நீங்கள் ஓடிடி உலகவாசியா?

நீங்கள் ஓடிடி உலகவாசியா?
Updated on
3 min read

நாம் எல்லோரும் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனுடைய வெளிப்பாடுதான் ஓடிடி என்கிற இணையவெளித் திரையரங்கம். இணையத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்த பிறகு, ஒவ்வொருவரும் தாம் விரும்பும் ஒரு வலைக்காட்சித் தொடரையோ திரைப்படத்தையோ ஓடிடி தளத்தின் வழியாக எளிதில் பார்த்துவிடலாம். முன்பெல்லாம் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் சேர்ந்து ஒரு குழுவாகத் திரையரங்குக்குச் சென்று கலகலப்புடன் படம் பார்த்துவரும் அனுபவம் நவீன காலத்தில் பெரிதும் குறைந்துவிட்டது.

தனியாக அமர்ந்து ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் அனுபவம் எத்தகைய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது, ஓடிடி தளங்களின் வருகை திரைப்பட உருவாக்கத்திலும், பார்வையாளர்களின் ரசனையிலும், குடும்ப உறவுக்குள்ளும் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்லாம் நாம் ஆழமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் செயல்படுகின்றன. இவை யாவும் வாடிக்கையாளர்களிடமிருந்து மாதக் கணக்கிலோ ஆண்டுக் கணக்கிலோ சந்தாவைப் பெற்றுக்கொண்டுதான் படம் பார்க்க அனுமதிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களையும் திரைப்படங்களையும் பார்ப்பது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. பெரும்பாலும், ஓடிடி தளங்கள் பெருநகரங்களில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், இங்குதான் 4-ஜி வசதியும் அருகலை (Wi-Fi) வசதியும் பெருமளவு இருக்கின்றன. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களுக்குரிய கணினித் திரையில் அல்லது டேப்லெட் ஐபேட் என்றழைக்கப்படுகின்ற நவீனக் கருவிகளின் வழியாக ஓடிடி தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். பள்ளி-கல்லூரி மாணவர்கள் தங்களின் நவீனக் கைபேசிகளில் ஓடிடி செயலிகளின் மூலம் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள்.

ஓடிடி தளங்கள் வந்த பிறகு, குடும்ப உறவில் பல்வேறு பாதிப்புகளை அவை ஏற்படுத்தியுள்ளன. குழுவாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கிறவர்களை இந்தத் தளங்கள் தனித்தனியாகப் பிரித்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரையும் தனித் தீவுகளாக மாற்றிவிட்ட அவலம் ஓடிடி தளங்கள் வழியாக அரங்கேறியிருக்கிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாகப் பேசுதல், மனதில் உள்ள சுமைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுதல் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டன. உளவியல் சிக்கல்களும் உடல்ரீதியிலான பிரச்சினைகளும்கூட ஏற்படுகின்றன.

2022--ல் எடுத்த கணக்கின்படி இந்தியாவில் ஓடிடி தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 50 கோடி. இதில் 10% வாடிக்கையாளர்கள்தான் முறையாக சந்தா செலுத்தியவர்கள். மற்றவர்களெல்லாம் சந்தா செலுத்தியவர்களிடம் கடவுச்சொல்லைப் பெற்றுக்கொண்டு அந்தத் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, சந்தா செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது ஓடிடி தளங்கள் தங்களுக்கான வருமானத்தை எப்படிப் பெறுகிறார்கள் என்ற கேள்வி எழலாம். இங்குதான் ஒரு விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குறைவான சந்தாவைப் பெற்றுக்கொண்டு எப்படி இத்தனை தொடர்களையும் திரைப்படங்களையும் ஓடிடி தளங்கள் வெளியிடுகின்றன? ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் இந்தப் படம் எத்தனை புதிய சந்தாதாரர்களை தமது ஓடிடி தளத்துக்குக் கொண்டுவரும் என்று கணக்கிடுகிறார்கள். நட்சத்திர அந்தஸ்து உள்ள திரைப்படங்கள், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் ஓடிடி தளத்துக்குள் வரும்போது, கணிசமாக வாடிக்கையாளர்களின் சந்தா கூடுவதைப் பார்க்கலாம். குறிப்பாக, கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த காலத்தில், வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத சூழலில், ஓடிடி தளங்களை அதிகமாகப் பயன்படுத்தப் பழகிக்கொண்டார்கள். இதனால் சந்தாக்கள் கணிசமாகக் கூடின. ஒருமுறை ஓடிடி தளத்தைப் பயன்படுத்தி, அதற்குப் பழக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிலேயே இருக்கக்கூடிய எதார்த்தத்துக்குள் சென்றுவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க, ஓடிடி தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் சேகரித்துப் பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றன. வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றுசேர இந்தத் தரவுகள் பெரிய நிறுவனங்களுக்கு முக்கியமானவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓடிடி தளத்திலேயே எந்த நகரத்தில் உள்ள மக்கள் எந்த மாதிரியான திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள்? அவர்களுடைய விருப்பங்கள் என்ன? கனவுகள் என்ன? ஆசைகள் என்ன? இணையத்தில் எதையெல்லாம் அடிக்கடி தேடுகிறார்கள்? இதுபோன்ற தகவல்களையெல்லாம் சேகரித்து, அந்தந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஓடிடி தளங்கள் கொடுக்கின்றன. அவர்கள், அந்தத் தரவுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதன் மூலம், நேரடியாக அந்த வாடிக்கையாளர்களைச் சென்றுசேரும் வசதியை இணையம் செய்துகொடுக்கிறது.

எனவேதான், நீங்கள் இணையத்தில் இருக்கும்போது, நீங்கள் எப்போதோ தேடிய புத்தகம், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள் போன்றவை உங்கள் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கின்றன. கூடவே, இதை ஏன் நீங்கள் வாங்கக் கூடாது என்றுகூட நீங்கள் நிர்ப்பந்திக்கப்படுவீர்கள். இப்படி இணையதளங்கள் வழியாக சேகரிக்கும் தகவல்களைப் பெரிய நிறுவனங்களுக்குக் கொடுத்து, அதன் வழியாக நிறைய வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

ஓடிடி தளங்கள் வழியாக ஒருசில நன்மைகளும் நடந்திருக்கின்றன. அதாவது, ஒரு வட்டாரத்தை அல்லது ஒரு மாநிலத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு உலகளாவிய பார்வையாளர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே திரைப்படம் வலம்வந்துகொண்டிருந்த சூழல் மாறி, இப்போது உலகளாவிய சினிமா ரசிகர்கள் தாங்கள் விரும்பிய தொடர்களையும் திரைப்படங்களையும் பார்ப்பதற்கான பரந்த வெளியை ஓடிடி உருவாக்கியிருக்கிறது. இது இணையத்தின் அசுர வளர்ச்சியின் வெளிப்பாடுதான்.

அதே சமயத்தில், எல்லாத் திரைப்படங்களும் ஓடிடி தளங்களுக்குள் வருவதில்லை. இந்தப் படத்தை வெளியிட்டால் எவ்வளவு பேர் பார்ப்பார்கள், எவ்வளவு சந்தாக்கள் கிடைக்கும் என்கின்ற கணக்குகள் இருப்பதால், எடுத்து முடிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமலும் ஓடிடி தளங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் வெளியிலேயே தேங்கிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்போது சினிமா ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்ற கேள்வியோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஓடிடி தளங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் வசம் இருக்கின்றன. இதனால் தனியார் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. எனவே, லாபம் ஈட்டித் தரும் தொடர்களையும் திரைப்படங்களையும்தான் அவர்கள் தயாரிக்கிறார்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்குகிறார்கள். வணிக நோக்கம் இல்லாத, சமூக அக்கறையோடு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், குறைந்த செலவில் உருவான படங்களுக்கும் ஓடிடி தளங்களில் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை.

இந்தச் சூழலை மனதில் கொண்டு மத்திய அரசோ, மாநில அரசோ ஏன் அரசாங்கத்துக்கென்று சொந்தமாக ஓடிடி தளத்தை ஆரம்பிக்கக் கூடாது? அப்படி ஆரம்பிக்கும்போது குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கும் ஆதரவு அளிக்க முடியும். அல்லது அரசே நிதியுதவி செய்து சமூக பொறுப்புடன் திரைப்படங்கள் எடுக்க ஊக்குவிக்கலாம். திரைப்படமும் வலைக்காட்சித் தொடர்களும் சக்தி வாய்ந்த கலை வடிவங்கள் என்னும் வகையில் மனித வாழ்வைப் பண்படுத்துவனவாக, மக்களுக்கான ஆயுதமாக அவை மாற வேண்டும். மாறிவரும் இந்த நவீன உலகில் ஓடிடி தளங்கள் ஒருபோதும் திரையரங்குகள் எனும் சமூகத் தொடர்பாடலை அழித்துவிட முடியாது. அல்லது திரையரங்குகளுக்கு மாற்றாக அவை மாற முடியாது.

- அ.இருதயராஜ் சே.ச., ‘மௌனம் கலைக்கும் ஜெய்பீம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர். தொடர்புக்கு: iruraj2020@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in