Last Updated : 08 Jun, 2022 07:38 AM

 

Published : 08 Jun 2022 07:38 AM
Last Updated : 08 Jun 2022 07:38 AM

தலைமுறைகளைக் கடந்த சுற்றுச்சூழலுக்கான குரல்

சுற்றுச்சூழல் எப்படி நம் வாழ்க்கையின் மையமாக இருக்கிறது என்பதை நவீன ஆய்வுகளின் துணையுடன் மட்டுமல்லாமல், மரபு சார்ந்த அறிவின் அடிப்படையிலும் கவனப்படுத்தியதில் ‘டவுன் டு எர்த்’ இதழின் பங்கை மறுக்க முடியாது!

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, எப்படி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் செயல்பட்டுவந்தவர் அனில் அகர்வால். 1982-ல் ‘The State of India's Environment - A Citizens' Report’ என்கிற பெயரில் சுற்றுச்சூழல் பார்வையுடன் கூடிய விரிவான தொகுப்பை 40 ஆண்டுகளுக்கு முன்னரே அனில் அகர்வால் கொண்டுவந்தார். அது ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ என்கிற தலைப்பில் க்ரியா வெளியீடாகத் தமிழிலும் வெளியானது.

1992-ல் ‘ரியோ புவி மாநாடு’ தொடங்குவதற்கு முந்தைய மாதம் அனில் அகர்வாலை ஆசிரியராகக் கொண்டு ‘டவுன் டு எர்த்’ இதழ் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 30 ஆண்டுகளைத் தொடுகிறது ‘டவுன் டு எர்த்’. 2002-ல் புற்றுநோயால் அனில் அகர்வால் மடிந்தார். இதழின் தற்போதைய ஆசிரியர் சுனிதா நாராயண். புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம் இந்த இதழை வெளியிட்டுவருகிறது.

இன்றைக்கு ‘டவுன் டு எர்த்’ இதழின் இணையதளம், இந்தியச் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் தேடப்படக்கூடிய இணையதளமாக உள்ளது. ‘கோபர் டைம்ஸ்’ என்கிற சிறாருக்கான சுற்றுச்சூழல் இதழ், நீண்ட காலத்துக்கு இணைப்பாக வழங்கப்பட்டுவந்தது.

சமீப ஆண்டுகளாக ‘டவுன் டு எர்த்’ வெளியிட்டுவரும் ஆண்டுத் தொகுப்புகளான ‘State of India's Environment’, ‘State of India's Environment In Figures’ உள்ளிட்டவை, உலகப் பசுமை இதழியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக ‘டவுன் டு எர்த்’ இதழை ஆக்கியுள்ளன.

ஒருபுறம் வேதாந்தா நிறுவனத்தின் விளம்பரத்தைப் பிரசுரித்த ‘டவுன் டு எர்த்’, அதே நிறுவனம் சுற்றுச்சூழலை எப்படி மோசமாகச் சீரழிக்கிறது என்பதையும் சமரசம் செய்துகொள்ளாமல் வெளியிட்டுள்ளது. விளம்பரங்களுக்காக இதழியல் நெறிமுறைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதே அந்த இதழின் அடிப்படைக் கொள்கை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கானது என்கிற தவறான பார்வை இருக்கிறது. அதை உடைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது யாருக்கான வளர்ச்சி என்கிற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னிறுத்தி ‘டவுன் டு எர்த்’ செயல்பட்டுவருகிறது.

காட்டுயிர்களைப் பாதுகாக்கப் பழங்குடிகளைக் காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, பழங்குடிகளையும் இணைத்துக்கொண்டே காட்டுயிர்களையும் காடுகளையும் காக்க முடியும் என்கிற வாதத்தை முன்வைத்த இதழ் ‘டவுன் டு எர்த்’.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது, அரசுக்கு வலியுறுத்துவது மட்டுமில்லை, நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘டவுன் டு எர்த்’ 30 ஆண்டுகளாக உரக்க ஒலித்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x