Published : 30 May 2022 07:27 AM
Last Updated : 30 May 2022 07:27 AM

கடலோர எல்லைச் சாமிகளைச் சமவெளி எப்போது ஏற்கும்?

தேசத்தின் முதல் காவல் அரணாக விளங்குபவர்கள், கடலோர மக்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியா போன்ற தீபகற்ப நாட்டில், கடலோர மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்டு, தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமை. தற்போது நிலவிவரும் புவிசார் அரசியலில், கடலோர வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பது, மேம்போக்கான நிர்வாகம் சார்ந்ததாக இல்லாமல், தீர்க்கமான சிந்தனையோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே கடலோர மக்களின் எதிர்பார்ப்பு.

கடலோர வாழ்க்கை என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளாத ஆட்சியாளர்களால் தொடர்ந்து இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், கடலோரத்தின் எல்லை சாமிகளாய் நித்தமும் நின்று தேசத்தைப் பாதுகாக்கிறார்கள் மீனவர்கள். கடந்த காலங்களில் நடந்து முடிந்த போர்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் முதலில் பலியானவர்கள் கடலோர எல்லைகளில் வாழ்ந்த மீனவர்களே என்பது நாம் அறியாததல்ல. பொது விவாதங்களுக்கோ புரிதலுக்கோ எட்டாத மீனவர்களின் இப்படியான உயிர்த் தியாகங்கள், முப்படைகளின் தியாகங்களுக்கு இணையானவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

இயற்கையின் சவால்களை நாளும் எதிர்கொள்ளும் இந்த மக்களின் வாழ்க்கையைச் சமவெளி சமூகம் புரிந்துகொள்ள மறுக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து, ஊர்ப் பஞ்சாயத்துகள் வரை உள்நோக்கத்தோடு, நிர்வாக எல்லைகள் பிரித்தாளப்பட்டு, கடலோரச் சமூகங்களிலிருந்து ஆட்சி அதிகாரத்துக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறது சமவெளி அரசியல்.

தப்பித் தவறி ஒருசில இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோரப் பஞ்சாயத்துத் தலைவர்கள்கூட, செயல்பட முடியாமல் திணறுகிறார்கள். அரசின் எந்த நலத்திட்டமும், இந்தச் சிறு தலைவர்கள் மூலம்கூடச் செயலாக்கத்துக்கு வந்துவிடக் கூடாது என வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள் சமவெளியின் அரசியலர்கள். விளைவு, கடற்கரையில் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும் கடலோடிகளுக்கானதாக இல்லை.

எந்த அரசியல் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் நடந்த ராமேஸ்வரம், வடகாடு மீனவப் பெண் கொலை நெஞ்சைப் பதற வைக்கிறது. குற்றங்களுக்குப் பிந்தைய காலங்களில், சமவெளிச் சமூகங்களுக்குக் கிடைக்கும் ஊடக வெளிச்சமோ, அதனால் விளையும் பொதுஜனப் புரிதலோ, நிர்ப்பந்திக்கப்படும் அரசு அமைப்புகளால் வாக்குவங்கி அரசியலுக்காகவாவது அறிவிக்கப்படும் நிவாரணங்களோ கடலோர மக்களுக்கு என்றுமே இல்லை என்பதுதானே உறுத்தும் உண்மை.

புறக்கணித்தலின் அரசியலால், மீனவர்களின் தியாக வாழ்வு புரிந்துகொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமென்றால், முன்னேற்றம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அரிய கனிமங்களைக் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுத்து, ஏற்றுமதி செய்து பொருளாதாரச் செழுமைக்கு வழிசெய்கிறோம் என்று வந்தவர்களால், தென்பகுதியின் கடலோரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. குரலற்ற சமூகமாய் ஒடுங்கிவிட்ட நிலையிலும், இயற்கையின் இடர்ப்பாடுகள், சமவெளி அரசியல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் போன்ற பல்முனைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் அவற்றைப் புறந்தள்ளி ஏற்றுமதிப் பொருளாதாரப் பங்களிப்பில் முனைப்போடு மீனவர்கள் செயலாற்றுவது ஆட்சியாளர்களை வியக்கச் செய்திருக்கிறது.

கப்பலோட்டமும் மீன்பிடித்தலும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்தும், தட்டிக்கொடுத்தும் ஒருசேர வளர வேண்டிய துறைகள். கடல்வழி வணிகத்தின் தன்மையை அறியாத ஆட்சியாளர்களால் இரு துறைகளும் ஒன்றுக்கொன்று எதிரானதுபோல் சித்தரிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிக்கான துறைமுக அமைவுத் திட்டங்கள் செயலாக்கத்துக்கு வரும்போது, அத்திட்டச் செலவீனத்தில் பாதிப்புக்குள்ளாகப்போகும் கடலோர வாழ்வுக்கான புனரமைப்புச் செலவினங்கள் அக்கறையோடு சேர்க்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். துறைமுக அமைவால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி, அவர்கள் தங்கள் வாழிடம் விட்டுப் புலம்பெயரும் சூழல் வந்தால், அது நாட்டின் இயற்கையான பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை.

சமீபத்திய களஆய்வு ஒன்றில், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததே தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதற்கான காரணம் என மீனவர்கள் குமுறியிருக்கிறார்கள். அவர்களின் குமுறலிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அரசியலில் பிரபலமாக இருக்கும் சமவெளி அரசியலர்களின் திட்டமிட்ட சதியால், தொகுதிப் பிரிப்பால் கடலோர மக்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என உறுதிபடச் சொல்கிறார்கள் மீனவர்கள். தேசத்தின் பூர்விகப் பழங்குடியான மீனவர்கள், இன்னும் அந்தத் தகுதியை அரசிடமிருந்து பெறவில்லை, கடலோரத் தொழில்களிலும் வேலைவாய்ப்புகளிலும், அரசு மற்றும் தனியார் நிர்வாகப் பணிகளிலும், சமவெளி மக்களின் ஆதிக்கமே எப்போதும் இருக்கிறது என்பதுதானே உண்மை.

தேசத்தின் ஏனைய குடிகளுக்கு இருக்கும் அங்கீகாரமும், தொழில் வேலைவாய்ப்பும் எம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டுமானால் பழங்குடிகளாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டு, எமது குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். நேர்மையான, நேரடியான அந்தக் குரலே எங்களுக்கான நியாயத்தை வழங்கி, நிகழ்காலத்தை வளப்படுத்தி, எதிர்காலத்தை உறுதிசெய்யும் என உறுதிபடச் சொல்கிறார்கள் மீனவர்கள்.

எல்லைச் சாமிகளான கடலோர மக்களின் குரல் கவனிக்கப்பட்டு, ஆவன செய்யப்பட வேண்டியது தற்காலத்தின் தவிர்க்க முடியாத தேவை.

- ஆர்.என்.ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

To Read this in English: When will plains accept coastal border-guarding deities?

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x