இலங்கையில் எல்லோரையும் போய்ச் சேருமா நிதியுதவிகள்?

இலங்கையில் எல்லோரையும் போய்ச் சேருமா நிதியுதவிகள்?
Updated on
2 min read

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகாக பெருங்கடலில் இலங்கை தத்தளித்து மூழ்கிக்கொண்டிருக்கிறது.

ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காதவரை இலங்கைக்குத் தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால், வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமல் இருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

பதவியேற்றதுமே அவர், நாட்டின் செலவுகளுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டும் என்றும், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 சதவீதத்தைத் தாண்டும் என்றும், வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாட்டில் வறுமை நிலையும் வேலைவாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் விவசாயத் துறையும் உரத் தட்டுப்பாட்டால் பாரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பதன் காரணத்தால், கடந்த மாதங்களிலும், இந்த மாதத்திலும் எவ்வித விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, வரும் மாதங்களில் மக்கள் அனைவரும் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டிவரும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்திருக்கிறார். நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு கூற வேண்டிய, முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைக் கூறி, மக்களைக் கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் மக்களைப் பேரச்சத்தில் தள்ளியுள்ளன.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச பதவியில் இருந்தபோது எவ்வாறு பண வீக்கத்துக்குக் காரணமாகும்படி தொடர்ச்சியாகப் பணத்தை அச்சிட்டுக்கொண்டிருந்தாரோ அதே வழியில்தான் தற்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான ரணிலின் பாதையும் இருக்கிறது. எனவே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் பதவியேற்ற பிறகு, பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் ஏதேனும் முன்னேற்றம் உருவாகலாம் என்று மக்களிடம் காணப்பட்ட சிறிய எதிர்பார்ப்பும்கூட தற்போது முழுவதுமாக பொய்த்துப்போயுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையில், இந்திய மக்களால் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட ரூ.200 கோடிக்கும் அதிக மதிப்புடைய உதவிப் பொருட்கள் கடந்த வாரம் கொழும்பை வந்தடைந்தன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு கோரி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அவற்றை மொத்தமாகக் கையளித்துள்ளார். ஏற்கெனவே 350 கோடி அமெரிக்க டாலர் பெறுமதியான பொருளாதார உதவி உள்ளிட்ட நிறைய உதவிகளை இந்தியா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கமும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலையில் இந்தியா, ஜப்பானின் இந்த உதவிகள் மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்திருக்கின்றன.

என்றாலும், இந்த உதவிகள் உரிய விதத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச்சேர்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளும் பொருளுதவிகளும் பெரும்பாலான பொதுமக்களுக்குப் போய்ச்சேர்வதில்லை. சுனாமி, கரோனா சமயங்களிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவிகளும் பொருளுதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களிடம் முழுமையாகப் போய்ச்சேரவில்லை என்பதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

வழமையாக அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறான உதவிகளில் ஒருசிலவற்றைப் பகிர்ந்தளித்துவிட்டு, புகைப்படங்களெடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்து, மொத்த உதவிகளையும் பகிர்ந்தளித்துவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் எளிய மக்களுக்கு அந்த உதவிகள் போய்ச் சேர்வதில்லை.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்திய உதவித் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 11,000 மெட்ரிக் டன் அரிசி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த மாதம் நடுப் பகுதியில் பொதுமக்கள் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டுத் தேடுதல் நடத்தியபோது, பல நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள், உர மூட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள் அந்த வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

அடுத்த முக்கியமான விஷயம், இவ்வாறான உதவிகள் வழமையாக கொழும்பில் மாத்திரமே பகிர்ந்தளிக்கப்படும். அப்படி இல்லாமல் இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம். தலைநகரமான கொழும்பிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் வறிய மற்றும் கஷ்டப் பிரதேசங்கள் நெடுங்காலமாக கவனத்திலேயே கொள்ளப்படாத பல பிரச்சினைகளாலும் நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், அவற்றில் காணப்படும் பஞ்சமும் பட்டினியும் மருந்துத் தட்டுப்பாடுகளும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. கணக்கில் வராத அளவுக்கு மந்தபோஷணம், பட்டினி மற்றும் மருந்தின்மையால் ஏற்படும் மரணங்களும் அப்பகுதிகளில் தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

எனவே, உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் தாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பகிரப்படுகின்றனவா என்பதை, உதவியளித்த நாடுகள் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தமக்கு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற மக்கள் நம்பிக்கை முழுமையாக அற்றுப்போயுள்ள நிலையில், மக்களின் இறுதி எதிர்பார்ப்பாக தற்போதைக்கு வெளிநாட்டு உதவிகளே உள்ளன. அவை ஒழுங்காகவும், நீதமான விதத்திலும் உரிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்தால்தான் நிதியுதவிகளை அளித்த நாடுகள் குறித்த அபிமானமும் நல்லபிப்ராயமும் மக்கள் மத்தியில் தங்கியிருக்கும்.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in