அமெரிக்கத் துப்பாக்கிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

அமெரிக்கத் துப்பாக்கிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?
Updated on
3 min read

உலகின் பழமையான ஜனநாயக நாடாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றைப் பெரும் சக்தியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமெரிக்காவில்தான் துப்பாக்கி ஏந்திய தனிநபர்களால் சுடப்பட்டுப் பலர் பலியாகும் கொடூர வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன.

கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் யுவால்டே சிறுநகரத்தின் தொடக்கப் பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 19 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்ட பிஞ்சுக் குழந்தைகளைக் காவு வாங்கி, உலகையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்கக் குடிமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமைக்கும் இதுபோன்ற கொடூர வன்முறை நிகழ்வுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தனிநபர்கள் தமது பாதுகாப்புக்காகத் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமையை அமெரிக்க அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் திருத்தம் (1791) அங்கீகரிக்கிறது. 2008-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமையை முதல் முறையாக உறுதி செய்தது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனிநபர்களிடையே துப்பாக்கிப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.

துப்பாக்கி மீதான கட்டுப்பாடுகளை எதிர்க்கும் தரப்பினர், துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுப்பதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது, மேம்படுத்துவது அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை முன்வைக்கின்றனர். ஆனாலும், அமெரிக்காவில் பொது இடங்களில் தனிநபர்களால் சுடப்பட்டு, அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலம் அதிகரித்துவருகிறதே தவிரக் குறையவில்லை.

2018-ல் வெளியான ‘ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே’ என்னும் கணக்கீட்டின்படி, அமெரிக்காவில் 39.3 கோடித் துப்பாக்கிகள் தனிநபர்களிடம் உள்ளன. ஒவ்வொரு 100 அமெரிக்கவாசிகளுக்கும் சராசரியாக 120.5 துப்பாக்கிகள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது யேமன் (100 பேருக்கு 52.8 துப்பாக்கிகள்). அமெரிக்காவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எவ்வளவு இயல்பாக ஊடுருவியிருக்கின்றன என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

‘கன் வயலன்ஸ் ஆர்க்கைவ்’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி அமெரிக்காவில் 2022-ல் மட்டும் 17,198 பேர் துப்பாக்கித் தோட்டாவால் மரணமடைந்துள்ளனர். இவர்களில் சரிபாதிப் பேர் தற்கொலை செய்துகொண்டவர்கள். ஆக, இந்த ஆண்டில் மட்டும் 8,500-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் உயிரிழந்திருக்கிறார்கள். பொது இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்களின் எண்ணிக்கை 213. டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டுக்குச் சில நாட்களுக்கு முன்புதான், நியூயார்க்கின் பஃபலோ நகரத்தில் வெள்ளை இனவெறியனால் சுடப்பட்டுக் கறுப்பினத்தவர்கள் 10 பேர் உயிரிழந்தார்கள்.

19-ம் நூற்றாண்டிலிருந்தே பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய தனிநபர்களால் நிகழ்த்தப்படும் கொலைகள் பதிவாகியுள்ளன. அடுத்த இரு நூற்றாண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 1999-ல் கொலராடோ மாகாணத்தின் கொலம்பைன் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் தங்கள் சக மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 13 பேரைச் சுட்டுக்கொன்று, தாங்களும் தற்கொலை செய்துகொண்டனர். அமெரிக்காவில் 2022-ல் மட்டும் 26-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2018-லிருந்து இப்போது வரை பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 118 முறை நிகழ்ந்துள்ளன.

வேறெந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூர கொலைச் சம்பவங்கள், அவற்றுக்குப் பங்களிக்கும் காரணிகளைத் தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க சட்டங்கள் நிறைவேற்றப்படும். அந்த அளவுக்கு அவற்றுக்கு எதிரான எதிர்வினைகள் உருவாகியிருக்கும். அமெரிக்காவிலும் தனிநபர்களிடம் சரளமாகப் புழங்கும் துப்பாக்கிகளுக்கு எதிரான, வலுவான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், அதேபோல் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு ஆதரவான செயல்பாடுகளும் இவற்றுக்கு இணையாக அதிகரித்துவருகின்றன. இதனால் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்துவதிலும், துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதிலும் குறிப்பிடத்தக்க சட்டம் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.

அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிப்பவர்கள் வரலாறு, சமூகவியல்ரீதியான காரணங்களை முன் வைக்கின்றனர். அமெரிக்கச் சுதந்திரப் போர் காலத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகத் தனித்த ராணுவ அமைப்பு இல்லாத நிலையில், தனிநபர்கள் போர்ப் பயிற்சி பெற்றிருப்பதும் ஆயுதங்களை வைத்துக் கொள்வதும் ஆண்களுக்கான முக்கிய தகுதிகளாகக் கருதப்பட்டன. இத்தகைய தனிநபர் ராணுவத்தினர் அமெரிக்கா சுதந்திர நாடாவதற்கு முக்கியப் பங்கு வகித்தனர்.

மேலும், விவசாயத்துக்காகவும் உணவுத் தேவைக்காகவும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் தனிநபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. ஆனால், அந்நிலையிலிருந்து அமெரிக்கா தொழில்மய நாடாகிவிட்ட பிறகும் தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமை தனிநபர் பாதுகாப்பு என்னும் பெயரில் காப்பாற்றப்பட்டுவருகிறது. தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதால் அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்திருப்பதற்கான தரவுகள் எதுவும் இல்லை.

2012-ல் கனெடிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹூக் என்னும் தொடக்கப் பள்ளியில் 20 வயதான ஆடம் லான்ஸா நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிராக வெகுண்டெழுந்த அன்றைய அதிபர் பராக் ஒபாமா, துப்பாக்கிப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், செனட் அவையில் அவரின் முயற்சிகள் 17 முறை தோற்கடிக்கப்பட்டன.

அமெரிக்க வரலாற்றில் பல அதிபர்கள்-பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்-துப்பாக்கிப் புழக்கத்தையும் விற்பனையையும் கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவை பெரும்பாலும் செனட்டில் தோற்கடிக்கப் பட்டுள்ளன. பொதுவாக, குடியரசுக் கட்சியானது துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வலுப்படுத்துவதற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனாலும், இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசுகளும் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியிருக்கின்றன என்பதே உண்மை.

துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவாகச் செயல்படுவதற்கென்றே ‘நேஷனல் ரைஃபிள்ஸ் அசோசியஷன்’ என்னும் அமைப்பு செயல்பட்டுவருகிறது. தற்போதைய செனட்டில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களில் 19 பேர் இந்த அமைப்பிடமிருந்து 10 லட்சம் டாலர் அல்லது அதற்கு அதிகமான தொகையைத் தேர்தல் பிரச்சார நிதியாகப் பெற்றவர்கள். நிதிவலு மிக்க இந்த அமைப்பும் துப்பாக்கி உற்பத்தியிலும் வணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் பெருமுதலாளிகளும் துப்பாக்கிப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் எந்த ஒரு சட்ட முன்வரைவையும் தோற்கடிக்கும் அளவுக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

யுவால்டே சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “கடவுளின் பெயரால் நாம் எப்போது இந்தத் துப்பாக்கி லாபியை எதிர்த்து நிற்கும் துணிச்சலைப் பெறப் போகிறோம்?” என்று மனம் வெதும்பிக் கேட்டுள்ளார். பத்தாண்டு இடைவெளியில் உலகின் மாபெரும் வல்லாதிக்க நாட்டின் இரண்டு அதிபர்களையே புலம்ப வைத்த இந்தத் துப்பாக்கி வணிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு வன்முறைக்கு எதிரான செயல்பாட்டாளர்களும் பொதுமக்களும் ஒன்றுதிரண்டு ஜனநாயக வழிகளில் போராடி வெற்றிபெற வேண்டும். சக மனிதர்கள்மீதான அன்பும் அறமுமே குற்றங்களுக்கும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அமெரிக்கர்கள் உட்பட அனைவரும் உணர வேண்டும்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in