு தெரிவித்ததை அடுத்து, ஆர்யன் கான் உள்ளிட்ட ஐவர் மே 27 அன்று இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சொகுசுக் கப்பலில் நிகழ்த்தப்பட்ட சோதனையைக் காணொளிப் பதிவு செய்யாதது, ஆர்யன் கான் உள்ளிட்டோர் போதை மருந்து உட்கொண்டிருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாதது, சட்டத்துக்குப் புறம்பாக ஆர்யன் கானின் வாட்ஸ்அப் உரையாடல்களைச் சோதனையிட்டது என இந்த வழக்கு விசாரணையில் சமீர் வான்கடே குழுவினர் பல்வேறு குளறுபடிகளைச் செய்திருப்பதாக டெல்லி சிறப்பு விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. சமீர் வான்கடே போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டு, வேறொரு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். இப்போது அவர் சென்னைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக சமீர் வான்கடே மீது விசாரணை நடத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

2020-ல் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்குப் போதை மருந்து வாங்கிக் கொடுத்தார் என்னும் குற்றச்சாட்டில் அவருடைய தோழி ரியா சக்ரவர்த்தி கைதுசெய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. ரியா சக்ரவர்த்தி மீதான விசாரணையை நடத்தியதும் சமீர் வான்கடே தலைமையிலான குழுதான்.

ரியாவின் மூலம் போதை மருந்து உட்கொண்ட குற்றச்சாட்டில் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் பெயர்களும் சேர்க்கப்பட்டன. அவர்கள் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அந்த நடிகைகள் மீதும் ஊடகங்களின் எதிர்மறை வெளிச்சம் பாய்ந்தது. ஆனால் இப்போது ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் ஆதாரமின்றிச் சிக்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கும் நிலையில், ரியா மீதான வழக்கும் புதிதாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ரியாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

செல்வாக்கு மிக்க மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்னவாகும் என்கிற அச்சத்தை ஆர்யன் கான் வழக்கின் திசைமாற்றம் உணர்த்தியுள்ளது. மேலும் போதை மருந்துக் கடத்தல் போன்ற தீவிரமான பிரச்சினைகளின் ஊற்றுக்கண்களைக் கண்டறிந்து, களையெடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் இந்த அதிகாரிகள். புற அழுத்தங்களுக்கு ஆளாகித் தவறு செய்யாதவர்களை அல்லது ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை இவர்கள் எடுப்பது ஏன் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. இதுபோன்ற ஆதாரம் இல்லாத வழக்குகளில் கைதுசெய்யப்படுகிறவர்களின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுவது நீதித் துறையின் செயல்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஆர்யன் கான் வழக்கில் நல்வாய்ப்பாக விசாரணை அதிகாரி மீது சந்தேகம் எழுந்தவுடன், அவரிடமிருந்து விசாரணை வேறொரு உயர்மட்டக் குழுவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. புதிய குழு, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை விடுவித்துவிட்டது. ஆனால், தவறுதலாகச் சிக்கவைக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்யன் கானுக்கு நடந்ததுபோல் குறைந்த காலத்தில் நீதியோ விடுதலையோ கிடைத்துவிடுவதில்லை. விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டு விதிகளை மீறியிருப்பதும் தவறுகள் செய்திருப்பதும் நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம்தான் அப்பாவிகள் சிக்கவைக்கப்படுவதும் அசலான குற்றவாளிகள் தப்பிப்பதும் தடுக்கப்படும்.

மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆர்யன் கான் வழக்கு உணர்த்தியுள்ளது. இதற்கு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நம்பி நாராயணன் வழக்கு உள்ளிட்ட அரிதான வழக்குகளில் நீதிமன்றங்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்கச் செய்துள்ளன. ஆனால், தவறாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அதற்கான இழைப்பீட்டையேனும் பெறுவது விதிவிலக்காக இல்லாமல், விதியாக மாற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாகவே ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக் கூடாது என்னும் உயரிய விழுமியத்துக்கு உண்மையாக இருப்பதாக நம் சட்டமும் சமூகமும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x