

மக்கள் தலைவர்களில் ஒருவராக எதிர்க்கட்சிகளாலும்கூட தவிர்க்க முடியாதவர் மு.கருணாநிதி. மாற்றுக் கருத்து கொண்டவர்களாலும் வியந்து போற்றப்படுபவர். மிக இளம் வயதிலேயே ‘வெற்றிகரமான’ திரைப்படக் கதை வசனகர்த்தாவாக நிலைபெற்றவர். அரசியல், இதழியல், திரைப்படம் என்று ஒவ்வொரு துறையிலும் அவரது வெற்றிகள் முன்னுதாரணங்களாகக் கருதப்படும் நிலையிலும், பல்வேறு வகைமைகளில் 173 நூல்களை எழுதியிருக்கும் அவரை ஓர் எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஏற்றுக்கொள்வதில் நிலவிவரும் தயக்கம் விவாதத்திற்குரியது.
ஒரு பக்கம், கருணாநிதியின் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் அரசின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவை என்பதால், அந்த மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்குப் பின் தெளிவான அரசியல் நோக்கங்களும் உண்டு. இன்னொரு பக்கம், கருணாநிதி என்றாலே அவரை அரசியல் தலைவர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடைத்துவிட்டு அவரது இலக்கிய ஆக்கங்கள் அனைத்தும் பிரச்சார ஊடகங்கள், சமகால இலக்கியப் போக்கிலிருந்து விலகி நிற்பவை என்று முத்திரை குத்திவிட தனிநபர் இயக்கங்கள் முயல்கின்றன.
தமிழில் நவீன இலக்கியத்தை முன்வைத்து இயங்கிய இலக்கியச் சிறு குழுக்கள் பெரும்பாலும் திராவிட இயக்கப் படைப்பாளிகளின் மீது ஒவ்வாமையை வெளிப்படுத்தின. இன்று அந்நிலை சற்றே மாறியிருக்கிறது. திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த சிலரும் நவீன இலக்கிய வெளியில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களும்கூட கருணாநிதியின் அரசியல் பங்களிப்புகளைப் பற்றி வியந்து பேசுகிறார்களேயன்றி, அவரது இலக்கியப் படைப்புகளைக் குறித்து கனத்த மௌனத்தையே கடைப்பிடித்துவருகின்றனர். திராவிட இயக்க எழுத்தாளர்களைப் பற்றி பேசினால், நவீன இலக்கியத்தில் தமக்கு வாய்த்த இடம் பறிபோகுமோ என்ற அச்சமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். காரணம் அதுவாக இல்லை என்றால், உண்மையிலேயே கருணாநிதியின் இலக்கியப் படைப்புகள் நவீன இலக்கியத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டன என்றே அர்த்தமாகும்.
இன்றைய நவீன இலக்கியப் போக்கில் ஒரு எழுத்தாளராக கருணாநிதி பின்தங்கிவிட்டாரா என்ற கேள்விக்கு அவரது படைப்புகளை வாசிக்காமல், விவாதிக்காமல் முடிவுக்கு வந்துவிட முடியாது. கருணாநிதியை ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளத் தயங்கி, அதை வெளிப்படையாகவே அறிவிக்கவும் செய்யும் ஒருசில எழுத்தாளர்களின் வாதங்களில் அவரது எழுத்துகளை வாசித்ததற்கான தடயங்களே இல்லை.
கருணாநிதி மட்டுமல்ல, அவரைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க எழுத்தாளர்கள் அவர்களின் அறிவுலகப் பங்களிப்புக்காக நினைவுகூரப்படுவதோ மறுவாசிப்புக்கு உள்ளாவதோ இங்கு நிகழவே இல்லை. இந்தக் குறைபாட்டுக்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளும்கூட ஒரு காரணம். திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து மறுபதிப்பு காண்பதற்கான சூழலை அவர்கள் இதுவரையில் உருவாக்கவில்லை.
கருணாநிதியின் படைப்புகளில் அவரது ஒரு சிறுகதை மட்டும் காவ்யா சண்முகசுந்தரம் வெளியிட்ட தஞ்சை மாவட்டச் சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அதுவும் தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்ற கணக்கில் இருக்கலாம். மற்றபடி, நவீன இலக்கிய வெளியில் பெரிதும் விலக்கிவைக்கப்பட்டவராகத்தான் இருக்கிறார். பரவலாக வாசிக்கப்பட்ட அவரது ‘பொன்னர் சங்கர்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’ போன்ற வரலாற்றுப் புதினங்கள் நவீன இலக்கியப் படைப்புகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவை.
சோழர்களின் கடற்கரைப் பட்டினமான பூம்புகார் குறித்து கருணாநிதி இலக்கியமாகவும் திரைப்படமாகவும் தொடர்ந்து எழுதிவந்ததற்குப் பின்னால் ஒரு தன்னிறைவு பெற்ற பன்மைத்துவ சமூகத்தைப் பற்றிய கனவும் இருந்தது. அதற்கு முன்பே, அத்தகைய ஒரு வரலாற்றுப் பெருமித உணர்வுதான் கல்கியையும் ‘பொன்னியின் செல்வன்’ எழுதத் தூண்டியது. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ ஒரு கலை இலக்கியப் படைப்பாகக் கொண்டாடப்பட்டு, அதன் திரைப்பட ஆக்கத்துக்கு உரையாடல் எழுதுவதே நவீன இலக்கியவாதிகளின் பெருஞ்சாதனை என்று கருதப்படும் நிலையில் பூம்புகார் பற்றிய கருணாநிதியின் ஆக்கங்கள் இங்கு போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்.
அதே சிலப்பதிகாரம். அதே பூம்புகார். அதை ஒருவர் திரைப்படமாகவும் இலக்கியமாகவும் எழுதிய நிலையில் மக்கள் அதைக் கொண்டாடி வரவேற்றாலும் நவீன இலக்கியவாதிகள் அதை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறார்கள். மீண்டும் அவர்கள் அதே நவீன சிலம்பைத்ததான் கையிலெடுத்து இலக்கியம் காண முயல்கிறார்கள். பெருந்தெய்வ வழிபாடுகள் அனைத்துமே நாட்டுப்புறத் தெய்வங்களின் உருமாறிய வடிவங்களே என்று அதில் தங்கள் கருத்தை உட்புகுத்தவும் தயங்குவதில்லை.
அதுவொரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதை புனைவுத் திறத்தால் மறைத்துவிட முடியாது. மக்கள் தெய்வங்களான பொன்னர்-சங்கர் கதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்ததோடு அதைத் திரைப்படமாக்குவதிலும் தனியார்வம் காட்டியவர் கருணாநிதி. ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’ நாவலில் அவர் எழுதிய சில அத்தியாயங்கள், பொதுவில் அரசியல் தலைவர்கள் எழுதத் தயங்குபவை. சாண்டியல்யனுக்கு இணையாக சிருங்கார ரசத்தைத் தனது வரலாற்றுப் புதினங்களில் இழையோட விட்டவர் கருணாநிதி. சில விவரிப்புகள் எழுத்தாளர் ஜி.நாகராஜனுக்கும்கூட இணையானவை.
கருணாநிதியின் சிறுகதைகளும் புதினங்களும் இலக்கியப் படைப்புகளாக மட்டுமின்றி உள்ளுக்குள் வலுவான ஓர் அரசியல் விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவை பிரச்சாரங்கள் என்று ஒதுக்கிவிட முடியாதவை. ஆனால், அரசியலில் தனக்கு விருப்பமே இல்லை என்று விலகிச்செல்லும் விமர்சகர்கள்தான் எது இலக்கியம் என்பதை வரையறுக்க இங்கே முன்னே வந்து நிற்கிறார்கள்.
நவீன இலக்கியம் என்ற வரையறைகள் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். இலக்கிய வடிவங்களும் சொல்முறைகளும் உத்திகளும் மட்டுமே நவீனத்துவத்தைத் தீர்மானிப்பதில்லை. படைப்பாளர்களின் பார்வையிலேயே நவீனத்துவம் மையமிட்டுச் சுழல்கிறது. புராண இதிகாசங்களை மறுபுனைவாக்குவதே நவீனம் என்றாகிவிட்ட இன்றைய நிலையில் கருணாநிதியை மதிப்பிட வேண்டும் என்றால் அவரை வாசிப்பது தவிர வேறு வழியில்லை.
பூம்புகார் குறித்து கருணாநிதி இலக்கியமாகவும் திரைப்படமாகவும் தொடர்ந்து எழுதிவந்ததற்குப் பின்னால் ஒரு தன்னிறைவு பெற்ற பன்மைத்துவ சமூகத்தைப் பற்றிய கனவு இருந்தது.