வேண்டும் பாலின சமத்துவம்

வேண்டும் பாலின சமத்துவம்
Updated on
3 min read

கல்லூரிக் கல்வி என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவரும் சூழலில், பட்டப் படிப்பை முடிக்காதவர்களின் எதிர்காலம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அன்றாட வாழ்க்கையில் புதிய பதற்றத்தையும் நிச்சயமின்மையையும் கரோனாவுக்குப் பிறகு நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது ஒருபுறம் என்றால், கடந்த இரண்டு வருடங்களாக இணையம்வழியாகப் பயின்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள், இப்போது மூன்று நான்கு மாதங்களாக வகுப்பறைகளில் பயின்று, இவ்வாண்டின் இறுதித் தேர்வை நேரடியாகத் தேர்வறைகளில் எழுதப்போகிறார்கள்.

இம்மாற்றத்துக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நிறைய தயக்கங்களுக்குப் பிறகு தெளிவாகவும் துணிவாகவும் தயாராகிவிட்டார்கள். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில், நவீனக் கல்வியில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் காலம் மெல்லமெல்ல வருவதுதான் நல்லது.

ஒரே நாளில் எல்லாவற்றையும் தலைகீழாக்கிப் புது ரத்தம் செலுத்த எண்ணுவது, எளிய மாணவர்களின் நோக்கிலிருந்து அணுகும்போது சற்று ஆபத்தானதாக முடிந்துவிடும் வாய்ப்பு அதிகம். எனவே, மாற்றங்களைப் புகுத்துவதில் மிகுந்த நிதானமும் அளவற்ற பொறுமையும் அவசியம்.

இன்றைக்குக் கைபேசி, கணினி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேல் வகுப்பறைகளில் வளர்ந்துவந்த நமது கல்வியை இணையம் மற்றும் பிற நவீனக் கற்பித்தல் முறைகளின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு முன், அதற்கான மனத் தயாரிப்பை ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்வதற்கான நவீனக் கல்விச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும்.

கல்லூரிகளுக்கு வெளியில் மாணவர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் அடிக்கடி மோதிக்கொள்ளும் யதார்த்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குக் காவல் துறையின் ஒழுங்குக் கண்காணிப்பு மட்டும் போதாது. மாணவர்களின் கலைத் திறன்களையும், அறிவியல் ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொரு கல்லூரியிலும் உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செம்மையாகக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் எல்லையற்ற ஆற்றல்களுடன் திகழ்கிறார்கள். அவர்களின் திறன்களை ஒருங்கிணைத்து ஆற்றுப்படுத்தும் சவால் நமது ஆசிரியர்களுக்கு உள்ளது.

ஆசிரியர் பணி என்பது, வெறும் ஊதியம் வாங்கும் வழமையான பணி இல்லை; அது எதிர்கால தேசத்தை உருவாக்கும் பணி என்பதை மீண்டும் தமக்குத் தாமே ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வளரிளம் பருவத்தின் பல்வேறு உணர்வுச் சிடுக்குகளையும், குடும்ப உறவுசார் நெருக்கடிகளையும், அடையாளச் சிக்கல்களையும், ஆளுமைத் தேடல்களையும் விழிப்புடன் எதிர்கொண்டு, கல்விப் பயணத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவரை ஒருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, சேர்ந்து இயங்கினால் மட்டுமே நவீனக் கல்வியில் நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

அசோகமித்திரனின் ‘ரிக்‌ஷா’ சிறுகதையில் ஒரு தந்தை தன் மகனுக்கு ‘ரிக்‌ஷா’ என்கிற ஒரு வார்த்தையைக் கற்றுக்கொடுப்பதற்கு அரை மணி நேரத்துக்கும் மேல் முயற்சி செய்கிறார். அப்பா ‘ரிக்‌ஷா’ என்று சொன்னால், மகன் ‘ரிஷ்கா’ என்று சொல்கிறான். இக்கதை இப்படியே தொடர்ந்துகொண்டிருக்கும்போது, காய்கறி வாங்கப்போன மனைவி சந்தையிலிருந்து வீடு திரும்பிவிடுகிறாள். குடையை மறந்துவிட்டு வந்திருக்கிறாள்.

அதை ‘ரிஷ்கா’வில் போய் எடுத்துக்கொண்டுவருமாறு வாய்தவறித் தன் மனைவியிடம் கூறிவிடுகிறார் கணவர். இவ்வளவுதான் கதை. எவ்வளவோ முயன்றும் அப்பாவால் மகனை ‘ரிக்‌ஷா’ என்று சொல்லவைக்க முடியவில்லை. ஆனால் மகன், அப்பாவை ‘ரிஷ்கா’ என்று சொல்ல வைத்துவிடுகிறான். உலகம் முழுவதும் எல்லா வகுப்பறைகளிலும் இதுதான் நடக்கிறது. ஆசிரியர் ஒன்று சொல்ல, மாணவர் இன்னொன்றைப் புரிந்துகொள்கிறார்.

ஆசிரியர் மாணவரை மாற்ற முனையும்போது, மாணவரும் ஆசிரியரைத் தன் வழிக்குத் திருப்பிப் பணிகொள்ள நினைக்கிறார். இது ஒரு முடியாத சமனாகத் தொடர்ந்து பல நூறு வருடங்களாகக் கல்விக்கூடங்களில் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அரிதாகத்தான் சாக்ரடீஸுக்கு பிளேட்டோவும், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு உ.வே.சாமிநாதரும் கிடைத்தார்கள். ஆசிரியர் - மாணவர் உறவில் அதிசயங்கள் நிகழ வேண்டுமானால், நிறையப் பொறுமையும் பெருங்கனிவும் ஆசிரியர்களுக்கு வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் முன்மாதிரிகளை எடுத்துக்காட்டுவதற்குப் பஞ்சம் நிலவும் ஒரு சமூகத்தில், மாணவர்கள் மட்டும் மகான்களாகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்? பெரிய மாற்றங்களைப் பற்றித் தொலைநோக்குத் திட்டங்கள்வழி அரசாங்கங்கள் சிந்திக்கட்டும். உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஓர் எளிய மாற்றத்தை மட்டும் இங்கே முன்மொழிகிறேன்.

இருபாலரும் பயிலும் கல்லூரிகளில் 50 : 50 என்ற விகிதத்தில் ஆண்களும் பெண்களும் மாணவர்களாகச் சேர்க்கப்பட வேண்டும். இது அனைத்து இருபாலர் கல்லூரிகளிலும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். இருபால் ஆசிரியர்களும் இதே 50 : 50 விகிதத்தில் இடம்பெற வேண்டும். கல்வி நிலையங்களில் மட்டுமாவது, பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கட்டாயம் தரப்பட வேண்டும்.

இதை ஏன் இவ்வளவு வலியுறுத்துகிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக (இருபாலர்) கல்வி நிலையங்களில் கற்பதையும் கற்பிப்பதையும் உறுதிசெய்யாத நிலையில், ஆரோக்கியமான மாற்றங்களைக் கல்விக்கூடங்களில் நாம் எதிர்பார்க்கவே முடியாது. பாலினச் சமத்துவமின்மை என்பதுதான் நமது காலத்தின் ஆகப் பெரும் பிரச்சினை.

எப்படி உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதோ அதேபோலக் கல்லூரிகளிலும் 50 சதவீதத்தைப் பெண்களுக்கு உறுதிசெய்து, இந்த 50 : 50 என்ற சமவிகிதத்தை ஓர் அரசாணையின் மூலம் அங்கீகரித்தால் மட்டுமே பெண்சீண்டல் (ஈவ்டீசிங்), பெண் வெறுப்பு, வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்கள், சாதி-மத மோதல்கள், வீண் வம்புகள், வன்முறை போன்றவற்றைக் கல்லூரிக்குள்ளும் கல்லூரிக்கு வெளியிலும் ஓரளவுக்கேனும் நம்மால் நிறுத்த முடியும்.

நமது கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் பயிற்றுமுறையிலும் இன்னும் எவ்வளவோ மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இக்காலத்தில் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய மாற்றமாக இந்தச் சமவிகிதத்தைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் பால் சமத்துவத்தைப் பெரியார் பேசாத நாளே இல்லை.

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான சமூகவியல் அறிஞர்களும் உளவியலர்களும் பால் சமத்துவமே ஒற்றுமைக்கும் இணக்கத்துக்கும் ஒரேவழி என்பதில் ஒத்த கருத்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில், அடிக்கடி மாணவர்கள் மோதல்களில் ஈடுபடும் சில பெருநகரக் கல்லூரிகளில் 50 : 50 என்ற இந்தச் சமவிகிதத்தைக் கண்டிப்பாக அமல்படுத்தினால், அடுத்த வருடம் முதலே சிறந்த நடத்தை மாற்றங்களை மாணவர்களிடம் எதிர்பார்க்கலாம். பிற மாற்றங்கள் யாவும் படிப்படியாகத் தாமே வந்துசேரும்.

- கல்யாணராமன், எழுத்தாளர். தொடர்புக்கு: sirisharam73@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in