Published : 08 Jun 2022 07:47 AM
Last Updated : 08 Jun 2022 07:47 AM

சொல்... பொருள்... தெளிவு | பணவீக்கம்

பணவீக்கம் (Inflation): விலையின் பொது அளவு தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் நிலையைப் ‘பணவீக்கம்' என்ற சொல் குறிக்கிறது.

வேறு வேறு: ஒருசில பொருட்களின் விலை உயர்வு பணவீக்கம் ஆகாது. பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வே பணவீக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

விரும்பத்தக்கது: பொதுவில், பணவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதும் விரும்பத்தக்கதும் ஆகும்.

அளவீடுகள்: இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டெண், நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ஆகியவற்றின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளின் சராசரி விலையிலிருந்து இந்தக் குறியீட்டெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சதவீதம்: எண்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டாலும் பணவீக்கம் சதவீதமாகவே குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆண்டு: முந்தைய ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கம் அளவிடப் படுகிறது. வாராந்திர அளவிலும் பணவீக்கம் முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் வகைகள்: சந்தைத் தேவைகளின் காரணமாக உருவாகும் பணவீக்கம், உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக உருவாகும் பணவீக்கம் ஆகிய இருபெரும் வகைமைகளே நீண்ட காலமாகக் குறிப்பிடப்பட்டுவந்தன.

நவீன வகைகள்: ஒற்றை இலக்கத்திலான பணவீக்கம் ஊர்ந்துசெல்லும் பணவீக்கம் என்றும், இரட்டை இலக்கத்திலான பணவீக்கம் பாய்ந்துசெல்லும் பணவீக்கம் என்றும் மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்படும் பணவீக்கம் அதிஉயர் பணவீக்கம் என்றும் தற்போது வகைப்படுத்தப்படுகின்றன. அதிஉயர் பணவீக்கமானது, உள்நாட்டுப் பணமதிப்பின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்கின்ற சூழலைக் குறிக்கிறது. உதாரணம், இலங்கை.

விலையின் நிலைத்ததன்மை (Price stability): பணவியலின் (monetary policy) முதன்மை இலக்கே விலை உறுதித்தன்மைதான் என்று வழிகாட்டியவர் பொருளியல் மேதை கீன்ஸ். இந்தக் கோட்பாடு, அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் அரசுக் கொள்கையாக ஏற்கப்பட்டது.

விமர்சனங்கள்: விலை உறுதிப்பாடு குறித்த விமர்சனங்களும் உண்டு. விலைவாசி உயர்வதற்குப் பணவியல் கொள்கை மட்டுமே காரணமாவதில்லை, நீண்ட காலமாக விலை உயராதிருந்தால் அது முதலீடுகளுக்கு ஊக்கமளிக்காது, அந்நியச் செலாவணி முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகளுக்கு இது பொருத்தமான கொள்கையாக இருக்க முடியாது என்பது போன்ற விமர்சனங்கள் அவற்றில் முக்கியமானவை.

பணவியல் கட்டுப்பாட்டுக் கருவிகள்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன் கட்டுப்பாடு, பண மதிப்பிழப்பு, புதிய பணத்தாள்களை அச்சிடுதல் ஆகிய பணவியல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. பணவியல் கொள்கை சார்ந்த அதிகாரங்களும் பொறுப்புகளும் மைய வங்கியான பாரத ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.

நிதியியல் கட்டுப்பாட்டுக் கருவிகள்: அரசின் கூடுதல் செலவுகளைக் குறைப்பது, நேரடி வரிவிதிப்பை அதிகரிப்பது, மறைமுக வரிவிதிப்புகளைக் குறைப்பது, உபரி பட்ஜெட் முறையைப் பின்பற்றுவது ஆகியவை அரசுத் தரப்பிலான நிதியியல் (fiscal) கட்டுப்பாட்டு முறைகளாகும்.

கடன் கட்டுப்பாடு: (Credit control) பணப் புழக்கம் அதிகரித்துப் பணவீக்கம் நிலவுவதாக மைய வங்கி உணர்ந்தால், வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது. இதனால், கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி வீதத்தில் கடன் வாங்க முன்வருவதில்லை. விளைவாக, பண்டங்களின் தேவை குறைந்து அவற்றின் விலையும் குறைகிறது.

வங்கி வட்டி வீதம்: (Bank Rate) பாரத ரிசர்வ் வங்கி, எந்த வட்டி வீதத்தில் வணிக வங்கிகளுக்கு அவற்றின் கடன் பத்திரங்களுக்கு எதிராகக் கடன் வழங்குகிறதோ அந்த வட்டி வீதம், வங்கி வட்டி வீதம் எனப்படுகிறது.

திறந்த சந்தை நடவடிக்கைகள்: (Open market operations) பணவீக்கத்தின்போது மைய வங்கி தன் கையிலுள்ள அரசுக் கடன் பத்திரங்களை விற்கிறது. அதை வாங்கும் வணிக வங்கிகளின் பணக் கையிருப்பு குறைகிறது; இதனால், பொதுமக்களுக்கு அளிக்க வாய்ப்புள்ள கடனளவும் குறைகிறது.

பண வாட்டம்: (Deflation) பணவீக்கத்துக்கு நேரெதிரான நிலை இது. மிகவும் அரிதாகவே நிகழக்கூடியது. பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இது விரும்பத்தக்கது அல்ல. பணப்புழக்கம் குறைந்தால் மத்திய வங்கி, வங்கி வட்டி வீதத்தைக் குறைக்கிறது. கடன் வாங்குபவர்கள் தங்கள் முதலீட்டை அதிகரிக்கின்றனர். விளைவாக, வேலைவாய்ப்பும் மக்களின் வருமானமும் கூடுகிறது.

தொகுப்பு: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x