

தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் இப்படி வரையறுத்திருக்கிறது: ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’. இன்றும் தமிழ், தெலுங்கு பேசும் மக்களின் எல்லையாக இருக்கும் திருமலை திருப்பதியில் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு/ பலகோடி நூறாயிரம்/ மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்/ சேவடி செவ்வித்திருக்காப்பு’ என்ற நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்தான் திருப்பள்ளி எழுச்சியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை இயங்காமல் ரங்கநாதரைப் போல் அறிதுயில் கொண்டுள்ளது.
வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை உருவாக்குவதற்காக, பல்கலைக்கழகம் தொடங்கிய 1956-லிருந்தே தமிழ்கூறு நல்லுலகப் பெருமக்களால் பெரிதும் குரல் எழப்பட்டது. அதன் வெளிப்பாடாக அன்றைய மதராஸ் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு ரூ.50,000-ஐ அரசின் சார்பில் தமிழ்த் துறை தொடங்க 1960-ல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 1960-ல் தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.கருணாநிதி தி.மு.க.வின் சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கித் தமிழ்த் துறைக்கு அடித்தளமிட்டார். பேராசிரியர் என்.சுப்பு ரெட்டியாரின் விடாமுயற்சியில், 1960-ல் தமிழ்த் துறை தொடங்கப்பட்டது.
மேலும், 1970-ல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புடன் திருப்பதியில் தமிழ்த் துறை மலர்ந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) ஒப்புதலுடன் இரண்டு இணை பேராசிரியர்களையும் இரண்டு உதவிப் பேராசிரியர்களையும் கொண்டு தமிழ்த் துறை மேலும் ஒரு படி உயர்வு பெற்றது. மீண்டும் தமிழக அரசு ஒரு பேராசிரியரை நியமிக்க இருக்கையை ஏற்படுத்திக்கொடுத்தது. இதனால், தமிழ்த் துறை முழு அளவில் செயல்படத் தொடங்கியது. 110 முனைவர் பட்டம் பெற்ற தமிழ் ஆய்வாளர்களையும், 30 தேசியக் கருத்தரங்குகளையும் யு.ஜி.சி. எனப்படும் மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் 20 திட்டங்களையும் 300-க்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கட்டுரைகளைத் தமிழ்த் துறை வழங்கியுள்ளது. என்.சுப்பு ரெட்டியார் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழறிஞர் இலக்குவனார் தமிழ்ப் பேராசிரியராகச் சிறிது காலம் பணிபுரிந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் முதுகலை தமிழ்ப் பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை ஊக்குவிக்க திருவள்ளுவர் விருது, இராமலிங்க சுவாமிகள் விருது என இரண்டு தங்கப் பதக்கங்களை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கிச் சிறப்பிக்கிறது. பண்பட்ட தமிழ்த் துறை ஆந்திர மாநிலத்திலும் தமிழைப் பரப்பிக்கொண்டிருந்தது. இன்று தமிழ்த் துறையில் பேராசிரியர்கள் வயது முதிர்ந்து பணி ஓய்வு பெற்று 15 ஆண்டுகளாகின்றன. மீண்டும் பணி நியமனம் செய்யப்படவில்லை. அதனால், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு சேர்க்கை நடைபெறவில்லை. தற்காலிகச் சிறப்பு விரிவுரையாளர்களைக் கொண்டு முதுகலைப் படிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது இரண்டு கல்வி ஆலோசகர்கள் மற்றும் ஒரு பகுதி நேர விரிவுரையாளர் என்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிதியுதவியும் தொடரவில்லை.
தமிழ்நாடு அரசு அரசாணையின்படி (அரசாணை எண்: 281, தேதி: 27.11.2013) வருடம் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் தரப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஆனால், அவர்களுக்குத் தொடர்ந்து நிதி வராததால், அவர்கள் யாரையும் நியமிக்கவில்லை. தமிழ்நாடு அரசும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி அனுப்புவதற்கு 2014-லிருந்து எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதே போல் பல்கலைக்கழகமும் தன் சொந்த நிதியிலிருந்து எதையும் செலவு செய்யவில்லை. தமிழ்த் துறையின் தலைவராகக் கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.வி.முரளிதர் இருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு சார்பிலும் நிதி கேட்டுப் பெறப்படவில்லை.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடமிருந்தும் நிதி உதவி கேட்டுப் பெறப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், தற்போது தமிழ்த் துறையானது பேராசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது. அங்கு தற்போது தற்காலிக உதவிப் பேராசிரியர்களைக் கொண்டு தொகுப்பூதிய அடிப்படையில், எம்.ஏ., பட்டப் படிப்பு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில், முழு அளவில் இயங்கிய தமிழ்த் துறை தற்போது நிரந்தரப் பேராசிரியர்களும் நிரந்தர உதவிப் பேராசிரியர்களும் இல்லாமல் ஆராய்ச்சிப் பணிகளும் இல்லாமல் தேக்க நிலை அடைந்துள்ளது.
இந்த உலகத்து இருளை அகற்றுபவை இரண்டு, ஒன்று செங்கதிர், மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்று தண்டியலங்காரம் கூறுகிறது. ஒன்றிய அரசு, ரூ.300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திருப்பதியில் தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின் தெலுங்குத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழுக்கான துறை உருவாக்கப்படவில்லை. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மீண்டும் முழு வீச்சில் தமிழ்த் துறை இயங்க வேண்டுமானால், அதற்கான பேராசிரியர்களையும் துணைப் பேராசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
இவர்களையெல்லாம் நியமிப்பதற்கும், தமிழ்த் துறையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அதிமுக ஆட்சியில் 2014-ல் நிறுத்தப்பட்ட 15 லட்சம் ரூபாய் மானியத்தை 30 லட்சமாக உயர்த்தி திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். ஆந்திர மாநில அரசும் இதற்கான நிதி உதவியை வழங்கிட தமிழ்நாட்டு அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக தெலுங்குத் துறை இயங்கிவருகிறது. மேலும், பல கல்வி நிறுவனங்களில் மொழிப் பாடங்களுள் ஒன்றாகத் தெலுங்கு சேர்க்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, ஆந்திர அரசு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை நீடிக்க உரிய நிதியுதவி வழங்கிட வேண்டும். இந்த வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவும் நிதி வழங்கிட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியெடுக்க வேண்டும். இதனையே இன்றைய தமிழ்க் கூறு நல்லுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்கும் தெலுங்குக்குமான ரத்த உறவு ஆழமானது. அந்த வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியாக வேண்டும்.
- வி.ஆர்.எஸ்.சம்பத், வழக்கறிஞர்,
ஆசிரியர், சட்டக்கதிர்.
தொடர்புக்கு: sattakadir1992@yahoo.co.in