புலம்பெயர்தல் எனும் சாபம்

புலம்பெயர்தல் எனும் சாபம்
Updated on
3 min read

ஒரு குழந்தைக்கு வளரும் வயதில் தொடக்கக் கல்வியை வழங்குவது மிக முக்கியமான அடித்தளம்

அந்த 12 வயதுச் சிறுவன் “நான் படிச்சு வாத்தியாராகணும்” என்று ஆர்வம் கொப்பளிக்கச் சொல்கிறான். “ஆனால், வாத்தியாராவதற்கு நான் படிக்க வேண்டும். அது கடவுளின் கையில்தான் இருக்கிறது” என்று அவன் ஏக்கமாய் முடிக்கிறான். ஆந்திரப் பிரதேசத்தின் காகுளத்தில் இருந்து தன் அம்மாவுடன் நீண்ட தொலைவு கடந்து வந்திருக்கிறான் அவன். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவனுடைய அப்பா தற்கொலை செய்துகொண்டார். கடனை அடைக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட அவனுடைய அம்மா, அவனையும் கூட்டிக்கொண்டு வேலை தேடி சென்னை வந்திருந்தார். அவன் படிப்பதற்கு என்று எந்தப் பள்ளியும் இல்லை. அவனும், அவனுடைய வயதை ஒட்டிய வேறு சிலரும் தொழிலாளர்கள் தங்குமிடம் அருகே சுற்றிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி, அவனுடைய அம்மா வேலை பார்த்த நிறுவனம், குழந்தை பராமரிப்பு மையத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அது எந்த முயற்சியும் செய்யவில்லை. பிறகு, எங்கே அது பள்ளியை அமைக்கப்போகிறது? அங்கு தங்கி வேலை பார்த்த குடும்பங்கள், அங்கே வேலை செய்வதற்கான எந்த அதிகாரபூர்வ அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமில்லாமல், சட்டபூர்வமான எந்த அரசு உதவியையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.

கூடுதல் சம்பளம்

சென்னையில் ஐ.டி. காரிடார் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, பிஹார் என்று வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய சொந்த ஊரில், விவசாய வேலையில் கிடைப்பதைவிட இங்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்பதுதான் அவர்கள் இங்கே வருவதற்கான ஒரே காரணம். சுகாதாரமற்ற சூழ்நிலை, பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரே கழிப்பறை, பிளாஸ்டிக் கூரை, செம்மண் தரை கொண்ட வீடு போன்றவைதான் இந்தத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த அடிப்படைத் தேவைகள். அவர்களின் நிலை பற்றி ஆவணப்படம் தயாரிக்கச் சென்றபோது நாங்கள் கண்ட காட்சிகள் இவை!

கவனிப்பாரற்ற குழந்தைகள்

கூலித் தொழிலாளராக இருக்கும்பட்சத்தில், பெற்றோர் இருவரும் வேலை பார்ப்பதன்மூலமே ஒப்பீட்டளவில் ஓரளவு அதிகமான சம்பளம் கிடைக்கும். இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைப் பராமரிப்பில் அவர்களால் அக்கறை செலுத்த முடிவதில்லை. நாங்கள் போன ஒவ்வொரு இடத்திலும்13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், எந்தவிதக் கண்காணிப்பும் இல்லாமல் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழலில் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தப் பகுதிகளில் பல குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள், விபத்துகள் காரணமாகப் பல குழந்தைகள் இறந்தும் போயிருக்கின்றன.

பொது விநியோகத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், அங்கன்வாடிகள் இவர்களுக்குக் கிடைப் பதில்லை. இந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் குழந்தைப் பராமரிப்பு மையங்களும் அதிகமில்லை. அவர்களுடைய பெற்றோரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களும் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை.

அங்கிருந்த குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அவர்கள் நடத்திய வகுப்புகளில் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் பல்வேறு பண்பாட்டுப் பின்புலங்களிலிருந்து வந்திருந்ததும் பிரச்சினையைச் சிக்கலாக்கியது.

மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் - 1979 நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், பல்வேறு வழிகளில் அவர்கள் வருவதன் காரணமாகவும் இவர்களை ஒருங்கிணைப்பதில் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை என்கிறது மாநில அரசின் தொழிலாளர் துறை.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய வேலைச் சூழலுக்கும், அவர்களுடைய தரமான வாழ்க்கைச் சூழ்நிலைக்கும் முதன்மை முதலாளியும், அவருக்குக் கீழ் இருக்கும் ஒப்பந்ததாரர்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறது இந்தச் சட்டம். வீடு, கல்வி, மருத்துவப் பராமரிப்பு போன்ற வசதிகளை, வேலை தரும் முதலாளி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. குழந்தைப் பராமரிப்பு மையம், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டமும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தை பராமரிப்பு மைய வசதியையும், தொடக்கக் கல்வியையும் வழங்குவதில் ஓரளவு இணைந்து செயல்பட்டுவருகின்றன.

முதலாளிகளுக்குச் சாதகம்

அதேநேரம், இந்தச் சட்டத்தின் ஓட்டைகள் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவும் முதலாளி களுக்கு ஆதரவானதாகவும் இருக்கின்றன. புலம் பெயர் தொழிலாளர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒரு குழுவாக, ஒரு ஒப்பந்த தாரருடன், புலம்பெயரும் மாநிலத்தில் பதிவுசெய் திருக்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் வரையறுக் கிறது. இந்தக் கட்டுப்பாடு ஒப்பந்ததாரர்களுக்கும் முதலாளிகளுக்கும் மிகவும் வசதியாக அமைகிறது. தங்களிடம் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கண்ட வரையறைக்குள் வந்துவிடாமல் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

கட்டடத் தொழிலாளர் வாரியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்க்கும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், இதுபோல தொழிற்சங்கங்கள் மூலம் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கப்படுவதை அரசு தடை செய்ததால், அந்த முயற்சி மீண்டும் முறியடிக்கப்பட்டுவிட்டது.

நலத் திட்டங்களை வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகம். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிவதிலும், அவர்களை நலத் திட்டங்களில் சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டப்படவில்லை. அதனால், ஊட்டச்சத்தும் கிடைக்காமல் கல்வியும் கிடைக்காமல் குழந்தைகள் மோசமான நிலையில் உள்ளன. அது மட்டுமல்லாமல், கட்டுமான இடத்திலேயே தங்கும் வேலையாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்த இடத்திலேயே கல்வி வழங்குவது சாத்தியமற்றதாக இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்த, தொழிற்சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இந்தப் பிரச்சினையில் ஈடுபடுத்த வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமுள்ள நகரங்களில் பாதுகாப்பான வீடுகளை அவர்களுடைய தேவைக்காக அரசு கட்டலாம். அப்படிச் செய்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் அடிக்கடி நகர்ந்துகொண்டே இருப்பதைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். கட்டுமானத் துறை மட்டுமல்லாமல், மற்ற தொழில்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் துறையினருக்கு வணிகவரி அல்லது குடியிருப்புத் தீர்வை விதிக்கலாம். அந்தப் பணத்தில் இந்தக் குடியிருப்புகளை உருவாக்கலாம். நடமாடும் பள்ளிகளையும் தங்கிப் படிக்கும் பள்ளிகளையும் உருவாக்கலாம்.

ஒரு குழந்தைக்கு வளரும் வயதில் தொடக்கக் கல்வியை வழங்குவது மிக முக்கியமான அடித்தளம். வாய்ப்பு கிடைத்தால் மட்டும் கல்வியைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை விட்டுவிட முடியாது. வேலைக்காகப் புலம்பெயர்தல் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியக் கருவிதான். அதேநேரம், எதிர்காலத் தலைமுறை மீதான சாபமாக அது மாறிவிடக் கூடாது.

கட்டுரையாளர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு மாணவர்.

- தமிழில்: ஆதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in