கல்லணைக் கால்வாயின் கழுத்தை நெரிக்காதீர்கள்!

கல்லணைக் கால்வாயின் கழுத்தை நெரிக்காதீர்கள்!
Updated on
3 min read

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கல்லணைக் கால்வாய் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் 02.02.2021 அன்று ரூ.2,639 கோடி மதிப்பீட்டில், 16 கட்டப் பணிகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகள் 2026 வரை நடைபெற உள்ளன. தற்போது, முதற்கட்டமாக 5 கட்டப் பணிகளுக்காக ரூ.1,036.70 கோடி ஒதுக்கப்பட்டு, கல்லணைக் கால்வாயின் பிரதான மற்றும் கிளைக் கால்வாய்களில் கான்கீரிட் தரைத்தளம் அமைக்கப்பட்டுவருகிறது.

கல்லணைக் கால்வாய்ப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படும்போது, அதன் கடைமடைப் பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தின் மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி ஒன்றியங்கள் ஆகியவற்றில் உள்ள ஆயக்கட்டுப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றுசேர்வது பிரச்சினையாக உள்ளதால் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக நீர்வளத் துறை மூலமாக மத்திய - மாநில அரசுகள் பணிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.

ஆற்றின் தரைத்தளத்தில் அமையும் கடினமான கான்கீரிட் தளம், புதிய டெல்டா மற்றும் புதுக்கோட்டையின் வடகிழக்குப் பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் அழிக்கும் பேரழிவுத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

புது ஆறு எனும் கல்லணைக் கால்வாய், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறு. காவிரிப் படுகை டெல்டா என்றால் வடவாறு செல்கின்ற கரந்தைப் பகுதியுடன் முடிந்துவிடும். வடவாற்றின் தெற்குக் கரையிலிருந்து செம்மண் மற்றும் செம்பாறைக்கல், சுண்ணாம்புப் பாறைகள், கற்றாழை, ஈச்சமரங்கள், பனைமரங்கள், கள்ளிச்செடிகள் நிறைந்த பாலைவனம் போன்ற பகுதியாகும்.

உண்மையில் தஞ்சையின் தெற்குப் பகுதிகளான தஞ்சாவூரின் ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை தாலுக்காக்கள் புதுக்கோட்டையின் அறந்தாங்கி கறம்பக்குடி தாலுக்காக்கள் ஆகிய பகுதிகளுக்கு காவிரிப் பாசனம் என்பதே கிடையாது, வானம் பார்த்த பூமியாக மழை நீரை மட்டுமே இந்தப் பகுதிகள் நம்பியிருந்தன. கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்ட பிறகே தஞ்சையின் தெற்குப் பகுதி புதிய டெல்டாவாக உருவெடுத்துள்ளது.

பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸால் 1928–1934–ல் கட்டமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாயானது புதிய டெல்டா பகுதியின் 47% விளைநிலங்களுக்கு (2.51 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்) நீர்ப்பாசனம் தருகிறது. கல்லணைக் கால்வாயின் முதன்மைக் கால்வாய் 148.654 கி.மீ. தொலைவு; பிரிவுக் கால்வாய்களின் நீளம் கிட்டத்தட்ட 1,232 கி.மீ. 694 ஏரிகள், 2,000-த்துக்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் போன்றவை கல்லணைக் கால்வாய்க் கோட்டத்தில் அமைந்துள்ளன.

கடந்த 86 ஆண்டுகளாகச் சுமார் 4,200 கனஅடி நீரைக் கொண்டுசெல்லும் திறன் கொண்ட கல்லணைக் கால்வாயின் முதன்மைக் கால்வாய் ஆழம் குறைந்தது. அதனால் தற்போது 2,000 கனஅடி நீரை மட்டுமே கொண்டுசெல்ல முடிகிறது. முறையாகத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தினால் 4,200 கனஅடி நீர் தங்குதடையின்றிச் செல்லும்.

பிரதானக் கால்வாயில் கான்கீரிட் தளம் பயனற்ற ஒன்றாகும். நீரானது, கல்லணைக் கால்வாயிலிருந்து 337 பிரிவு வாய்க்கால்கள் வழியாக ஏரிகள், குளங்களுக்குச் சென்று, மிஞ்சிய நீர் திரும்பவும் கல்லணைக் கால்வாய் வழியே இறுதியாக கடலில் கலக்கிறது. ஆக்கிரமிப்புகளால் மட்டுமே கடைக்கோடிக்குத் தண்ணீர் செல்வதற்கு வழி கிடைக்கவில்லை என்பதே உண்மை. 170 ஏக்கர் வாட்டாத்திக்கோட்டை பெரிய ஏரி 50 ஏக்கராகவும், 170 ஏக்கர் இடையாத்தி ஏரி 70 ஏக்கராகவும், 75 ஏக்கர் புனல்வாசல் ஏரி 39 ஏக்கராகவும், 126 ஏக்கர் பண்ணவயல் ஏரி 50 ஏக்கராகவும் சுருங்கி 694 ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

குளங்களும் குட்டைகளும் காணாமல் போய்விட்டன. நீர்நிலைகளில் பலரும் விவசாயம் செய்துவருவதோடு, பண்ணைகளும் குடியிருப்புகளும் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரைச் சேமித்தால், முப்போகம் விவசாயம் செய்து, விவசாயிகள் தன்னிறவு அடைவார்கள். நிலத்தடி நீர்மட்டம் பன்மடங்கு அதிகரிக்கும். கடினமான கான்கீரிட் தரைத்தளம் கல்லணைக் கால்வாயில் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் அழியும்.

மீன்கள், நண்டுகள், நத்தைகள், ஆமைகள், பாம்புகள் தமது வாழ்விடத்தை இழந்து, நீர்நிலை சார்ந்த தாவரங்களும் அழிந்துவிடும். நிலத்தடிக்குச் செல்லும் நீர் ஊடுருவுதலை சிமென்ட் கான்கிரீட் தளம் முற்றிலும் தடுத்துவிடுவதோடு, மேல்தள ஊற்றுக்கண் முற்றிலும் அடைத்துப்போய் கல்லணைக் கால்வாய்க் கட்டளைப் பகுதியின் 774 கிராமங்களில் ஊற்றுகளில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளிலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் முற்றிலும் வற்றிப்போகும். பட்டுக்கோட்டை, பேராவூரணி, மணல்மேல்குடி பகுதிகளில் கடல்நீர் நிலத்தடியில் புகுந்து அப்பகுதியின் நிலத்தடி நீர் பயனற்றதாகிவிடும்.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் தேவங் ஜனி 2015-ல் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல்செய்து, நாசிக்கில் கோதாவரி ஆற்றின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்ட கான்கீரிட் தளத்தை நிலத்தடி நீருக்காக அகற்றி, ஆற்றின் தன்மையைப் பழைய நிலைக்கு மீட்டுவருகிறார். அதேபோன்று, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

ஆற்றின் நடுவே கான்கிரீட் தளம் அமைக்காமல், கரைகள், பாலங்கள், படித்துறைகள் ஆகியவற்றை மட்டும் கான்கீரிட் கட்டுமானத்தால் பலப்படுத்த வேண்டும். இதுவரை அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தரைத்தளத்தை அகற்றிவிட்டு நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதற்காக, கால்வாயைப் பழைய நிலைக்கே கொண்டுவந்து, கல்லணைக் கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீரை உயர்த்தலாம்.

2021-ல் ஏற்பட்டு ஆட்சி மாற்றத்தால் இத்திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று நம்பியவர்களுக்குத் தற்போது ஏமாற்றமே. காவிரி பாசனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது கண்துடைப்பாக உள்ளது.

காவிரிப் படுகை மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், தஞ்சையின் தெற்குப் பகுதிகளும், புதுக்கோட்டையின் வடகிழக்குப் பகுதிகளும் பாலைவனமாக மாறிவிடும். கான்கிரீட்டால் கல்லணைக் கால்வாய் உயிரோடு புதைக்கப்பட்டால், அடுத்த தலைமுறை நிலத்தடி நீர் எங்கே என்று கேட்கும்போது, என்ன சொல்லப்போகிறோம்?

- ரா.பிரகாஷ், தகவல் சட்ட ஆர்வலர். தொடர்புக்கு: rtiprakashml@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in