

ஏழைகளின் வருமானத்தின் பெரும்பகுதி வரியாகவே வசூலிக்கப்படுகிறது
இந்தியப் பொருளாதாரக் கொள்கையில் விநோதமான இரட்டை நிலை நிலவுகிறது. அரசின் வருவாய்க்கு ஏற்ப செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியும் நேர்முக வரி வருவாயை அதிகப்படுத்துவதில் தயக்கமும் அரசாங்கத்தில் உள்ளது. அதனால், ஏழைகளுக்கான சமூக நலத் திட்டச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, பணக்காரர்களுக்கான சலுகைகளை அதிகப்படுத்துவதில் வேகம் காணப்படுகிறது.
பொருளாதாரம் தொய்வாக உள்ளது. நாட்டில் பாதி மாவட்டங்களுக்கு மேல் வறட்சியில் தவிக்கின்றன, தொழில் உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் மந்த நிலை. மக்கள் வேலையும் ஊதியமும் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
வேலைவாய்ப்பைப் பெருக்கக்கூடிய, பணப் புழக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய திட்டங்களுக்குச் சற்று அதிகமாக நிதி ஒதுக்குமாறு கோரினால், நிதியில்லை என்கிறார்கள். பொதுச் செலவை அதிகப்படுத்தினால் பற்றாக்குறை அதிகரித்துவிடும் என்கிறார்கள். உண்மையில், இப்படிச் செலவை அதிகப்படுத்தினாலும் பணவீக்க விகிதம் அதிகரிக்காது என்பதே உண்மை.
தேயும் நேர்முக வரிவசூல்
அரசின் செலவும் வரவும் சரிசமமாக இருக்க வேண்டும் என்றால், வரவை அதிகப்படுத்தியும் செய்யலாமே? ஆனால், வரி மூலம் வருவாயைப் பெருக்குவதில் மத்திய அரசுகள் தொடர்ந்து தவறிவருகின்றன.
‘ஜி-20’ நாடுகளிலேயே இந்தியாவில்தான் மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருமானத்தின் பங்களிப்பு மிகமிகக் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் நபர்வாரி வருமானம் குறைவு என்பதால் அல்ல இந்த நிலை. இந்தியாவைவிடக் குறைவான நபர்வாரி வருமானம் உள்ள நாடுகள்கூட வரி வசூல் மூலம் அதிக வருமானத்தைப் பெறுகின்றன. வரி வருமானத்துக்கும் மொத்த உற்பத்திக்கும் உள்ள விகிதாச்சாரம் இந்தியாவில் 18% ஆக இருக்கிறது.
நிதியமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் வரி வருமானம் அதிலும் குறிப்பாக நேர்முக வரி வருமானம் குறைந்துவருவதைக் காட்டுகிறது. அதைவிடக் கவலை தரும் அம்சம், மறைமுக வரி வருவாய் அதிகரித்துக்கொண்டே போவதுதான். ஏழைகளின் வருமானத்தின் பெரும்பகுதி வரியாகவே வசூலிக்கப்படுகிறது. மேல் தட்டு வர்க்கமும் நடுத்தர மக்களும் தாங்கள் மட்டுமே அதிக வரிவிதிப்பைச் சந்திப்பதாகக் கருதுவது தவறானது. ஏழைகள் வருவாய் முழுவதையும், சில வேளைகளில் கடன் வாங்கிக்கூடச் செலவு செய்கின்றனர். அவர்களுடைய செலவின் பெரும்பகுதி விற்பனை வரி, உற்பத்தி வரி, இறக்குமதித் தீர்வை போன்ற இனங்களிலேயே சென்று அரசுக்கே வருமானமாகிவிடுகிறது. இதற்கு நேர்மாறாக, பணக்காரர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிடுவதில்லை. அந்தச் செலவிலும் பெரும்பகுதி வரியாக அரசுக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. அவர்களுடைய சேமிப்புக்கும் முதலீடுகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
குறையும் நேர்முக வரி வருமானம்
2009 - 10 நிதியாண்டில் அரசுக்குக் கிடைத்த வரி வருவாயில் 60.8% நேர்முக வரிகளிலிருந்து கிடைத்தது. 2012-13-ல் அது 54.2% ஆகக் குறைந்தது. 2015-16-ல் அது 51% என்று தெரிகிறது. வருமானம் அதிகரித்தபோதிலும் கடந்த 2 ஆண்டுகளில் நேரடி வரி வருமானம் உயரவில்லை. 2014-15-ல் நேரடி வரிகள் 6.7% அதிகரித்தன. அதே காலத்தில் மறைமுக வரி வருமானம் 31% அதிகரித்துள்ளது.
அரசின் வரிச் சலுகைகள் பணக்காரர்களுக்கும் நிறுவனங்களுக்கும்தான். எனவே, வரி விதிக்கப் பட்டாலும் அதை முழுதாகச் செலுத்தாமல் வேறு எதிலாவது சேமித்தோ, முதலீடு செய்தோ வரிச்சுமையைக் குறைத்துக்கொள்ள முடியும். ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற சட்டத்துக்குப் புறம்பான முதலீடுகள் அல்லாமல் சட்டபூர்வமாகவும் வரிச் சுமையைக் குறைத்துக்கொள்ள பணக்காரர்களுக்கு வழி இருக்கிறது. தொழில் நிறுவனங்களின் வருமானம் அதிகரித்தாலும் வரி உயர்வதில்லை. நிறுவனங்கள் மீதான சட்டபூர்வ வரி 33.84% ஆக இருந்தாலும் பல்வேறு கழிவுகள், சலுகைகளுக்குப் பிறகு அது உண்மையில் 24.64% தான்.
மிகப்பெரிய தொழில்நிறுவனங்களுக்கு மிகக் குறைவான வரிச் சுமைதான் ஏற்படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக ஈட்டிய நிறுவனங்கள் அளித்த வரி வருவாய் பங்களிப்பு 29.37%. ரூ.500 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பங்களிப்பு 22.88% தான்! இத்தகைய வரிமுறையானது விநோதமான ஏற்றத் தாழ்வுகளையே உண்டாக்குகின்றன. 2014-15-ல் 52,911 நிறுவனங்கள் லாபம் ஈட்டின. அவை பெரும்பாலும் வரியேதும் செலுத்தவில்லை என்கிறார் சமூக முதலீட்டாளர் ரோகித் பராக்.
2010-11-ல் 21.94% வரி செலுத்திய குத்தகை நிறுவனங்கள் 2014-15-ல் வெறும் 1.53% வரி மட்டுமே செலுத்தின. இதே காலகட்டத்தில், கனிமச் சுரங்க நிறுவனங்களின் வரி வருவாய் 32.29% என்ற நிலையிலிருந்து 14.02% ஆகக் குறைந்துவிட்டது.
தொழில் நிறுவனங்களுக்கு அளித்த பல்வேறு சலுகைகளால் 2014-15 நிதியாண்டில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.65,067 கோடி. 2015-16-ல் அதுவே ரூ.68,711 கோடியாக உயர்ந்துவிட்டது.
அரசின் முன்னுரிமை
தனிநபர் வருமான வரி வசூலும் போதாக்கு றையாகத்தான் இருக்கிறது. 2014-15-ல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் 4.86 கோடி. அந்த ஆண்டின் வயதுவந்தோர் எண்ணிக்கையான 80 கோடியில் இது சுமார் 6%. கணக்கு தாக்கல் செய்தோரிலும் சரிபாதிக்கும் மேற்பட்டோர் வரி செலுத்தத் தேவையில்லாதவர்கள். 2012-13-ல் சுமார் 20 லட்சம் பேர்தான் அதிக அளவுக்கு வருமான வரி செலுத்தியவர்கள். இவர்களும்கூடப் பல்வேறு கழிவுகள், சலுகைகளுக்குப் பிறகு செலுத்தியது குறைவுதான். ஆண்டுதோறும் விற்பனையாகும் கார்கள், நுகர்வுப் பொருட்கள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு என்று புரிகிறது. நாடு முழுக்க ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறவர்கள் வெறும் 20,000 பேர்தான் என்றால் நம்பவா முடிகிறது?
வரிச் சலுகையாக அளிக்கப்படும் தொகை அரசுக்குக் கிடைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கும். 2015-16-ல் நேர்முக வரிச் சலுகையாகத் தரப்பட்ட தொகை ரூ.1,28,639 கோடி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.35,754 கோடி. சலுகையாகத் தரப்பட்ட தொகை இத்திட்டத்துக்குக் கிடைத்திருந்தால் 70 கோடி ஏழைப்புற மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும். கர்ப்பிணித் தாய்மார்கள், பிறந்த குழந்தைகளின் நலனுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவைத் திட்டத்துக்கு வெறும் ரூ.15,394 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கூடக் கல்விக்கு ரூ.42,187 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. வரிச் சலுகையாகத் தந்த தொகையை அரசு வசூலித்திருந்தால் இந்தத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்தியிருக்க முடியும்.
நேர்முக வரிகளில் அளிக்கப்படும் சலுகைகளும், வருமானச் சரிவும் ஆளும் கட்சியின் முன்னுரிமையில் இருப்பவர்கள் யார் என்பதைக் காட்டுகின்றன. நியாயமற்ற முறையில் அரசின் நிதி இப்படிப் பலர் வாடவும் சிலர் வாழவும் மட்டும் மடைமாற்றி விடப்பட்டாலும் நாம் பொறுமையாக அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்!
கட்டுரையாளர், புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர்.
தமிழில்: சாரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்.