ஆஸ்திரேலியத் தேர்தல்: புதிய நம்பிக்கை

ஆஸ்திரேலியத் தேர்தல்: புதிய நம்பிக்கை
Updated on
3 min read

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு மே 21 அன்று தேர்தல் நடைபெற்றது. அன்றிரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த நாள் வெளியான முடிவுகள் ஆளும் லிபரல் கட்சிக்கு (வலதுசாரி) சாதகமாக இல்லை. அதே வேளையில், எதிரணியில் முன்னேறிக்கொண்டிருந்த தொழிற் கட்சி தனிப் பெரும்பான்மை பெறுமா என்பதும் ஐயமாக இருந்தது. எனினும், பிரதமர் ஸ்காட் மோரிசன் பதவி விலகினார்; லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் துறந்தார்.

மூன்றாம் நாள், அதுகாறும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆண்டனி அல்பனேசே ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகப் பதவியேற்றார். நான்காம் நாள் அவர் டோக்கியோவுக்குப் பயணமானார். அங்கேதான் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான நாற்கரத்தின் (Quad) மாநாடு நடக்கிறது. புதிய பிரதமரை ஜோ பைடன் வரவேற்றார். அப்போதும் 70% வாக்குகளே எண்ணப்பட்டிருந்தன. தொழிற் கட்சி பெரும்பான்மைக் கோட்டுக்கு அருகில் இருந்தது; கோட்டைத் தாண்டவில்லை.

தேர்தல் விநோதங்கள்

ஆஸ்திரேலிய ஜனநாயகத்தின் விநோதங்கள் இந்த இடத்தில் முடிந்துவிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்தத் தேர்தல் ஏப்ரல் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது நான் சிட்னியில் இருந்தேன். தேர்தல் நாளுக்கு மூன்று தினங்கள் இருக்கும்போதுதான் புறப்பட்டேன். பரப்புரைக் காலத்தில் பொதுக்கூட்டங்கள் இல்லை.

சுவரொட்டிகள், தட்டிகள், மாலைகள், தோரணங்கள், ஊர்வலங்கள், முழக்கங்கள், ஒலிபெருக்கிகள் - இவை எதுவும் இல்லை. வாக்காளரின் பெயர் அச்சடிக்கப்பட்ட பரப்புரை அட்டைகளை வீடுதோறும் அஞ்சல் பெட்டிகளில் போட்டுவிட்டுப் போனார்கள். வாரக் கடைசியில் அங்காடி வாசலில் கட்சிக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள். சமூக ஊடகங்களில் வாக்குக் கோரினார்கள். வாக்களிப்பது கட்டாயம். தகுந்த காரணமின்றி வாக்குச் சாவடிக்குப் போகாதவர்கள் 20 ஆஸ்திரேலிய டாலர் (ரூ.1,100) அபராதமாகக் கட்ட வேண்டும்.

நான் தங்கியிருந்தது சிட்னியின் புறநகர். கிரீன்வே எனும் தொகுதியில் வருகிறது. தொழிற் கட்சி உறுப்பினராக இருந்த மிஷேல் ரௌலண்ட் மீண்டும் போட்டியிட்டார். அவரது அஞ்சல் அட்டைகள் சிலவற்றில் பள்ளி மாணவிகளான அவரது இரு மகள்களும், கணவர் மிஷேல் சாயா-வும் இடம்பெற்றனர். வேட்பாளரின் குடும்ப வாழ்க்கையும் முக்கியமானது. ரௌலண்ட் ஆதரவாளர்கள் சிவப்பு டீ ஷர்ட்டில் அங்காடி வாசலில் வாக்கு சேகரித்தார்கள்.

லிபரல் கட்சி வேட்பாளர் பிரதீப் பாத்தி ஒரு தெலுங்கர். ஆனால், அவரது நீலச் சட்டை ஆதரவாளர்களை அபூர்வமாகவே பார்க்க முடிந்தது. விசாரித்தபோது, இது தொழிற் கட்சித் தொகுதி என்றார்கள். பெரும்பாலான தொகுதிகள் அப்படித்தான். பாரம்பரியமாய் ஏதாவது ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருக்கும். மொத்தமுள்ள 151 தொகுதிகளில் 20 தொகுதிகள் வரை இழுபறியாய் இருக்கும். இங்கேதான் போட்டியும் தீவிரமாக இருக்கும். இந்த முடிவுகள்தான் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் என்றார்கள். கிரீன்வே தொகுதியில் ரௌலண்ட் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாராசூட் வேட்பாளர்கள்

பாரமட்டா தொகுதியும் சிட்னியில்தான் இருக்கிறது. இந்தியர்களும் ஈழத் தமிழர்களும் பிற தெற்காசியர்களும் தொகுதியின் மக்கள்தொகையில் 40% இருப்பார்கள். இதுவும் ஒரு தொழிற் கட்சித் தொகுதி. இங்கே துர்கா ஓவன் எனும் ஈழத் தமிழ் வம்சாவளிப் பெண் தொழிற் கட்சி டிக்கெட்டைப் பெறுவார் என்றார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. வெளியூரிலிருந்து ஒரு ஆஸ்திரேலிய வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்டார். நாடெங்கிலும் இப்படியான அயலூர்க்காரர்கள் போட்டியிட்டார்கள். இவர்களை ‘பாராசூட் வேட்பாளர்கள்’ என்று ஊடகங்கள் அழைத்தன. பாரமட்டாவில் இந்த முறை தொழிற் கட்சியின் வாக்குகள் குறைந்தன, எனினும் கட்சி வெற்றி பெற்றது.

ஆனால், சிட்னியின் இன்னொரு தொகுதியான ஃபவ்ளரில் பாராசூட் தரையிறங்கவில்லை. வியட்நாம் அகதிப் பெற்றோரின் மகளான டூ-லீ தொழிற் கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கிறிஸ்டீனா கேன்னாலிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. கட்சிக்குள் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால், அந்தச் செல்வாக்கை அவரால் போதுமான வாக்குகளாக மாற்ற முடியவில்லை. சுயேச்சையாகப் போட்டியிட்ட உள்ளூர்க்காரரான டை-லீயே வெற்றி பெற்றார்.

புதிய கிரணங்கள்

ஆஸ்திரேலியா, பல்லினக் கலாச்சாரத்தைப் பேணுகிற நாடு. ஐந்தில் ஒரு வீட்டில் ஆங்கிலம் பேசப்படுவதில்லை. தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர். சிட்னியில் மட்டும் இந்தியத் தமிழர்களும் ஈழத் தமிழர்களுமாக ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாகப் படித்துப் பொதுத்தேர்வு எழுதலாம். ஒரே நபர், தமிழ் இனத்தவராகவும் ஆஸ்திரேலியக் குடிநபராகவும் வாழலாம் என்கிறது அரசு.

ஆஸ்திரேலியாவுக்குக் கணிசமான ஆங்கிலேயர்களும் நியூசிலாந்தினரும் புலம்பெயர்கின்றனர். அடுத்தடுத்த இடங்களில் சீனர்களும் இந்தியர்களும் வியட்நாமியர்களும் இலங்கையர்களும் இருக்கிறார்கள். இவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருப்பதில்லை. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளில் மாற்றத்துக்கான கிரணங்களைக் காண முடிகிறது. புதிய உறுப்பினர்களில் எட்டுப் பேர் ஆசிய வம்சாவளியினர்.

புதிய உறுப்பினராகியிருக்கும் ஜெனட்டா மாஸ்கரேனஸ் இந்திய வம்சாவளியில் வந்தவர், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர், அவரது பெற்றோர் கோவாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். ஜெனட்டா ஒரு பொறியாளர். இன்னொரு உறுப்பினரான மிஷேல் ஆனந்தராஜாவின் பெற்றோர் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர்கள். மிஷேல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், 11 வயதில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர், மருத்துவர், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். சாலி-சிட்டோ சீனப் பெற்றோருக்குப் பிறந்தவர், அவரது பெற்றோர் வியட்நாம் போரின்போது லாவோசிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள்.

காசண்டோ பெர்னாண்டோ சிங்களவர். பாத்திமா பேகன் ஆப்கானியர். டை-லீ வியட்நாமியர். சாம்-லிம் மலேசியச் சீனர். மரியோன், ஜெசிந்தா, கோர்டன் ஆகிய மூவரும் ஆதிக்குடியினர். இந்த எண்மரில் கோர்டன், சாம் ஆகிய இருவர் நீங்கலாக மற்ற அறுவரும் பெண்கள். டை-லீ நீங்கலாக மற்ற எழுவரும் தொழிற்கட்சி வேட்பாளர்கள்.

இன்னொரு கிரணம், மாற்றுக் குரல்களுக்கான வெளியும் இந்த நாடாளுமன்றத்தில் உருவாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசியலை இரண்டு பிரதானக் கட்சிகள்தான் இயக்கிவருகின்றன. இந்த முறை சுயேச்சை வேட்பாளர்கள் பதின்மர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘டேல்’ எனும் சூழலியல் ஆதரவாளர்கள். இவர்களைத் தவிர பசுமைக் கட்சியும் பிற சிறிய கட்சிகளுமாக ஐந்து பேர் நாடாளுமன்றத்திற்குள் போகிறார்கள். இவர்களில் அதிகமானோர் பெண்கள். இந்தத் தேர்தலில் காலநிலை மாற்றம் முக்கியமான பிரச்சினையாக இருந்தது. காடுகளில் பற்றிய நெருப்பும் ஊருக்குள் புகுந்த வெள்ளமும் எச்சரிக்கையாக அமைந்தன. இனியும் சுற்றுச்சூழலை மேம்படுத்தாவிட்டால், அதன் பலன் விபரீதமாக இருக்கும் என்பதை இவர்கள் மக்களிடம் எடுத்துச் சென்றனர். மக்கள் கேட்டனர். புதிய பிரதமரும் கேட்பார். அந்த நம்பிக்கை பரவலாக இருக்கிறது.

புதிய பிரதமர் ஆண்டனி அல்பனேசே ஆஸ்திரேலியாவின் பல்லினப் பண்பாட்டைப் பிரதிபலிப்பவர். அவரது தந்தை இத்தாலியர். தாய் ஆஸ்திரேலியர், ஐரிஷ் வம்சாவளியில் வந்தவர். அல்பனேசே தனது தாயால் வளர்க்கப்பட்டவர். அவரது தாய் வீட்டு வேலைகள் செய்துவந்தார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். அரசின் வீட்டு வசதிக் குடியிருப்பில், தனது தாய் பெற்றுவந்த ஊனமுற்றோருக்கான உதவித்தொகையில் வளர்ந்தவர் அல்பனேசே. சமூகநீதியின் பொருளைத் தாயிடமிருந்துதான் கற்றேன் என்று அவர் பின்னாளில் சொல்லியிருக்கிறார். ஓர் ஏழைத் தாயின் மகன் பிரதமராகியிருக்கிறார். புதிய கிரணங்கள் தெரிகின்றன. எதிர்பார்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in