இடதுசாரிகளின் வெற்றி வியூகம்

இடதுசாரிகளின் வெற்றி வியூகம்
Updated on
2 min read

இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒற்றைவரிப் பிரச்சாரம் நன்கு எடுபட்டது

கேரளத்தில் ஆட்சி செய்த உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் தவறுகளையும் ஊழல்களையும் பட்டியலிட்டு மக்களிடம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறது மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி. அத்துடன் முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மைச் சமூகத்தவர்களுடைய வாக்குகளைத் தங்கள் அணிக்குச் சாதகமாகத் திருப்பியதன் மூலமும் வெற்றியை உறுதி செய்துகொண்டிருக்கிறது. இதற்காக அது கடைப்பிடித்த அரசியல் வியூகம் பலமாக இருந்தது.

இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற அவர்களுடைய ஒற்றைவரிப் பிரச்சாரம் நன்கு எடுபட்டது. அதன் மூலம், ஐ.ஜ.மு. ஆட்சியில் எதுவுமே சரியில்லை என்ற கருத்தை மக்களுடைய மனங்களில் பதியவைத்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுகூட, ஊழல் புகார்கள் அடுக்கடுக்காகக் கிளம்பியது ஆளும் கூட்டணியின் வெற்றியை வெகுவாகப் பாதித்தது. இந்த முறை கேரளத்தில் சற்று வலுவான சக்தியாக உருவெடுத்த பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு எதிராக அதிருப்தி கொண்டவர்களின் வாக்குகளைப் பிரித்துவிடும் அந்த இடைவெளியில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கட்சித் தலைமை நினைத்தது. அது கைகூடவில்லை. பாஜகவும் அதன் புதிய அரசியல் கூட்டாளியான ‘பாரத் தர்ம ஜன சேனா’ (பி.டி.ஜே.எஸ்.) என்ற அமைப்பும் வாக்குகளை அதிகம் பெற்றன. ஆனால், அது காங்கிரஸ் கூட்டணி நினைத்ததைப் போல எதிர்ப்பு வாக்குகளை மட்டுமல்ல காங்கிரஸ் அணிக்கு ஆதரவான வாக்குகளையும் பெற்றது. எனவே, காங்கிரஸின் வீழ்ச்சி தீவிரமடைந்தது.

ஊழல் புகார்களில் உம்மன் சாண்டி

இடதுசாரி அணிக்குக் கிடைத்த வெற்றியானது 2015 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றியின் நீட்சியே. 2010-ல் ஏற்பட்ட தோல்வியை அப்படியே வெற்றியாக மாற்றியதைப் போல, கேரளத்தின் 65% உள்ளாட்சி மன்றங்களை இடதுசாரிக் கூட்டணி அத்தேர்தலில் கைப்பற்றியது. அதற்கடுத்த 6 மாதங்களில் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு அடுத்தடுத்த ஊழல் புகார்களில் ஆழப் புதைந்தது. மதுபான பார் நடத்துவதற்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சிகளுக்குள்ளேயே பலமான கருத்து வேறுபாடுகள் தோன்றின. அத்துடன் மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையாக பார்களை மூடுவதென்று முடிவு செய்துவிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் பார்களை நடத்த அனுமதிப்பதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகக் சில குற்றச்சாட்டுகளும் வெளியாயின. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை அளிப்பதற்கு லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் வெளியாகின. நில விற்பனைகளில் நடந்த ஊழல்களைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம். சுதீரன் முயன்றார். இதனால் அவருக்கும் முதல்வர் சாண்டிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி இத்தேர்தலை ஒற்றுமையாகவே எதிர்கொண்டாலும் சில பிரச்சினைகளில் இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தேர்தல் களத்திலும் எதிரொலித்தது.

மாநிலத்தில் தன்னுடைய அரசு மேற்கொண்ட சமூகநலத் திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்புகளாலும் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் அவற்றால் நேரடியாகப் பலன் பெற்றதாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று உம்மன் சாண்டி நம்பினார். ஏதாவதொரு ஊழல் குறித்து வாரா வாரம் வெளியான பரபரப்பான குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசு மிரள நேர்ந்தது. சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு ஒப்பந்தம் தொடர்பான பேரங்களை அம்பலப்படுத்திய சரிதா நாயர், பாலியல்ரீதியாகவும் தான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய பரபரப்புக் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்கள் தேர்வில் சுதீரனுக்கும் சாண்டிக்கும் ஏற்பட்ட மோதல் உச்சத்துக்கே சென்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமையையே அது தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது. அதன் விளைவுதான் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் தோல்வி. உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த ரமேஷ் சென்னித்தலா இனி காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் வாக்குகள் இடம் மாறின

முஸ்லிம்கள் வாக்களித்த விதமும் இடதுசாரி முன்னணி வெற்றிபெறக் காரணமாக இருந்திருக்கிறது. முஸ்லிம்கள் இடதுசாரிக்கு ஆதரவாகப் பெருமளவு வாக்களித்திருப்பதை வாக்கு எண்ணிக்கை உணர்த்துகிறது. கிறிஸ்தவர்களும் தேவைப்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். வட கேரளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் இடதுசாரி முன்னணி புத்திசாலித்தனமாகச் சில காய்களை நகர்த்தியிருக்கிறது. மலைப்புரத்தில் அது மேற்கொண்ட உத்தியால் முஸ்லிம் லீகுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளே குறைந்துவிட்டன. முஸ்லிம் லீகிடமிருந்து 3 தொகுதிகளை இடது முன்னணி பறித்திருக்கிறது. தன்னுடைய கோட்டையிலேயே ஆதரவை இழந்திருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்தப் பகுதி மட்டுமின்றி பிற பகுதிகளிலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பெருமளவில் இடதுசாரி முன்னணிக்கே வாக்களித்திருக்கின்றனர். திருச்சூர், கொல்லம் மாவட்டங்களில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களே வெற்றி பெற்றிருப்பது இதைக் காட்டுகிறது. அதுபோக காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் எர்ணாகுளத்திலும் இடதுசாரிகள் ஊடுருவியுள்ளனர். பாஜக தலையெடுக்கிறது என்ற அச்சத்தால் சிறுபான்மைச் சமூகத்தவர் இடதுசாரி முன்னணிப் பக்கம் அதிகம் சாய்ந்துள்ளனர்.

பாஜக விரும்பியபடி வாக்குகள் பிரியவில்லை. இருந்தாலும் ஓ.ராஜகோபால் வெற்றி மூலம் முதல்முறையாக சட்டப்பேரவையில் கணக்கைத் தொடங்கி வரலாறு படைத்திருக்கிறது. பாஜகவும் பி.டி.ஜே.எஸ். கட்சியும் சேர்ந்து 17% வாக்குகளைப் பெற்றுள்ளன. 2015 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 14.80%, 7 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் சேர்ந்து இரண்டாம் இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 6 தொகுதிகளில் வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடைபெறவில்லை. எனவே, பாஜகவுடன் இனியும் கூட்டு தொடர வேண்டுமா, வேண்டாமா என்று பரிசீலிக்கும் அவசியம் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in