‘சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?’

‘சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?’

Published on

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை வரவேற்கும் அரசுப் பள்ளி ஆசிரியை நான். காலை உணவு ஏன் அவசியம் என்பதைக் களத்தில் தினந்தோறும் பார்த்த அனுபவங்கள் பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு. எனக்கு இதில் கூடுதல் அனுபவங்கள் கிடைத்தன என்றே சொல்லலாம். காரணம், நான் பணிபுரியும் பள்ளி... கந்தகபூமி… பட்டாசு நகரமான சிவகாசி அருகே உள்ள கிராமம். இந்தப் பகுதி முழுவதும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள்.

காலையிலேயே பெற்றோர் வேலைக்குச் செல்லும் நிலை. முதல் நாள் வைத்த கஞ்சிதான் உணவு. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்டது எங்கள் பள்ளி. இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நான். ஒரு நாள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தேன். 12 மணி இருக்கும். தட்டை எடுத்துக்கொண்டு “சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?” என்று கேட்ட குழந்தையை உற்றுநோக்குகிறேன். சீவப்படாத தலை, ஒட்டிய வயிற்றுடன் கண்கள் பசியை உணர்த்துகின்றன. “காலையில சாப்பிடல... அம்மா வெள்ளென வேலைக்குப் போயிட்டாங்க” என்றவனின் குரல் என்னை உலுக்கியது.

“மொத நாள் சாயங்காலம் என்ன சாப்பிட்ட? எத்தன மணிக்கு சாப்பிட்ட?” என்று நான் கேட்க, “7 மணி்க்கு வெங்காயம், மிளகாய் வதக்கி, சோத்துல பிசைஞ்சு சாப்பிட்டேன்” என்று பதில் வந்தது. இரவு உணவின் நேரமும் காலை உணவின் நேரமுமே இடைவெளி அதிகம் எனும்போது, அந்த உணவையே சாப்பிடாமல் வரும் குழந்தைகள் மதியம் வரை எப்படிப் பசியைத் தாங்குவார்கள்? “இன்னும் எத்தனை பேர் காலையில சாப்பிடல?” என்று கேட்டபோது, வகுப்பின் 30 குழந்தைகளில் 20 பேரின் கைகள் உயர்ந்தன. இது இங்கு மட்டுமல்ல. பெரும்பாலான அரசுப் பள்ளிக் குழந்தைகளின் நிலை இதுதான்.

2018-ல் எனக்குக் ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டபோது, அன்றைய ஆட்சியின் கல்வி அமைச்சரிடம் இது சார்ந்து கோரிக்கை விடுத்தேன். பரிசீலனை செய்வதாகக் கூறினார். பிறகு, வகுப்பறையில் காலை உணவு வழங்குதலை நாமே தொடங்கலாமே என்று யோசித்தேன். அன்றிலிருந்து உளுந்தங்கஞ்சியோடு ஆரம்பமானது எங்கள் வகுப்பறையின் காலை உணவுத் திட்டம்.

தினமும் ஏதேனும் உணவோடு வகுப்பறை ஆரம்பமாகும். அடுத்தடுத்த வகுப்புக் குழந்தைகளுக்குமான காலை உணவுத் தேவை ஏற்படவும் ஃபேஸ்புக்கில் இது தொடர்பாகப் பதிவிட்டேன். அதைப் படித்துவிட்டு, சென்னை ‘இரயில் கரங்கள்’ அமைப்பினர் என்னுடன் இணைந்துகொண்டது. அதற்குச் செலவாகும் தொகையைக் கணக்கிட்டு மாதம்தோறும் வழங்கினார்கள். 2019, ஆகஸ்ட் 15 அன்று காலை இணை உணவுத் திட்டம் ஆரம்பமானது. தினந்தோறும் காலை 11 மணி அளவில் கடலை மிட்டாய், சிறுதானிய உணவு வகைகள், கேப்பை ரொட்டி, பால் என 120 குழந்தைகளுக்குமான காலை உணவை வழங்கத் தொடங்கி, அது வெற்றிகரமாகத் தொடர்ந்தது.

‘காலை இணை உணவால் என்ன நன்மை?’ என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் இடை நிற்றல் இல்லை. விடுப்பு இல்லாமல் பள்ளிக்கு வருகிறார்கள். புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் பள்ளிக்கு வருகிறார்கள். ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் கொண்ட மாணவர்களைப் பார்க்கும்போது மனம் நிறைவடைகிறது. இணை உணவுகள் என்பதால் சாப்பிட அதிக நேரம் ஆவது இல்லை.

காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு வழங்கினால் மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும். தினமும் முட்டை வழங்கப்படுவதுபோல் அவர்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவு, தரமான கல்வி, ஆரோக்கியமான மனநிலை இவை அனைத்தும் கிடைக்கும்போது தன்னிறைவான நிலையை நாடு அடையும் என்பது உண்மை. தரமான கல்வியைத் தருவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம். தரமான உணவைத் தருவதற்கு அரசும் முன்வர வேண்டும். வயிற்றுக்கும் செவிக்குமான உணவு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கும் வாய்த்திடட்டும்.

- ம.ஜெயமேரி, ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி, விருதுநகர் மாவட்டம். தொடர்புக்கு: bharathisanthiya10@gmailcom

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in