Published : 26 May 2022 04:42 PM
Last Updated : 26 May 2022 04:42 PM

விதிகளை மீறும் கல்குவாரிகள்: விபத்துகள் நடந்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதா? - ஒரு விரிவான ரிப்போர்ட்

கி.கணேஷ், அ.அருள்தாசன், டி.ஜி.ரகுபதி

தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும்பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்காகவும், வெளிமாநிலங்களுக்கு சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி அருகில் அடைமிதிப்பான்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த மே 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தபோது பாறைகள் சரிந்து விபத்து நடந்தது.

இடிபாடுகளில் சிக்கிய 6 பேரில் 2 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதமே குவாரியை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரியில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்குப்பின் தமிழக அரசு, அப்பகுதி கனிமவளத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறை செயலர் குமார்ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்வோம் என்று வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு சென்னை அருகில் காஞ்சிபுரம் திருமுக்கூடல் அருகில் மதூர் பகுதியில் கல்குவாரி விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த கல்குவாரியில் வெடிவைத்து கல் உடைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவற்றை ஏற்ற லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பாரம் தாங்காமல் மண் சரிந்ததில், ஒருவர் உயிரிழந்தார். வாகனங்களும் மண்சரிவில் சிக்கி சேதமடைந்தன. அந்த விபத்தின் போது, குவாரி தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் தற்போதும் கல்குவாரி பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதிக குவாரிகள் செயல்படும் மாவட்டங்கள்

காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குவாரிக்கும் தனித்தனியாக அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக குவாரி அமைக்கப்படும் நிலம் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.

பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 எக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல் வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்பணிகளின் போது எழும் ஒலி அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால்,
பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. அத்துடன் அதிகப்படியான மரம் சூழ்ந்த மலைப்பகுதிகள், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வெளிமாநிலங்களுக்கு கடத்தல் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கடத்துவது கடந்த 20 ஆண்டுகளாகவே நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிலவற்றை பாதுகாக்கப்பட்ட மலைகளாக யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. இதுபோல் சில மலைகள் பாதுகாப்பு குழுமத்தின்கீழ் உள்ளன.இருப்பினும், பாறைகளை உடைத்து எடுக்க தென்மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விரிசல்

ராதாபுரம், கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் கல் உடைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி விடிய, விடிய பாறைகளை உடைத்து கடத்துவது இங்கு தொடர்ந்து வருகிறது. குவாரிகளில் பாறைகள் மிதமிஞ்சி உடைக்க, குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நில அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கேரளத்தில் மலைகளில் குவாரிகள் அமைக்கத் தடை அமலில் உள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து முறைகேடாக டன் கணக்கில் பாறைகளை கேரளத்துக்கு கடத்துவது தமிழகத்தில் பலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாகியிருக்கிறது. இவற்றை தடுக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருநெல்வேலி சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் கூறியதாவது: அனைத்து குவாரிகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். குவாரிகள் பலவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது இல்லை. இஷ்டத்துக்கு பாறைகளை உடைக்கின்றனர். பணத்துக்காக கேரளத்துக்கு கனிமவளங்களை கடத்துகின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

தடுக்க சட்டம் இல்லை வெளிமாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி சட்டம் இல்லை என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குவாரிகளில் எடுக்கப்படும் கற்களை தமிழகத்தில் விற்க 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தால் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கடந்த 7 மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 6 கல் குவாரிகள் விதிமீறல் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன.

கோவையிலும் விதிமீறல்

கோவையில் மதுக்கரை, அன்னூர், சோமனூர், காரமடை, பேரூர், செட்டிபாளையம், சூலூர், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தற்போது இயங்கி வருகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி, கல் குவாரிகள் இரவு பகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையை நாங்கள் பாரபட்சமாக நடத்தவில்லை என்று பேசினார்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்கள் தற்போதைய திமுக ஆட்சியிலும் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து குவாரிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் அதிக வெடிசத்தம் கேட்பதால் பாதிக்கப்படும் குடியிருப்பு பகுதியினர், திருநெல்வேலியில் நடந்த குவாரி விபத்து போன்று கோவை பகுதியிலும் நடக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகின்றனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டும், நடவடிக்கையும் இல்லை.

நீர்நிலைகளாக மாற்றலாம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, “அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும், விதிகளை மீறியும் இஷ்டத்துக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. ஒரு லாரியின் மூலம் 4 டன் முதல் 6 டன் வரை கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

குவாரிகளில் வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடியால் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைகின்றனர். கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுவதால், வழியெல்லாம் கற்கள் கொட்டி,கிராமப்புற சாலைகள் சேதமடைகின்றன. கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலாவதியான கல்குவாரிகளை நீர்நிலைகளாக மாற்ற வேண்டும்” என்றார்.

கைவிடப்படும் தொழிலாளர்கள்!

குவாரி தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் போது, பெரும்பாலும் குவாரி உரிமையாளர் இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் சூழல் உருவாகிவிடுகிறது. இதுகுறித்து,காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க செயலாளர் அருங்குன்றம் சி.தேவராஜன் கூறுகையில்,“குவாரிகளில் சிறியது முதல் பெரிய அளவிலான விபத்துகள் அவ்வபோது நிகழ்கின்றன. பெரிய அளவில் நிகழும் போது வெளியில் தெரிகிறது.

மற்ற நேரங்களில் தெரிவதில்லை. கல்குவாரி ஒப்பந்தம், உரிமம் பெற்றவர், வெடிவைப்பவர், கற்களை வெட்டி எடுப்பவர், மேற்பரப்புக்கு கொண்டுவருபவர், வாகனம் இயக்குபவர், தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர் என தனித்தனியாக ஒப்பந்தம் கொடுத்துவிடுவதால், தொழிலாளர்களுக்கும் குவாரி உரிமம் பெற்றவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். உயிரை பணயம் வைத்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நடைமுறைகள் வரவேண்டும்” என்றார்.

‘தொடர்ந்து கண்காணிக்கிறோம்’

இதுதொடர்பாக கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கல்குவாரி செயல்பட கனிம வளத்துறையின் அனுமதி மட்டுமின்றி வருவாய் துறை, புவியியல் துறை, வேளாண்மை துறை உட்பட பல்வேறு துறைகளின் அனுமதியை பெற வேண்டும். இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

அதிகபட்சம் 70 மீட்டருக்கு கீழ் கற்களை தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. மாவட்டங்கள் தோறும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்குவாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவில், வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதிகளை மீறி செயல்படும் குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் குறித்த புகார்களை, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

குவாரிகள் இயங்கும் நிலையில், அவற்றின் மூலம் அரசுக்கும், தனியாருக்கும் வருவாய் கிடைக்கும் போது, பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே போல், கனிமம் அதிகளவில் சுரண்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

கிணறு வடிவில் தோண்டுவதை தவிர்த்து படிக்கட்டு வடிவில் வெட்டியெடுக்க வேண்டும்

கல்குவாரியில் சூப்பர்வைசராக பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், சமூக செயல்பாட்டாளருமான எஸ்.சி.சண் முகம் கூறும்போது,“கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் எடுக்கும் முறை அரசுக்கு வருவாய் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கனிமவளங்கள் சட்ட விதிகளை பின்பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அரசு விதிகளை மீறி தான், கல்குவாரிகளில் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. கல்குவாரிகளில் கல் வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.750 முதல் ரூ.1000-ம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பி.எஃப், இ.எஸ்.ஐ வசதி, இன்சூரன்ஸ் ஆகியவை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்.

எஸ்.சி.சண்முகம்

அவர்களுக்கு என பிரத்யேக பணிநேரத்தை பின்பற்ற வேண்டும். கல்குவாரிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, காலணிஆகியவற்றை பெரும்பாலான குவாரிகளில் தருவதில்லை. பாதுகாப்பு உபகரணங்களை தவறாமல் வழங்க வேண்டும். கல்குவாரிகளில் விபத்து சம்பவங்களைத் தடுக்க, கிணறு வடிவில் தரையை தோண்டி எடுப்பதை தவிர்த்து, படிக்கட்டு வடிவில் தோண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது 30 அடிக்கு கீழே தோண்டுவதை தவிர்க்கலாம்.

குறைந்தபட்சம் 10 முதல் 15 ஏக்கருக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் முறையாக கனிமவளங்கள் எடுக்கப்படும். கேரளாவில் உள்ளது போல், குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் எடுத்துச் செல்வதை ஆன்லைன் முறையில் கண்காணிக்க வேண்டும். அனுமதி பெறும் போது அளித்தவரைபட அளவின் படி தான் கனிமங்களை எடுக்கின்றனரா என்பதை அதிகாரிகள் குழுவினர் கண்காணிக்க வேண்டும்.மேலும், கல்குவாரிகளில் வெடிமருந்துகளை அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்றவரை பயன்படுத்தியே வைக்க வேண்டும்,” என்றார்.

80 சதவீதம் மலை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க செயலாளர் அருங்குன்றம் சி.தேவராஜன் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாமூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இப்பகுதிகளில் இருந்த மலைகள் 80 சதவீதம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் குவாரி அமைந்திருக்க வேண்டும் என்பது உட்பட எந்த விதிகளும் அங்கு மதிக்கப்படுவதில்லை.

5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என குவாரி குத்தகை விடப்படுகிறது. ஆனால், எவ்வளவு அளவுதான் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்கான வரன்முறை இல்லாமல் அனுமதியளிக்கப்படுகிறது. இதனால் பெரும் பள்ளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டால் கூட அளவீடுகள் தரப்படுவதில்லை. இங்குள்ள ஒரு சில குவாரிகளை நாங்கள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளோம். செயல்பாட்டில் உள்ள குவாரிகள் குறித்து புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

- கி.கணேஷ், அ.அருள்தாசன், டி.ஜி.ரகுபதி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x