Published : 30 May 2022 06:53 AM
Last Updated : 30 May 2022 06:53 AM

நமது பிள்ளைகளுக்கு என்ன குறை..?

இந்தியக் கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. நாடெங்கும் 1,18,274 பள்ளிகளில் 5,26,824 ஆசிரியர்கள், 34,01,158 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள உண்மைகள் பேரதிர்ச்சி தருகின்றன.

பள்ளி மாணவர்களிடையே கற்றல்‘நெருக்கடி’ அதிகரித்து உள்ளது. தமதுபாடங்களைச் சரியாக முழுமையாககற்க புரிந்துகொள்ள நமது பிள்ளைகள் திணறு கிறார்கள்.

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என்கிற பாகுபாடு இல்லாமல், கிராமம் – நகரம் என்கிற வித்தியாசம் இன்றி, மொழிப்பாடம், கணிதம், அறிவியல், மொழி அறிவியல் என்று அநேகமாக எல்லாப் பாடங்களிலும் இந்தக் கற்றல் குறைபாடு தெரிகிறது.

‘சராசரி கற்றல்’ உள்ளவர்களின் எண்ணிக்கை 3-ம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்பு வரையில் குறைந்து கொண்டே வருகிறது.

மொழிப் பாடத்தில் ஏறத்தாழ 50% பேர் சராசரி நிலையைத் தொடுகிறார்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் 40%க்கும் குறைவானவர்களே சராசரி நிலைக்கு மேலே இருக்கிறார்கள்.

இந்தக் குறைபாட்டுக்கு என்ன காரணம்..? எப்படிச் சரி செய்யலாம்..?

பெருந்தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக, நேரடி வகுப்புகள் இல்லாமற் போனது பிள்ளைகளின் கற்றல் ஆர்வத்தைப் பாதித்து இருக்கிறது. என்னதான் ‘வசதி’ ஏற்படுத்தித் தந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் நமதுபிள்ளைகளைப் பெரிதாக ஈர்க்கவில்லை. பாரம்பரிய, நேரடி வகுப்புகள் ஏற்படுத்தும் தாக்கம், ஆன்லைன், அஞ்சல் வழி உள்ளிட்ட வேறு எந்த வடிவிலும் கிடைப்பதில்லை.

நாடெங்கும் சுமார் 96% பிள்ளைகள், பள்ளிக்கு வர விரும்புகிறாகள்; 94%பேர் பள்ளியில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். 91% பேர் வகுப்பில் ஆசிரியரிடம் கேள்வி கேட்கிறார்கள். இத்துடன், பிள்ளைகளின் ‘பின்புலம்’ முக்கிய கவனம் பெறுகிறது.

அன்னையர்களில் 25%பேர் பள்ளிப் படிப்பு இல்லாதவர்கள்; பிள்ளைகளில் 48% பேர் பள்ளிக்கு நாள்தோறும் நடந்தே வருகிறார்கள். 9% பேர், பொதுப் போக்குவரத்து பயன்படுத்துகிறார்கள்.

பள்ளிப் பிள்ளைகளின் கற்றல் திறனில் தமிழகம், தேசிய சராசரியை விடவும் 4 புள்ளிகள் குறைவு - நம்ப முடியாததாக இருக்கிறது. இங்கே பல குடும்பங்களில் பெற்றோர் கல்வியறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருந்தும் ஏன் இப்படி...?

பெற்றோர் என்னதான் படித்து இருந்தாலும், நாள்தோறும் தவறாது பாடங்களைச் சொல்லித் தந்தாலும், அம்மா, அப்பாவைப் பிள்ளைகள் தமது ஆசிரியராக ஏற்றுக் கொள்ளவில்லை! அம்மா - அம்மாதான்; ஆசிரியர் - ஆசியர்தான். அவரவர் பங்கு, அவரவர் பாத்திரம்– அவரவருக்கே பொருந்தி வரும்.

ஆசிரியரின் கண்டிப்பு, சக மாணவர்களின் இருப்பு, வகுப்புச் சூழல், பள்ளி நேரம் ஆகியன ஒருவரின் கல்வியில் மிக நிச்சயம் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த அமைப்பு முறைக்கு வெளியே ‘கற்றல் – கற்பித்தல்’ நடைமுறை, திறம்பட செயல்பட சாத்தியமே இல்லை.

கேளிக்கைகளில் அதீத ஆர்வம் – கற்றல் குறைபாட்டுக்கு ஒரு நேரடி காரணி. பள்ளிக்குச் செல்லாத இரண்டு ஆண்டுக் காலத்தில், பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை, சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் முழுதாகத் திசை திருப்பி விட்டன.

பிள்ளைகளின் கவனச் சிதறலைத் தடுத்து, ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கவனத்தைத் திருப்புகிற ஆற்றல் எல்லாப் பெற்றோருக்கும் இல்லை; அத்தகைய மனநிலையை ஏற்படுத்துகிற சமூகச் சூழலும் இல்லை. ‘அறிவுரை’ மூலம் மட்டுமே இளம் மனங்களை மாற்றி விட இயலாது.

கற்றல் குறைபாடு வேரூன்ற, வேகமாகப் பரவ, கேளிக்கைச் செயலிகளுக்கு மாற்றாக, அனைவரும் ‘தேடிச் சென்று’ பயன்படுத்துகிற, அறிவார்ந்த தளம் எதுவும் இல்லாததும் மிக முக்கிய காரணம். இத்தகைய செயலிகளை உருவாக்குவதில் பரவலாக்குவதில் நாம் முழுத் தோல்வி அடைந்து விட்டோம். அந்த வகையில் நியாயமாக, கற்றல் நெருக்கடிக்கு நாம் எல்லாருமே பொறுப்பேற்க வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சி, திட்டமிட்ட சரிவிகித சத்தான உணவு, புதியசிந்தனைகளை ஊக்குவிக்கும் புதுமையான கற்றல் செயலிகள், தேவைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக் கொண்டு சூழலுக்கு ஏற்ப மாணவர்களை ஆன்லைன் மூலம் வழி நடத்துவதில் ஆசிரியருக்கு இருக்கும் பணித்திறன்... இவை எல்லாம் இணைந்து ஒரே நேர் கோட்டில் பயணித்தால் மட்டுமே பிள்ளைகளின் கற்றல் திறனைத் தக்க வைக்க முடியும். இது சாத்தியம் ஆகவில்லை.

மாணவர் – ஆசிரியர் இடையே உள்ளவயது வித்தியாசம் குறித்து யாருமே பெரிதாக ஆலோசிப்பது இல்லை. 10 வயது மாணவருக்கு 50-ஐ கடந்த ஆசிரியர் வகுப்பு எடுக்கிறார். 40 ஆண்டு கால இடைவெளி! இருவரும் இரு வெவ்வேறு தளங்களில் நிற்பவர்கள்.

உலகளாவிய நவீனத் தொழில் நுட்பத்தைக் கைப்பிடியில் கொண்டுள்ள குழந்தைகளுக்கு, இன்னமும் அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனைக் களத்தில் இயங்கும் ஒருவரால் கற்பித்தலில் என்ன ஆர்வத்தைக் கொண்டுவர முடியும்..?

‘கற்போர் – கற்பிப்போர்’ இடையேஉள்ள இந்த வயது வேறுபாட்டை கவனத்தில் கொண்டு இந்த சமன்பாட்டை மாற்றிஅமைக்க முயற்சித்தல் வேண்டும்.சேர்ந்து படித்தல், கூட்டுப் பயிற்சி, பரிசோதனைகள், திறன் போட்டிகள் குழந்தைகளின் அறிவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும். இயன்றவரை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கா மல் ‘வெளி உலகில்’ கற்றலுக்கான வாய்ப்புகள் வழங்கும் போது பிள்ளைகளின் ஆர்வம், அறிவு பெருகும்.

புதிய உபகரணங்கள், புதிய யுக்திகள், புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் கடந்த தலைமுறை பட்டபாடு சொல்லி மாளாது. இதில் இருந்து நாம்நல்லபடியாக, வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். இப்போது..? பள்ளிக்குச்செல்லுதல் மட்டுமே கல்வியின் அடையாளம் ஆகாது; பாடங்களை புரிந்துகற்றல் வேண்டும். இதிலே சமீப காலத்தில் பெரும்சரிவு தெரிகிறது.

பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் புரிகிற விதத்தில், அவர்களுக்குப் பிடித்தமான வழியில் கல்வியைக் கொண்டு சேர்க்கிற பொறுப்பு அரசுக்கு, கல்வியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு உண்டு.

நமது பிள்ளைகள் அறிவார்ந்த பொறுப்பான மக்கள்தாம். அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில், நமது உடனடி கவனம் தேவைப்படுகிறது. சற்று தாமதித்தாலும் சற்று சுணக்கம் காட்டினாலும், சென்ற தலைமுறையினர் பட்ட பாடுகள், கண்ட கனவுகள்.. வீணாகிவிடும். என்ன செய்யப் போகிறோம்..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x