மெலட்டூர் பாகவத மேளாவில் ஏழு நாள் உலா!

வள்ளித் திருமணம்
வள்ளித் திருமணம்
Updated on
5 min read

தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது மெலட்டூர். ஊரின் பெயரைச் சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது. பாகவத மேளா என்பது பழமையான நாட்டிய நாடக வகையைச் சேர்ந்தது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் சரிவுக்குப் பிறகு ஆந்திரத்திலிருந்து 16-ம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்கு வந்த 500-க்கும் மேற்பட்டோர் இங்கேயே உருவாக்கி வளர்த்தெடுத்த கலை. இதில் தமிழ் மண்ணின் தொல்கலையின் தடங்களைக் காணலாம். தஞ்சாவூருக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கவிஞர்கள். அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, மாடுகள், நிலங்கள் கொடுக்கப்பட்டன. மெலட்டூரில் பல கலைஞர்கள், அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பரதம் காசிநாதையா, பரதம் வீரபத்ரய்யா என்று பலரையும் சொல்லலாம்.

பாகவத மேளா ஒரு பக்தி மார்க்கமாகவே உருவாகி, தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாகவதர்கள் சூத்ரதாரியாக இருந்து நடத்தியதால் இதற்கு பாகவத மேளா என்ற பெயர் வந்தது. சாலியமங்கலம், சூலமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர், மெலட்டூர் போன்ற ஊர்களில் பாகவத மேளா நடத்தப்பட்டுவந்தாலும் இப்போது சூலமங்கலத்திலும் ஊத்துக்காட்டிலும் நடைபெறுவதில்லை. மன்னார்குடியில் கூட பாகவத மேளா நடைபெற்றது தொடர்பான குறிப்புகள் தஞ்சையின் மோடி ஆவணங்களில் இருப்பதாக அய்யம்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான என்.செல்வராஜ் குறிப்பிடுகிறார். மெலட்டூர் பாகவத மேளாதான் மிகவும் புகழ்பெற்றது. பாகவத மேளா நாடகங்கள் முழுவதும் தெலுங்கில்தான் நடக்கும். பெரும்பாலும் உள்ளூர்க் கலைஞர்கள்தான் இவற்றில் பங்குகொள்வார்கள்.

பிரகலாதன் சரித்திரம்
பிரகலாதன் சரித்திரம்

மெலட்டூர் பாகவத மேளா நாடகங்களை எழுதியவர் வேங்கடராம சாஸ்திரிகள் (1770-1830). தன் கிராமத்தைச் சேர்ந்த பலரை ஒன்றுசேர்த்து இந்த நாடகங்களை அவர் நடத்தியிருக்கிறார். அதற்குப் பிறகு பரதம் நடேசய்யர் நடத்திவந்திருக்கிறார். 1932-ல் நடேசய்யர் காலமான பிறகு இந்த நாடகம் நின்றுவிட்டது. சடங்குகள் மட்டும் தொடர்ந்தன. மெலட்டூர் வி. கணேச ஐயர் ‘மெலட்டூர் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம்’ என்ற அமைப்பை, நடேசய்யரின் சீடர்கள் அனைவரையும் சேர்த்து உருவாக்கினார். இரண்டு ஆண்டுகள் 25 கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து 1941-ல் வரதராஜபெருமாள் கோயில் முன்பு ‘பிரகலாதா சரித்திரம்’ என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். அன்று தொடங்கி இந்த ஆண்டு வரை கடந்த 82 ஆண்டுகளாக, இடையில் கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைப்பட்டதைத் தவிர, தொடர்ச்சியாக இங்கே பாகவத மேளா நடந்துவருகிறது. இந்த ஆண்டு கடந்த மே மாதம் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 7 நாட்கள் பாகவத மேளா நடைபெற்றது.

பிரகலாதன் சரித்திரம், ஹரிச்சந்திரா (இரண்டு நாட்கள்), சீதா பரிணயம், வள்ளித் திருமணம் ஆகிய நாடகங்கள் இந்த ஆண்டு அரங்கேற்றப்பட்டன. இவற்றில் வள்ளித் திருமணம் மட்டும் தமிழ் நாடகம். பாகவத மேளா நாடகங்கள் தவிர தென்னகத்தின் முக்கியமான குச்சுப்புடி, பரதம், மோகினியாட்டக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

எல்லா நாடகங்களிலும் முதலில் கோணங்கி அறிமுகமும் அடுத்தது பிள்ளையாரும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாகப் பாடலுடனும் நடனத்துடனும் அறிமுகப்படுத்தப்படுவார்கள். பிறகுதான் கதை ஆரம்பிக்கும். பாடல்களுக்கும் நடனத்துக்கும் இடையே கொஞ்சம் வசனத்துடன் கதை நகரும். ஆண் பாத்திரங்கள், பெண் பாத்திரங்கள் இரண்டிலும் ஆண்களேதான் நடிக்கிறார்கள்.

அலேக்கியா புஞ்சாலா குழுவினரின் குச்சுப்புடி
அலேக்கியா புஞ்சாலா குழுவினரின் குச்சுப்புடி

பிரகலாதன் சரித்திரம் நாடகம்தான் முதலாவது. அற்புதமான, உக்கிரமான அனுபவத்தைத் தந்த நாடகம் அது. பிரகலாதனாக நடித்த 10 வயது சுதர்சனனுக்கு இதுதான் முதல் ஆண்டு. மழலை மாறாத குரலில் தெலுங்கில் வசனத்தைப் பாடும்போது மேடை ஓரத்தில் அமர்ந்திருக்கும் தேர்ந்த இசைக் கலைஞர்களும் பார்வையாளர்களும் ‘ஆஹா ஆஹா’ என்று மெய்மறந்து ஓசையெழுப்பினார்கள். ஹரி புகழைப் பாடிக்கொண்டிருந்த பிரகலாதனுக்கு போதனை தந்து தனது புகழ் பாடச் செய்வதற்காக இரணியகசிபு (குமார்) முயற்சிசெய்யும்போது சில சமயம் கோபத்துடன் விழிகளை உருட்டுகிறார்; சில சமயம் கெஞ்சியும் கொஞ்சியும் பார்க்கிறார். தனது தொடையில் உட்கார வைத்துக் குழந்தைக்கு புத்திமதி சொல்கிறார். அப்போது குழந்தை வசனத்தை மறந்துவிட இரணியகசிபுவே ஹரியின் புகழைப் பாடும் வசனத்தைக் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்து, அதை உள்வாங்கிக் குழந்தை சொன்னபோது அரங்கமே குபீரென்று சிரித்துவிட்டது. அவ்வளவு அழகிய தருணம் அது! ‘ஹரி நரசிம்மராக அவதாரம் எடுப்பதற்கு முன்பே தனது வெற்றியைக் குழந்தையின் மறதி மூலம் நிலைநாட்டிவிட்டான்’ என்றார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர். இரவு 10 மணிக்குத் தொடங்கிய நாடகம் மறுநாள் காலை 5.30-க்குத்தான் முடிந்தது. இறுதிக் கட்டம் உக்கிரமும் உணர்ச்சிகளும் பொங்கும் தனி நாடகம். நரசிம்மர் வேடமிட்டவரை (கணேஷ்) தூண் போன்ற அமைப்புக்குள் கொண்டுசென்றவுடன் நரசிம்மராக ஆகிவிட்டார்.

இரணியகசிபு பிரகலாதனை அழைத்துக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். தூக்கம், அயர்ச்சி எதுவும் இல்லாமல் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் உறைந்துபோயிருந்தார்கள். பார்வையில்தான் அவர்களின் இதயம் துடித்துக்கொண்டிருந்தது. நரசிம்மர் வெளிவருகிறார். 8 பேர் சேர்ந்து நரசிம்மரைப் பிடித்துக்கொள்கிறார்கள். இரணியகசிபையும் பிடித்துக்கொள்கிறார்கள். மாறிமாறி இருவருக்கும் வாக்குவாதம் அனல்பறக்கிறது. ஒரு கட்டத்தில் இரணியகசிபு மயங்கிவிழ அவருடைய வாளை எடுத்து மேடையில் உள்ள நரசிம்மரிடம் கொடுத்து, வதம் நிறைவுபெற்றது என்று உணர்த்துகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களையும் பற்றி பேராசிரியர் தங்க.ஜெயராமனிடம் பிறகு கேட்டபோது “எல்லோரும் நல்ல நடிப்பைப் பற்றிச் சொல்லும்போது பாத்திரத்தோடு நடிகர் ஒன்றிப்போய்விட்டார் என்று சொல்வார்கள். இங்கே அப்படியில்லை. நரசிம்மராக வருபவர் தன்னை நரசிம்மர் என்றும் இரணியகசிபுவாக வருபவர் தன்னை இரணியகசிபு என்றும் இயல்பாகவே நம்பிவிடுவார்கள். மக்களும் அந்த நேரத்தில் அப்படித்தான் நினைப்பார்கள்” என்றார்.

இரணியகசிபுவாக குமார்
இரணியகசிபுவாக குமார்

ஹரிச்சந்திரா நாடகம் இரண்டு இரவுகள் நடைபெற்றது. நாடிழந்து, கணவன், மகனைப் பிரிந்து வீட்டு வேலை செய்யும் சந்திரமதியாக நடித்த பரதக் கலைஞர் ஸ்ரீகாந்த் ஒவ்வொரு வேலைக்கும் அவ்வளவு நளினமூட்டியிருப்பார். துணி துவைப்பது, சாணியை உருட்டி சுவரில் அடித்து வறட்டி தட்டுவது, ஒட்டடை அடிப்பது என்று எல்லாவற்றையும் பரதத்தில் கொண்டுவர முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறார். சீதா பரிணயம் நாடகம் கவித்துவம் மிளிரும் நாடகம்.

கடைசி நாள் வள்ளித் திருமணம் தமிழில் நடைபெற்றது. மற்ற நாடகங்களைவிட இதற்குத்தான் கூட்டம் அதிகம். அதுவரை தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடிய இசைக் கலைஞர்கள் வள்ளித் திருமணத்தில் குறவஞ்சிப் பாடல் உள்ளிட்ட துள்ளலான பாடல்களைப் பாடிக் கூட்டத்தைக் கட்டிப்போட்டார்கள். பிரகலாதன் சரித்திரத்தில் பரதம் ஆடிய பிரசன்னா வள்ளித் திருமணத்தில் குறவஞ்சி நடனம் ஆடியது பார்ப்பதற்கு அவ்வளவு குதூகலமாக இருந்தது. விஜய், அரவிந்த் உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் இசைக்கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த பாகவத மேளாவுக்குப் பெரும் பலம்.

மெலட்டூரில் இன்னொரு குழுவும் பாகவத மேளா நாடகம் நடத்துகிறது. அந்த அமைப்பின் தலைவர் மகாலிங்கம் எனும் மாலி. நாம் செல்வதற்கு முன்பே அந்தக் குழுவினரின் பாகவத மேளா முடிந்துவிட்டது. நாம் பார்த்த பாகவத மேளாவை நடத்திய ‘மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்க’த்தின் தற்போதைய தலைவர் குமாரிடம் பேசினேன். “எங்கள் தாத்தா கணேச ஐயர் 1941-ல் மெலட்டூர் பாகவத மேளாவுக்குப் புத்துயிர் கொடுத்தார். தாத்தா, அப்பா இருவரும் இந்தக் கலை அழிந்துபோய்விடக் கூடாது என்பதற்காக சொத்தையே விற்றவர்கள். எங்கள் தாத்தா கிட்டத்தட்ட 40 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார். அவருக்குப் பிறகு என் அப்பா தான் நடத்திய மளிகைக் கடையை இந்தக் கலைக்காக விற்றிருக்கிறார். அவருக்குக் கலைமாமணி விருதுடன் கிடைத்த தங்கக் காசையும் ஒரே வாரத்தில் இந்தக் கலைக்காக விற்றுவிட்டார். அப்பாவுக்குப் பிறகு எனது அண்ணன் நடராஜன் இந்தக் கலையை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசென்றார். கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். கரோனா காரணமாக இடையில் இரண்டு ஆண்டுகள் பாகவத மேளாவை நடத்த முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியதில் பெருமகிழ்ச்சி. பாகவத மேளாவை நாங்கள் கலையாக மட்டும் நினைக்கவில்லை. இது ஒரு பக்தி மார்க்கம். எங்கள் தாத்தா இறப்புக்கு முன் எங்களிடம் ஒரு சத்தியப் பிரமாணம் வாங்கினார். ‘என்னுடைய ஐந்து பேரன்களும் உயிருடன் இருக்கும் வரை இந்தக் கலையை நரசிம்ம சுவாமிக்காகத் தொடர்ந்து நடத்த வேண்டும்’ என்றார். அந்த சத்தியப் பிரமாணம்தான் இந்தக் கலை இவ்வளவு காலம் நீடிப்பதற்குக் காரணம்” என்கிறார் குமார்.

கலைகளைப் பொறுத்தவரை சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கும் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுந்திருக்கும் நிலையில் மெலட்டூரில் கலையானது மக்களுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எளிய பின்னணியைக் கொண்ட மக்கள் பலரும், மொழி புரியவில்லையென்றாலும் விடிய விடிய இந்த நாடகங்களைக் கண்டுகளித்ததைப் பார்க்க முடிந்தது. இஸ்லாமியப் பெண்களும் சிறுமிகளும் தொடர்ந்து எல்லா நாட்களும் இந்த நாடகங்களைப் பார்த்தார்கள். டீக்கடையொன்றில் சந்தித்த கலைச்செல்வி, “மெலட்டூர்னு எங்கே போய் சொன்னாலும் பாகவத மேளா நடக்குமே அந்த ஊரான்னு எல்லாரும் கேக்குறப்ப ரொம்ப பெருமையா இருக்கும். எங்க ரத்தத்தோட ஊறிப்போனது பாகவத மேளா. மார்க்கண்டேயன் நாடகத்துல நடிகரு எமன் வேசம் கட்டி வந்தா ‘ஐயோ என்னைக் கூட்டிட்டுப் போயேன்’னு சொல்ல வைக்கும்” என்றார்.

கலைச்செல்வி
கலைச்செல்வி

ஏழு நாட்களும் பாகவத மேளாவில் இடம்பெற்ற நாடகங்கள், நடனங்கள் எல்லாம் அன்பு, அகந்தை, கோபம், வாய்மை, ஈகை, உக்கிரம், காதல், குறும்பு என்று மனித மனதின் அத்தனை இயல்புகளின் வெவ்வேறு வெளிப்பாடு களாக இருந்தன. நாடகீய ஒப்பனை, கண்ணைப் பறிக்கும் உடைகளின் வண்ணங்கள், அவற்றைச் சுமந்துகொண்டிருந்த நடிகர்களின் அளவற்ற நாடகத் தருணங்கள் எல்லாம் மனதை விட்டு நீங்காமல் ரீங்கரித்துக்கொண்டே இருந்தன. மெலட்டூருக்கு விடைகொடுத்துவிட்டு வெட்டாற்றுப் பாலத்தைக் கடக்கும்போது, ஒரு முதியவர் குச்சியை ஊன்றிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி, குச்சியுடனேயே தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுந்தார். அவரையும் எல்லோரையும் என்றும் குளிர்விக்கட்டும் காவிரி!

- தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

படங்கள்: Manifotographs

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in