

பின்வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுபவை. தமிழ்நாட்டில் ஒரு மாணவர்கூட இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 22; 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே; 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்கள்; 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்கள்.
3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இவையெல்லாம் கல்வித் துறை அளித்த தகவல்கள். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் ஜூன் 2, 22 அன்று ஆசிரியர் சங்கங்களுடன் கல்வித் துறை நடத்திய கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லாதிருப்பதற்கு ஒரு பக்கம் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தி, ஆசிரியர் நியமனம் செய்வதில் கூடுதல் சிக்கல்கள் இருப்பது நன்றாகவே புரிகிறது. ஏனென்றால், மேற்சொன்ன கணக்கீடுகளின்படி குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், பள்ளிகளில் குழந்தைகளே இல்லாத சூழலும் இருக்கும்போது அரசுக்கு நாம் பொருளாதாரரீதியாக அழுத்தம் கொடுத்து ஆசிரியர்களை நியமிக்கக் கூறுவது சரியல்ல என்றே தோன்றுகிறது. எனில், பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலையில் இன்றைய சூழல் இருக்கும்போது, நாம் அடுத்த கட்டமாக வேறு மாதிரியான சிந்தனையை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.
ஒன்று முதல் ஐந்து கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்கலாம். அங்குள்ள ஆசிரியர்களை ஒரே பள்ளியில் நியமித்து வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையைக் கொண்டுவரலாம். அதேபோல, அந்த ஐந்து கி.மீ. சுற்றளவிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு வீடு வரை போக்குவரத்து வசதிகளையும் அரசு செய்துதருவது மிகவும் இன்றியமையாதது. இல்லையெனில், தூரம் காரணமாகவே குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பார்கள். இடைநிற்றல் ஏற்படும். இவ்வாறு சிந்தித்தால் மனித உழைப்பு விரயம், பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சமாளிக்கலாம். அரசுப் பள்ளிகளின் தரமும் காப்பாற்றப்படும்.
தனியார்மயக் கல்வி தலைவிரித்து ஆடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தொடர்ந்து ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவும்போது நாம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில் நியாயம் இல்லை. குழந்தைகளுக்குச் சமவாய்ப்பு, சமமான கல்வி கொடுப்பதற்கு நாம் திட்டமிடுவது அவசியமெனில், அருகருகே அமைந்துள்ள அரசுப் பள்ளிகளை ஒன்றிணைப்பதுதான் தற்போதைய தேவை. இதற்காகப் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள பள்ளிகளுக்குத் தனியே ஆசிரியரையும் நியமிக்க முடியாமல் அவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு, மின்சாரம், குடிநீர் வசதி, நூலகம் என்று எல்லா வளங்களும் தனித்தனியாகப் பல பள்ளிகளில் வீணாகிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை நாம் ஒரு பள்ளிக்குக் கொண்டுவரும்போது குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் நிறைவாக இருக்கும்.
கட்டிடங்கள் கட்டுவதற்கோ இதர செலவினங்களுக்கோ தேவையான நிதிப் பங்கீடு ஒரே பள்ளிக்கு வரும்போது, தரமான பல முன்னெடுப்புகளை அந்தப் பள்ளியில் மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் வகுப்பறை, வகுப்பறைக் கட்டமைப்பு, தளவாடப் பொருட்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானம், நூலகம் இப்படி நிறைய வசதிகளை ஒரு பள்ளியில் அதிகக் குழந்தைகளுக்குக் கொண்டுசேர்க்க முடியும்.
இதை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டினால் தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக இருக்கும். தமிழகத்துக்கான புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவைத் தற்போது நியமித்திருக்கிறார்கள். அவர்களும் இதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியில், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி தரப்பட வேண்டுமானால், இந்த முன்னெடுப்பு மிக உதவியாக இருக்கும்.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் கல்வி அலுவலர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு அரசே 25% மாணவர்களை அனுப்பி வைத்த பிறகு, பள்ளிகள் அமைந்துள்ள கிராமங்களில் மாணவர் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பே கிடையாது. அரசு இதை உடனடியாக ஆய்வுகூடச் செய்துபார்க்கலாம். தனியார் பள்ளிகளைத் திறக்கத் திறக்க, அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லாதிருக்க, எப்படி மாணவர் சேர்க்கையை நம்மால் எதிர்பார்க்க முடியும்?
ஆகவே, மாற்றுத் திட்டமிடலுக்குப் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும் என்று நாம் சிந்திக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்களைச் சந்தித்து களச் சூழலை விளக்கினால், அவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். நகரங்களைக் காட்டிலும் கிராமப் பகுதிப் பள்ளிகளில்தான் தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
எனவே, குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டுமெனில், பெற்றோர்கள் மாற்றுச் சிந்தனைக்கு செவிமடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்தந்தப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயலாக்கத்துக்குக் கொண்டுவரலாம். இதனால் ஆசிரியர்களுக்கும் பணிக்குப் பாதகமில்லை. அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் பள்ளிகளும் ஆசிரியர் பற்றாக்குறையின்றி விளங்கும். தரமான கல்விக்கும் வழிகோலுவதற்கு இயலும். எல்லாக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் கிடைப்பார்கள். அரசும் கல்வித் துறையும் மனம்வைக்க வேண்டும்.
- சு. உமாமகேஸ்வரி, கல்வியாளர். தொடர்புக்கு: uma2015scert@gmail.com