Last Updated : 15 May, 2016 09:59 AM

 

Published : 15 May 2016 09:59 AM
Last Updated : 15 May 2016 09:59 AM

கம்யூனிஸ்ட்டுகள்: அன்றும் இன்றும்

காதலீன் கோ என்ற அறிஞர் ஒருவர், ஐம்பதுகளில் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் சில ஆண்டுகள் தங்கிக் கள ஆய்வுசெய்து, ‘தென் கிழக்கு இந்தியாவின் கிராமப்புற சமுதாயம்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் தலித்துகள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்கு உதாரணம் தருகிறார். “அந்தக் காலகட்டத்தில் கூலி மிகக் குறைவு, விலைவாசி அதிகம். கூலி உயர்வுக்காக நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. 1947-ல் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வைத்திருந்த நிலச்சுவான்தார் ஒருவர் ஆதிதிராவிடர் தலைவர் ஒருவரைப் பிடித்து, அவரது கையை மரம் ஒன்றில் கட்டி, ஆணியால் அறைந்தார். சில மணி நேரம் கழித்து ஆணியை எடுத்து அவரை விரட்டிவிட்டனர்.”

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கிராமத்தின் ஆதிதிராவிடர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களினால்தான் ஐம்பதுகளில் நிலச்சுவான்தார்களின் கொட்டம் ஓரளவு அடங்கியது என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அன்றைய மதராஸ் மாகாணம் முழுவதும் உழைப்பாளர்களின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலித்தது தோழர்களின் குரலே. அடித்தால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்பதை வலுவாகச் சொன்னவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

எனது நினைவுகள்

அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். சிவப்பு உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தேன். எனது தந்தை காங்கிரஸ் கட்சியில் முக்கியப் புள்ளி. வீடு முழுவதும் இரட்டைக் காளைச் சின்னம் பொறித்து, இரு வண்ணச் சுவரொட்டிகள் அடுக்கப்பட்டிருந்த ஞாபகம். பின்னால் இரண்டு பெரிய அண்டாக்களில் பசை காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்தது. வாசனை பிடித்திருந்தது. ஒரு மாதிரியான ஊதாக் கலரில் பசை இருந்தது. ‘விஷம் கலந்திருக்கிறது, அதில் ஒரு துளி நாக்கில் பட்டால் பரலோகம்தான்’ என்று பாட்டி சொன்னதால் நக்கிப் பார்க்கப் பயமாக இருந்தது. வரவேற்பு அறையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கதராடை அணிந்தவர்கள் அமர்ந்திருந்தனர். நாங்குநேரியில் போட்டியிட்ட எம்ஜி சங்கர், சாத்தான்குளத்தில் போட்டியிட்ட கேடி கோசல்ராம், மற்றும் சோமாயஜுலு, வீரபாகு போன்றவர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்று பின்னால் தெரிந்தது. எனது நினைவில், முரட்டுக் கதராடை ஆட்கள் கன்னத்தைக் கிள்ளியதுதான் தங்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் என்.டி.வானமாமலையின் சார்பில் என் தந்தை வழக்காடியிருக்கிறார்.

பின்னால், என் தந்தையுடன் தேர்தல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, 52 தேர்தலில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்தது என்பதை மறைக்காமல் ஒப்புக்கொண்டார்.

“எல்லோருக்கும் கொடுக்கவில்லை. ஏழைகளுக்குக் கொடுத்தோம். எட்டணா அல்லது ஒரு ரூபாய். மிகச் சிலருக்கு இரண்டு ரூபாய். மக்கள் தேர்தலைத் திருவிழா என்றுதான் நினைத்தார்கள். திருவிழாவின்போது பெரியவர்களிடம் பணம் வாங்குவதை அவர்கள் தவறாகவே கருதவில்லை.”

‘கம்யூனிஸ்ட்டுகளும் பணம் கொடுத்தார்களா?’

‘நாங்கள் அவர்களுக்கு மாஸ்கோவிலிருந்து பணம் வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் எனக்குத் தெரியும், அவர்களிடம் பணம் இல்லை என்று. பலருக்குக் கட்டிய வேட்டியைத் தவிர, மாற்று வேட்டி இல்லாத நிலைமை.’

மக்களுக்காக!

கட்டிய வேட்டிக்கு மறு வேட்டியில்லாதபோதும் மக்களுக்காக மிகக் கொடூரமான அடக்குமுறையையும் கம்யூனிஸ்ட்டுகள் சந்திக்கத் தயாராக இருந்தார்கள். இன்று நாம் நினைத்தே பார்க்க முடியாதபடி அவ்வளவு அடக்குமுறை. கடலூர் சிறையிலும் சேலம் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர்களை ஒடுக்கத் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. சேலத்தில் 11 பிப்ரவரி 1950-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 22 தோழர்கள் உயிரிழந்தனர். அந்தக் கொடுமைகளைக் கண்டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே தலைவர் பெரியார். கம்யூனிஸ்ட்டுகளுடன் தோளோடு தோளிணைந்து திராவிடக் கழகம் போராடியது என்பதை காதலீன் கோவும் குறிப்பிடுகிறார். ஆந்திராவிலும் தெலங்கானா போராட்டத்தின் நிழல் படர்ந்திருந்தது. எனவே, 1952-ல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடைத்த வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறையிலிருந்து வென்றவர்

அன்றைய மதராஸ் மாகாணத்தில் இன்றைய ஆந்திரா, கேரளம், கர்நாடக மாநிலத்தின் துண்டுகள் இருந்தன. மொத்தம் 375 தொகுதிகள். காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. கம்யூனிஸ்ட்டுகள் 62 தொகுதிகளில் வென்றனர். தமிழகத்தில் 11 தொகுதிகளில் வெற்றிகிட்டியது. வென்றவர்களில் முக்கியமானவர்கள் ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், கந்தசாமி மற்றும் பி.ராமமூர்த்தி. 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, கல்கத்தாவில் தலைமறைவான தோழர் ராமமூர்த்தி மூன்றரை ஆண்டுகள் காவல் துறையின் பிடியில் அகப்படாமல் இருந்தார். 1951-ல் இறுதியில் பிடிபட்ட அவர் சிறையில் இருந்தபடியே மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். எதிராகப் பழம்பெரும் தேசபக்தர் சிதம்பரபாரதி காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்டார். பல பிரபலங்களும் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் பி.டி.ராஜன் மற்றும் ஐஎன்டியூசியின் தலைவரான ஜி.ராமானுஜம். கதிர் அரிவாள் சின்னத்துக்கே மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். இந்தியாவிலேயே சிறையில் இருந்துகொண்டு முதல் முதலாக வெற்றிபெற்றவர் தோழர் என்று என்.ராமகிருஷ்ணன் எழுதிய ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட்டுகள் சாதித்தது என்ன?

தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றைப் பற்றி எழுதுபவர்கள், மன்றத்தில் நடந்த விவாதங்கள் கூரியதாகவும் கண்ணியமாகவும் இருந்தது 1952-57 ஆண்டுகளில்தான் என்று நிச்சயம் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்திலேயே நடைபெற்றுக்கொண்டிருந்த சட்டப்பேரவையில் முதல் முதலில் தமிழில் பேசியவர், அதுவும் நிதிநிலை அறிக்கை பற்றி உரை நிகழ்த்தியவர் ராமமூர்த்தி. பண்ணை அடிமைகளாக வாழ்ந்தவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கி, நாகப்பட்டினம் உறுப்பினரான தோழர் வடிவேலுவை தமிழில்தான் பேசுவேன் என்று குரல் எழுப்ப வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகளே.

காதலீன் கோ சொல்கிறார், “8 மணி நேர வேலை, அமாவாசை அன்று விடுமுறை, சாட்டையடி போன்ற வன்கொடுமைகள் நிறுத்தப்பட்டன - இவற்றோடுகூட வேறு சில சுதந்திரங்களும் தலித்துகளுக்குக் கிடைத்தன. தெருவில் உரிமையோடு நடப்பது, ஆசைப்பட்ட துணிகளை அணிந்துகொள்ள முடிவது, பஸ்ஸில் செல்ல முடிவது, சினிமா பார்க்க முடிவது போன்றவை அவை. இதனால்தான் அவர்கள் செங்கொடியை ஒரு விலைமதிப்பில்லாப் பொருளாக மதிக்கிறார்கள்.”

எங்கிருந்து எங்கு வந்துவிட்டார்கள் நமது தோழர்கள்!

இன்றைய நிலை

மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால், மக்கள் அறியும்படி உழைக்க வேண்டிய கட்டாயம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. குறிப்பாக, கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் முன்வரிசையில் இருந்தவர்கள் இன்று பின்தள்ளப்பட்டு ஓரிரண்டு தொகுதிகளுக்குப் பேரம் பேச வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர்கள் உழைப்பில் சுணக்கம் ஏற்பட்டுவிட்டதா? மற்றவர்களிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளால் எப்படிச் சொல்ல முடியும்? வேறுபட்டவர்கள் கூட்டணிக் குட்டையின் சேற்றைப் பூசிக்கொண்டு வந்தால், மக்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வார்கள்?

செங்கொடியை இன்றும் மதிப்பவர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் இவை.

- பி.ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x