விவசாயத்தில் புதியதொரு தொழில்நுட்பம்!

விவசாயத்தில் புதியதொரு தொழில்நுட்பம்!
Updated on
3 min read

மின்தூக்கி ஒன்றின் அருகில் நீங்கள் செல்கிறீர்கள். அது தானாகவே திறக்கிறது. அதில் நுழைந்து தரைக்குக் கீழுள்ள, கார் நிறுத்தும் தளத்துக்கு வருகிறீர்கள். காருக்கு அருகே சென்றவுடன் காரின் கதவு திறக்கிறது. காரை இயக்க ஆரம்பித்ததும் குளிர்சாதன வசதி செயல்பட ஆரம்பிக்கிறது, உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. இப்படி ஒன்றுக்கொன்று ஒரு இணைப்பு ஏற்படுத்தி, அவற்றை இயங்கவைக்கும் தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things-IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம்.

விவசாயத்தையும் மிகவும் நுட்பமாகக் கையாள நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் பொருட்களின் இணையம். கிராமங்களில், இரவு நேரத்தில் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முதலில் ஒரு பகுதிக்குத் திருப்பிவிட்டு, பிறகு வந்து உறங்கிவிடுவோம். அது அந்தப் பகுதிக்குப் பாய்ந்துவிட்டு, தேவையில்லாத அடுத்த பகுதிக்கு, அதுவாக உடைத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கும். திடீரென விழித்துப் பார்க்கும்போது, தண்ணீர் வேறொரு பகுதிக்கு வீணாகப் போய்க்கொண்டிருக்கும். இதனால் தண்ணீரும் வீணாகும். மேலும், குறிப்பிட்ட அளவைத் தாண்டித் தண்ணீர் சென்றால் பயிர்கள் வீணாகிவிடும்.

இந்த இழப்பைத் தவிர்ப்பதற்கும், பெருகிவரும் தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்கவும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ‘பொருட்களின் இணையம்’ ஆகும். இந்தப் பொருட்களின் இணைய உணரிகளைப் பயிர்கள் உள்ள மண்ணில் புதைத்து வைத்துவிட்டு, வேரைக் கண்காணிக்கிறார்கள். அந்த வேருக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும், அந்த வேரில் உள்ள தண்ணீரின் அளவு எவ்வளவு என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு, எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதை இந்த நுண்ணுணரிகள் மூலம் அறிந்து, தண்ணீரைப் பாய்ச்சலாம் (அ) தண்ணீரை நிறுத்திவிடலாம்.

பருத்தியோ கிழங்கோ பயிரிடும்போது, அதிக மழையாலோ தண்ணீர்ப் பற்றாக்குறையாலோ வளமற்ற மண்ணாலோ கிழங்குகளும் பருத்தி விதைகளும் முளைக்காமல் போய்விடக்கூடும். கிராமங்களில், ஒரு பகுதியில், ஒவ்வொரு வரிசையில் எது முளைக்கவில்லை என்பதை அறிந்துகொண்டு அதனருகில் மாற்று விதையை விதைப்பார்கள். இவ்வாறு செய்யும்போது, நம் விவசாயிகளுக்கு நிறைய உழைப்பு, கால விரயம் ஏற்படுகிறது. இதைக் களைவதற்கு ‘பொருட்களின் இணையம்’ மூலம் ட்ரோன்களைக் கொண்டு கண்காணித்து விதைகளை அந்த இடத்தில் விதைக்கலாம்.

மண் வளத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குக் கிராமத்திலிருந்து மண்ணை எடுத்துக்கொண்டு, மண்வள ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று, இந்த மண்ணின் வளம் எப்படி இருக்கிறது, இந்த மண்ணில் எந்த வகை பயிர் வளரும், இதற்கு என்ன உரம் இட வேண்டும் என்பதை ஆய்வுசெய்து, அதன் பின்னர், அதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், நம் IOT மூலம், எளிதாக மண்வளக் கண்காணிப்பு உணரி மூலம் இதை செய்துவிடலாம்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பயன்பாட்டை IOT மூலம் 50% முதல் 75% வரை குறைத்து, தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்தை எளிதாகச் செய்வதற்கான வழிவகை இந்த IOT-ல் கிடைத்திருக்கிறது. மேலும், பயிருக்கு ஊட்டச்சத்துகள் தேவையா என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான உரங்களை, தேவையான காலத்தில், தேவையான அளவு கொடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.

மக்கள்தொகை அதிகரிப்பு, தீவிர வானிலை மாற்றம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பலவற்றை நாம் எதிர்கொண்டு போராடிவரும் சூழ்நிலையில் உணவுத் தேவையை அதிகரிக்க, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தப் புதிய தொழில்நுட்பங்களுள் ஒன்றுதான் தற்போது வளர்ந்துவரும் பொருட்களின் இணையம் என்பதாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், விவசாய நிலங்களின் மண்ணை ஆய்வுசெய்து என்ன வகையான உரம் இடலாம், இந்த மண்ணில் என்ன வகையான பயிர்கள் வளரும், அதற்குத் தேவையான நீரின் அளவு எவ்வளவு என்று எல்லாவற்றையும் நம்மால் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

வினைதிறன்மிக்க வேளாண்மை

விவசாயிகள் இரவு நேரத்தில் வயலுக்குத் தண்ணீர் மோட்டாரைப் போட்டுவிட்டு, வயலுக்குத் தேவையான அளவு தண்ணீர் செல்லும் வரை உறங்கிக்கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் நன்கு உறங்கிவிட்டால், தேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் நிரம்பிவிடும், பயிர்களும் வீணாக வாய்ப்பு உண்டு. IOT தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். வயலில் தேவையான அளவு நீர் நிரம்பிய உடன், பல்வேறு உணரிகள் உதவியுடன் மோட்டார் தானாகவே இயக்கத்தை நிறுத்திவிடும். அதுபோல, விவசாயிகள் வயல்களின் கள நிலைமையை எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். இந்த வினைதிறன்மிக்க வேளாண்மை பெரிய விவசாயத்தில் மட்டுமல்லாமல், அங்கக வேளாண்மை, சிறு, குறு, நடுத்தர வேளாண்மையிலும் பேருதவி புரியும்.

துல்லிய வேளாண்மை

துல்லிய வேளாண்மை என்பது, பயிர்கள், கால்நடைகளை வளர்ப்பதில், உணரிகள், தானியங்கி இயந்திரங்கள், தானியங்கி வன்பொருள், இயந்திரவியல், தொழில்நுட்பம் போன்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தித் துல்லியமாக விவசாயம் செய்யும் முறையாகும். உதாரணமாக நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகள் போன்றோர் மேகத்தில் நிகழும் மாற்றங்களை வைத்துத் துல்லியமாக வானிலை குறித்துச் சொல்வார்கள். இன்று மாலை மழை வரும் என்பார்கள். இனிமேல் மழை வராது என்று சொல்வார்கள். உச்சி வெயிலை வைத்து மணி மதியம் 12 எனத் துல்லியமாகச் சொல்வார்கள். இதுபோன்ற அனுபவ அறிவு, அறிவியல் அறிவைத்தான் அதிவேக இணையம், திறன்பேசிச் சாதனங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் மூலம் தற்போது எட்டப்படுகிறது. இந்தத் துல்லிய வேளாண் முறையில் பொருட்களின் இணையத்தின் முக்கியமான பயன்பாடு பயிர் அளவீட்டு முறை (Crop metrics) என்பதாகும். இது துல்லியமாக அதி நவீன வேளாண் முறைகளுக்குத் தேவையான தீர்வுகளை அளிக்கிறது.

பயிர் அளவீட்டு முறையானது IOT தொழில்நுட்பத்தில் உள்ள உணரிகள் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வுசெய்து, என்ன வகையான பயிர்களைப் பயிரிடலாம்; நீர்ப்பாசன முறையில் தேவையான மாற்றங்கள்; மண் மாறுபாடு கொண்ட நீர்ப்பாசன பயிர் வயல்களில் லாபத்தை அதிகரிப்பது, விளைச்சலை மேம்படுத்துவது எனப் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் துல்லிய விவசாயத்தில் பயன்படுகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் விவசாய ட்ரோன்கள் (Agricultural drones) மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுகின்றன. பயிர் வள மதிப்பீடு, நீர்ப்பாசனம், பயிர்க் கண்காணிப்பு, பயிர் தெளித்தல், நடவு செய்தல், மண் மற்றும் களப் பகுப்பாய்வு ஆகிய பயன்பாடுகளுக்கும், நிலத்தடி சார்ந்த ட்ரோன்கள் மற்றும் வான்வழி சார்ந்த ட்ரோன்கள் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ட்ரோன்களின் மூலம் பயிர்களின் வளத்தை இருந்த இடத்தில் இருந்துகொண்டே கண்காணிக்க இயலும். மேலும், பயிர்களின் தன்மையை எளிதாக ஆராய்ந்து (ட்ரோன்களின் மூலம் பெறப்படும் பயிர்களின் தரவுகளை வைத்து) சிறப்பான திட்டமிடலுக்கு இந்த ட்ரோன்கள் விவசாயத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் IOTயின் பங்கு அளப்பரியது.

- பா.சிதம்பரராஜன், முதல்வர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி; க.சண்முகம், உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் துறை. தொடர்புக்கு: shanmugamk.cse@valliammai.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in