

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேளாண் வளர்ச்சியில் தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு கொள்கை முடிவுகளை வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை இரண்டு ஆண்டுகளாகத் தாக்கல்செய்துவருவதன் மூலம், வேளாண்மை என்பது நலிவடைந்த தொழில் என்கிற அச்சத்திலிருந்து விடுபட்டு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
நடப்பாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரி முறையை அமல்படுத்தியுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஐவகை நிலங்களையும் உள்ளடக்கி மண்சார்ந்த பயிர்களைப் பருவ காலத்துக்கு ஏற்பப் பயிரிட்டு அதனை ஊக்கப்படுத்தவும், சந்தைப்படுத்துவதற்குமான வகையில் சிறப்பு மண்டலங்களையும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறுதானியங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடிசெய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றுக்கான சிறப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது, காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீர் திறக்கப்பட்டு, சாகுபடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஆறுகள், பாசனக் கால்வாய்கள் தூர்வாருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களைக் கொள்கைரீதியாகத் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததோடு மட்டுமல்லாமல், திருவாரூரை மையப்படுத்தி, அதற்கான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும், நாகப்பட்டினம் முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை ‘வேளாண் தொழில் வடபெருவழிச் சாலை’ என அறிவிக்கப்பட்டு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கான கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இவ்வாறாகப் பல வகைகளில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொழில்நுட்பத் திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ள அதேவேளையில், சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இன்று கேள்விக்குறியாக இருப்பது விலையும் சந்தையும்தான். எனவே, சந்தைப்படுத்துவதற்கான வகையில் புதிய லாபகரமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும்.
மிகை உற்பத்திக் காலத்தில் உற்பத்திப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய துயரம் ஏற்படுகிறது. உற்பத்திக் குறைவான காலத்தில், செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திப் பதுக்கல்காரர்களும் இடைத்தரகர்களும் கொள்ளை லாபம் அடித்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதோடு, மக்கள் வயிற்றிலும் அடிப்பது தொடர்கிறது.
விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை கேட்டுப் போராடிய விவசாயிகளுக்குப் பிரதமர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், விரைவில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான குழு பரிந்துரை அளிக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். விவசாயிகளோடும் மக்களோடும் நேரடித் தொடர்பில் இருப்பவை மாநில அரசுகளே. மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற அக்கறையும் பொறுப்புணர்வும் ஏற்பட்டதால்தான் தமிழகத்தில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வேளாண் விற்பனைப் பிரிவு துணை இயக்குநர் தலைமையில் சந்தைப்படுத்துவதற்கான குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவில் சிறு-குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் என்ன பயிரிடப் போகிறோம் என்பதை முன்கூட்டியே இக்குழுவில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவுசெய்துகொள்ளும் விவசாய உற்பத்திப் பொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலையைவிட குறையாமல் கொள்முதல் செய்வதற்கான உறுதியை வணிக நிறுவனங்கள் உத்தரவாதமளிக்க வேண்டும்.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பொருட்களைச் சிறு-குறு தொழில்கள் முதலீட்டாளர்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து ஏற்றுமதி செய்வதற்கான சிறு தொழிற்சாலைகளையும் உருவாக்கி, இடைத்தரகர்களின் ஆதிக்கமின்றி சந்தைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சந்தை ஒப்பந்தச் சாகுபடிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்து நிறைவேற்றுவதுதான் விவசாயிகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும்.
தமிழகத்தில் கிராமங்கள்தோறும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு-குறு முதலீட்டாளர்களை இணைத்து விவசாயிகள் - உற்பத்தியாளர் குழுக்களை அரசே ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.
அவ்வாறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்திசெய்யும்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். நெல் சாகுபடிக்கு மட்டுமே தமிழ்நாட்டில் கொள்முதலுக்கான அங்கீகாரம் இருப்பதால், அதனை மட்டுமே அதிகம் சாகுபடி செய்கிற நிலை தமிழகத்தில் தொடர்வதால்தான் மிகை உற்பத்திக் காலத்தில் கொள்முதல் செய்வதில் பல்வேறு தொல்லைகளை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். மேலும், அரசும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் பல இழப்புகளைச் சந்திக்கின்றன.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும் உரிய காலத்தில் அறுவடைசெய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி, சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளையும் ஆலை உரிமையாளர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். சீனிக்கு (வெள்ளைச் சர்க்கரை) மாற்றாக, கலப்படம் இல்லாத நாட்டு வெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஆர்வமும் தேவையும் மக்களிடம் அதிகம் உள்ளது. ஆகவே, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒன்றிணைத்துக் கூட்டுறவுத் துறை மூலம் நாட்டு, அச்சு, உருட்டு வெல்லம் தயாரிக்கும் சிறு தொழில்களை மேம்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
மருத்துவக் குணங்கள் கொண்ட சிறுதானியங்களை மலைவாழ் மக்கள் உற்பத்திசெய்தாலும், அவர்களுக்கு உரிய விலையும் சந்தையும் கிடைக்காததால் மிகப் பெரிய அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, சிறுதானிய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சிறுதானியங்களை உரிய விலை கொடுத்துக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, சிறுதானியங்களுக்கு மேலைநாடுகளிலும் தேவை அதிகரித்திருக்கிறது. அவற்றை ஏற்றுமதி செய்யும்போது சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் மலைவாழ் விவசாயிகளுக்கும் பெரிய வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறாக, சந்தை ஒப்பந்தச் சாகுபடித் திட்டத்துக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்றுக் கொள்கை நிலையில் மாற்றம் கொண்டுவந்து, அதனை நடைமுறைப்படுத்தினால் விவசாயிகள் மேம்பாடு அடைவார்கள்; வருவாய் பெருகும்; தமிழகத்தால் பொருளாதார வளர்ச்சியையும் எட்ட முடியும். வேளாண்மைப் பொருளாதாரம்தான் நம்பிக்கையான பொருளாதாரம். இந்தியாவின் உணவுத் தேவை என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் கிட்டத்தட்ட 80% பேர் சிறு-குறு விவசாயிகளாக உள்ளதால், பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் என்கிற நம்பிக்கையோடு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
- பி.ஆர்.பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு.