வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான் வரலாற்று ஆய்வு: ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான் வரலாற்று ஆய்வு: ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்
Updated on
3 min read

தன் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வ.உ.சி. மேல் பெரிய ஈர்ப்பு. வ.உ.சி.யின் கடிதங்களைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அவருக்கு வயது 17. வ.உ.சி. மீதான அவரது ஆய்வு தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுக்கு இட்டுச்சென்றது. 19-ம் நூற்றாண்டு தொடங்கி 20-ம் நூற்றாண்டின் பாதி வரையிலான தமிழ்ச் சூழல்தான் சலபதியின் ஆய்வுக் களம். வ.உ.சி, பாரதி, புதுமைப்பித்தன், உ.வே.சா, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார் என, சென்ற நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்தியுள்ளார். ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்,’ ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’, ‘Who Owns That Song?: the Battle for Subramania Bharati's Copyright’ உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் சலபதி வழங்கியிருக்கும் பங்களிப்புக்காக அவருக்கு, 2021-ம்ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல்’ விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்திருக்கிறது. இத்தருணத்தில் அவருடன் உரையாடியதிலிருந்து...

கடந்த 40 ஆண்டுகளாக வரலாற்று ஆய்வில் ஈடுபட்டுவருகிறீர்கள். இந்தப் பயணம் வழியாக நீங்கள் வந்தடைந்திருக்கும் புள்ளி என்ன?

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் பதிவு என்ற எளிய புரிதல் சமூகத்தில் நிலவுகிறது. உண்மையில், வரலாற்று ஆய்வை அதன் விரிந்த பொருளில் வாழ்க்கையைப் பற்றிய விசாரணை என்பதாகவே பார்க்க வேண்டும். நிகழ்காலச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான, அதனைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கான, பகுத்தாய்வதற்கான ஒரு வழிமுறைதான் வரலாற்று ஆய்வு. அது ஒரு தனித்த அறிவுப்புலம். அதற்கான நெறிமுறைகளும் முறையியலும் உண்டு. அவற்றைக் கைக்கொண்டே இந்த விசாரணையை நிகழ்த்த முடியும். நாம் வாழும் சமூகத்தை மேம்பட்டதாக ஆக்குவதற்கான முதல் படி இது.

சமூக மாற்றத்தைக் காலவரிசையில் புரிந்துகொள்ள முயல்வதே வரலாற்று ஆய்வு என்றும் சொல்லலாம். ஆனால், சமூக மாற்றம் என்பது சிக்கலானது; எளிதில் மொழிக்குள் வசப்படாதது. இருப்பினும், அதன் அசைவியக்கத்தைத் தொடர்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். நாம் வந்தடையும் முடிவு, காலத்துக்குக் காலம் மாறும். எனவே, அந்தப் பரிசீலனையை ஒவ்வொரு தலைமுறையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுகிற சமூகம், பண்பாட்டு வறுமைப்பட்ட சமூகமாகவே இருக்க முடியும்.

வரலாறு என்பது மறைந்துபோன ஆளுமைகளைத் தோண்டி எடுத்துத் தூக்கில் போடுவதோ, அல்லது அவர்களைத் திருவுருக்களாக மாற்றுவதோ அல்ல. கடந்த காலத்தில் நிகழ்ந்த பிழைகளுக்கு இன்று பழிவாங்குவதற்கு வரலாறு ஒரு கத்தி அல்ல. அனைத்துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான ஒரு சமூகத்துக்கு வரலாறு ஒரு முன்தேவை.

ஒரு ஆய்வு எப்படித் தொடங்குகிறது, எப்படி விரிகிறது, அதற்கான உங்களின் உழைப்பு என்ன என்பன பற்றியெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியுமா?

நான் திட்டமிட்டு வரலாற்று ஆய்வாளனாக ஆகவில்லை. சிறுவனாக இருந்தபோது வ.உ.சி. மேல் பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. கப்பல் ஒட்டிப் பெரிய சாதனையைப் புரிந்த ஒரு பேராளுமையைப் பற்றி ஆவணபூர்வமான, விரிவான வரலாறு இல்லாதது அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடைவெளியை நாம் ஏன் சரிசெய்யக் கூடாது என்று தோன்றியது. இப்படியாகத்தான் வரலாற்று ஆய்வுக்குள் நுழைந்தேன்.

வ.உ.சி.யை மட்டுமே ஆராய்ந்தால் வ.உ.சி.யைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். தேசிய இயக்கம் மட்டுமல்லாமல், தொழிற்சங்க இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், சைவச் சீர்திருத்த இயக்கம் எனத் தம் காலத்து இயக்கங்கள் எல்லாவற்றிலும் வ.உ.சி. பங்காற்றியிருந்தார். அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில்தான் நான் வரலாற்று ஆய்வாளனானேன். இந்த ஆராய்ச்சி பாரதி, புதுமைப்பித்தன், பெரியார், உ.வே.சாமிநாதர் என்று எங்கெங்கோ என்னை இட்டுச்சென்றுள்ளது.

ஒரு ஆய்வைத் தொடங்கும்போது, அது குறித்து நீங்கள் கொண்டிருக்கும் பார்வை, அந்த ஆய்வு முடியும்போது நேரெதிர் திசையில் மாற்றம் அடைந்திருக்கிறதா?

முன்முடிவுகளோடு எழுதப்படுவது வரலாறாக இருக்க முடியாது. ஓர் ஆய்வுக் கேள்வியை, ஒரு கருதுகோளை முன்வைத்துத் தரவுகளைத் திரட்டும்போது, அந்தத் தேடல் எங்கெங்கோ இட்டுச்செல்லும், இழுத்துச்செல்லும். அதற்கெல் லாம் இடம் கொடுக்கும் அதே வேளையில், ஆய்வுக் குதிரையின் லகானையும் விட்டுவிடக் கூடாது. ஓர் ஆய்வுரையை எழுதி முடிக்கும் வேளையில், மேலும் நாலைந்து ஆய்வு முயற்சிகள் உங்கள் மேசையில் இல்லை என்றால், நீங்கள் செய்த ஆராய்ச்சியில் ஏதோ கோளாறு என்று முடிவு செய்துகொள்ளலாம்.

தரவுகளைத் தேடும்போது ஏற்படும் திருப்பங்கள் ஒருபுறமிருக்க, எழுதும்போது நிகழ்பவை தனி வகை. எடுத்துக்காட்டாக, பாரதியின் நூல்கள் நாட்டுடைமையான வரலாற்றை எழுத ஆரம்பித்த வரையிலும், பாரதியின் தம்பி சி.விசுவநாதன் பற்றிப் பலரைப் போலவே எனக்கும் எதிர்மறையான பார்வைதான் இருந்தது. ஆனால், புத்தகத்தை முடித்தபோது அவர் அவலநாயகராக மாறிவிட்டிருந்தார்; அவர்மீது என்னையும் அறியாமல் அனுதாபம் ஏற்பட்டுவிட்டிருந்தது. இப்படிப் பல உதாரணங்கள். ஒருவகையில், வரலாற்று ஆய்வு என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்.

தமிழ்நாட்டில் பொதுச் சமூகத்துக்கும் கல்விப்புல ஆய்வு மொழிக்குமான இடைவெளி ஏன் இன்னும் கடக்கப்படவில்லை?

மேலைநாடுகளில், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் என எந்தத் துறையாக இருக்கட்டும், மக்களுக்காக எழுதுவது என்பது ஒரு பெரிய மரபாக இருந்திருக்கிறது. பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் எல்லாம் மக்களுக்காக எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களில் கல்விப்புலத்துக்குத் தேவையான எல்லா நெறிமுறைகளும் இருக்கும். அதேசமயம், பொது வாசகர்களும் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும்.

இந்தியாவில் கல்விப்புலம் பொதுச் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டிருக்கிறது. ஆய்வு என்பது வெறும் வேலைக்கான வழிமுறையாக அணுகப்படுகிறது. விளைவாக, பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது சமூகத்துக்குச் சம்பந்தமே இல்லாததாக இருக்கிறது. பிறகு எப்படி, கல்விப்புல ஆய்வுகளில் பொதுச் சமூகத்தோடு உரையாடும் மொழி வெளிப்படும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கல்விக்கும் மருத்துவக் கல்விக்கும் தரப்படும் முக்கியத்துவம் சமூக அறிவியலுக்கு இல்லை. மதிப்பெண் குறைந்த மாணவர்கள் படிக்கும் பாடமாக வரலாற்றை மாற்றிவிட்டார்கள். சமூகவியலையும் அரசியல் அறிவியலையும் மானுடவியலையும் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன? தத்துவம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

தமிழில் நடக்கும் காத்திரமான அறிவுசார் விவாதங்கள் கல்வி நிறுவனங்களுக்கு வெளியேதான் பெரிதும் நடைபெறுகின்றன... என்ன செய்வது?

தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

தமிழகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பெரிதும் அயல்நாட்டினராகவே உள்ளனர். தமிழ்ப் பார்வையோடு ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலத்தில் இதில் நான் கூடுதல் கவனம் செலுத்திவருகிறேன். அவ்வகையில் பெரியார் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் பணி தொடர்கிறது. வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதியையும் எழுதிவருகிறேன். இது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அமையும்.

-முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in