

புக்கரின் இரு விருதுகளில் புக்கர் இன்டர்நேஷனல் கூடுதல் சிறப்பு. உலகெங்கிலுமிருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் போட்டிக்கு வருவதே முக்கியக் காரணம். இம்முறை இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல் முதல் முறையாக புக்கர் பட்டியலில் இடம்பெற்று, விருதையும் வென்றுள்ளது. கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘ட்டூம்ப் ஆஃப் சாண்ட்’தான் (Tomb of Sand) இந்தப் பெருமையை எட்டியுள்ளது.
கீதாஞ்சலி மணிப்பூரில் பிறந்து உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் ஏற்கெனவே வெளியிட்டுள்ள கீதாஞ்சலியின் ஐந்தாவது நாவல் இது. கணவரை இழந்து, மன அழுத்தத்துக்கு ஆளாகி, படுக்கையில் விழுந்த 80 வயதுப் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. திடீரென ஒரு நாள் காணாமல் போகிறார், பின் கண்டறியப்பட்டு மகள் வீட்டுக்குப் போகிறார். பின்னொருநாள் பதின்வயது நினைவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானுக்குப் (பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியா) போக வேண்டும் என்கிறார்.
சாதாரண கதைக் கருவைக் கூறிய விதம் பெரிதும் கவரத்தக்கது. பெரும் பகுதிக் கதையை, பெயர்சொல்லப்படாத கதைசொல்லி பார்வையாளர் கோணத்தில் சொல்கிறார். இந்தியத்தன்மை (Indianness) என்பதே இந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றதன் முக்கியக் காரணமாக இருக்கலாம். யயாதி கதைபோல் புராணக் கதைகள் பல இடையிடையே வந்து போகின்றன. மாயயதார்த்தமும் வந்துபோகிறது. நமக்குச் சாதாரணமாக இருக்கும் விஷயங்கள் வெளிநாட்டினருக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவன. அம்மா-மகள் உறவு இந்த நாவலின் முக்கிய அம்சம். வயதான தாய், மகளுக்கு மகளாகிறார். ரோஸி என்னும் திருநங்கையுடனான அம்மாவின் நட்பு, மகளுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. அம்மா இருக்கும் வீட்டில் காதலனுடன் உறவுகொள்ளப் பிடித்தமில்லாதது ஒரு நுட்பமான செய்தி. பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்ற அம்மாவின் திடீர் தீர்மானம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
நவீன நகர வாழ்க்கை, தொன்மைக் கதைகள், பெண்ணியம், மதம் இரு நாடுகளைப் பிரித்த கதை, குடும்ப உறவுகள், அழியாத காதல்... இதுபோல் பல இழைகள். நாவலை கீதாஞ்சலி ஒரு மந்திரக் குரலில் சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 700 பக்கங்கள். டெய்சியின் மொழிபெயர்ப்பு அபாரம். டெய்சிபோல் ஒரு தேவதை மொழிபெயர்ப்பாளர் (Angel translator) கிடைத்தால் எந்த விருதையும் வெல்லலாம். விருதுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம். இந்தத் தொகையை கீதாஞ்சலியும் டெய்சியும் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நான்கு கண்டங்களில், 12 நாடுகளிலிருந்து, 11 மொழிகளில் எழுதப்பட்டு, புக்கர் பரிசின் நெடும் பட்டியலில் இடம்பெற்ற 13 நூல்களில் ஏனையவை இவை.
போரா சங்கின் ‘கர்ஸ்டு பனி’ (Cursed Bunny): பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் மாயயதார்த்தம், அதிகற்பனை, அமானுஷ்யம், சர்ரியலிஸம் என்று எல்லா வகைமைகளிலும் கதைகள் இருக்கின்றன. சாபம் என்ற கரு இவர் கதைகளில் அடிக்கடி இடம்பெறும் மையக்கரு.
ஜோன் ஃபோஸின் ‘எ நியூ நேம்: செப்டாலஜி VI-VII’ (A New Name: Septology VI-VII): இறுதிப் பட்டியலின் ஒரே ஆண் ஆசிரியர் இவர். வயதான ஓவியர் ஒருவர், தன் கடந்த காலத்தை அசைபோடும் கதையில் நிகழ்காலமும் வந்து கலக்கிறது. மரணம் இந்த நாவலில் அடிக்கடி பேசப்படும் விஷயம். இந்த எழுத்தாளர் நோபல் பரிசை வெல்லக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மீக்கோ காவகாமியின் ‘ஹெவன்’ (Heaven): உலகமெங்கும் வாசகர்களைக் கொண்ட ஜப்பானிய எழுத்தாளர். இன்றைய ஜப்பானியப் பெண்களின் அகஉணர்வுகளைத் தெளிவாக எழுத்தில் வடிப்பவர் இவர். இந்த நாவல், விவாகரத்து பெற்ற இரண்டு பெற்றோரின் இரு குழந்தைகள் சராசரி மாணவர்களாக இருக்க முடியாததையும், அதனால் மற்ற பள்ளி மாணவர்களால் கேலிக்கு ஆளாவதையும் பற்றிய கதை.
க்ளாதியா பின்யெரோவின் ‘எலினா நோஸ்’ (Elena Knows): அர்ஜென்டினாவில் 2020-ல்தான் கருச்சிதைவு செய்துகொள்வதற்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன் எழுதப்பட்ட இந்த நாவலில் கருச்சிதைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள், மூன்று பெண்களை வெவ்வேறு விதத்தில் பாதிப்பதை திரில்லர் பாணியில் சொல்லும் நாவல்.
ஓல்கா தொகார்ச்சொக்கின் ‘தி புக்ஸ் ஆஃப் ஜேக்கப்’(The Books of Jacob): நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரின் நவீன காவியம். வரலாற்றில் மறக்கப்பட்ட, உண்மையில் வாழ்ந்த ஒருவரைப் பற்றிய நாவல். யூதர்களிலிருந்து ஒருவர் புதிதாக ஒரு மதத்தைக் கொண்டுவரும் முயற்சி குறித்த ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான நாவல்.
ஜோனாஸ் எய்காவின் ‘ஆஃப்டர் த சன்’ (After the Sun): தனிமை, காமம், கூட்டுசேரும் ஆவல் இவற்றை மையக்கருவாகக் கொண்ட ஐந்து நீள்கதைகள் கொண்ட தொகுப்பு இது. கதைகளைவிடக் கதைசொல்லும் உத்தியால் உணர்வுகளை வாசகர்களுக்கு அதிகமாகக் கடத்தும் கதைகள்.
டேவிட் கிராஸ்மனின் ‘மோர் தென் ஐ லவ் மை லைஃப்’ (More Than I Love My Life): இவருடைய மற்றொரு நாவல் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று தலைமுறைப் பெண்கள் நீண்ட காலத்துக்குப் பின் சந்திப்பதும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முயற்சியும் இடையில் யுகோஸ்லாவியாவின் அரசியலையும் சொல்லும் நாவல்.
வயோலைன் ஹ்யூஸ்மனின் ‘த புக் ஆஃப் மதர்’ (The Book of Mother): தாய்மையின் கோருதலுக்கும், பெண்மையின் வேண்டுதலுக்கும் இடையே தனியாகப் பெண்ணை வளர்க்கும் தனிப் பெற்றோரைப் பற்றிய கதை இது. தாய் மீது ஒரு பெண் கொண்டிருக்கும் பார்வை அவர் தாயானதும் மாறிவிடுகிறது.
ஃபெர்னாண்டா மெல்க்காரின் ‘பாரடைஸ்’ (Paradais): மெக்சிகோ எழுத்தாளரான இவரது கதைகள் பெரும்பாலும் அங்கே நடக்கும் வன்முறை, போதைப் பொருட்கள், கடத்தல் பற்றியவை. இந்த நாவல் ஒரு வெள்ளையினச் சிறுவனும் கறுப்பினச் சிறுவனும் தங்கள் அபிலாஷையை நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிடுவது பற்றிய கதை.
சாங் யங் பார்க்கின் ‘லவ் இன் த பிக் சிட்டி’ (Love in the Big City): இன்றைய கொரிய இளைஞர் சமுதாயத்தையும் அவர்களின் சிந்தனைகளையும் கதைகளில் ஆசிரியர் கொண்டுவந்திருக்கிறார். நான்கு வெவ்வேறு கதைகளை, தன்பாலின உறவில் ஈடுபடும் ஒரு மையக் கதாபாத்திரம் இணைக்கிறது.
‘ஹேப்பி ஸ்டோரிஸ், மோஸ்ட்லி' (Happy Stories, Mostly): உண்மையில் இவை மகிழ்ச்சிக் கதைகள் இல்லை, எல்லாக் கதைகளிலும் மெல்லிய சோகம் இழையோடுகிறது. இந்தோனேசிய எழுத்தாளரான இவர், பிற்போக்குச் சிந்தனை கொண்ட சமூகத்தில், தன்பாலின உறவாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சிறுகதைகளாகத் தந்திருக்கிறார்.
பௌலோ ஸ்காட்டின் ‘ஃபீனோடைப்ஸ்’ (Phenotypes): பிரேஸிலின் நிறவெறியை மையமாகக் கொண்ட நாவல். கறுப்பினத் தந்தைக்கும், வெள்ளையினத் தாய்க்கும் பிறந்த இரண்டு மகன்களின் நிறமும் வேறு, சந்திக்கும் பிரச்சினைகளும் வேறு. நாவல் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறிமாறிச் சென்று வருகிறது.
- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர், தொடர்புக்கு: sarakavivar@gmail.com