Last Updated : 14 May, 2016 08:52 AM

Published : 14 May 2016 08:52 AM
Last Updated : 14 May 2016 08:52 AM

திராவிட இயக்கம் இல்லையேல் சமூக நீதி இல்லை!- வைகோ பேட்டி

பல சவால்கள், சில தியாகங்களுடன் மக்கள் நலக் கூட்டணியை மெகா கூட்டணியாக்கியவர் வைகோ. ஓய்வெடுக்க அவருக்கு நேரமில்லை. 234 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழல்கிறார். மதுரைக்கு வந்தவரைச் சந்தித்தேன்.

மநகூ வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

திமுகவில் தேர்தல் பணிச் செயலாளராக இருந்தவன் நான். என் கணிப்பு எப்போதும் தப்பாது. 1984-ல் திமுக வெற்றிபெறும் என்றார்கள் எல்லோரும். ‘ஜெயிக்காது’ என்று அடித்துச் சொன்னவன் நான். 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட திமுக ஜெயிக்காது என்று கலைஞரிடமே சொன்னேன். “20 தொகுதியில் ஜெயிக்கும் என்று நான் அறிக்கை கொடுத்திருக்கிறேன். நீங்க ஏன் தப்பான தகவலை முதல்வருக்குச் சொன்னீங்க” என்று கேட்டார் இன்டெலிஜன்ஸ் பிரிவு ஐ.ஜி. ஜாபர் அலி. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், “எப்படி சார் சரியா கணிச் சீங்க?” என்று அவரே வியந்தார். “அரசாங்கத்துக்கு சப்போர்ட்டாக காவல் துறை எழுதுவாங்க. நான் மக்கள் முகத்தைப் பார்த்து முடிவு செய்பவன்” என்றேன். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் பண அலை அடித்ததால், நாங்கள் தோற்கப்போகிறோம் என்று முன்பே யூகித்துவிட்டேன். ஆனால் இந்த முறை, அடித்துச் சொல்கிறேன். எங்கள் மாற்று அரசியல் கூட்டணி உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றும்.

இந்த முறையும் பண அலை வீசினால்?

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால்சாமியே, “பண விநியோகத்தைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்கவே முடியாது” என்று சொல்லியிருக்கிறார். இரு கட்சிகளும் பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், இந்த முறை பணநாயகத்தையும் மீறி நாங்கள் வெற்றிபெறுவோம்.

இளைஞர்கள் மனதில் இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று வீட்டில் உள்ளவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கை நீட்டிப் பணம் வாங்கியவர்கள் நன்றியோடு ஓட்டுப்போடும் கதையெல்லாம் இம்முறை நடக்காது. பண அலை எங்கள் வெற்றியைப் பாதிக்காது.

போட்டியிலிருந்து நீங்கள் விலகத் தோல்வி பயம்தான் காரணம் என்கிறார்களே?

என்னை மையப்படுத்தி ஒரு கொலைக்களம் உருவாக்கப்படுகிறது என்பதை நூற்றுக்கு நூறு உணர்ந்த பிறகுதான் அந்த முடிவை எடுத்தேன். ‘நாயக்கர் - தேவர் மோதல் வரும் என்றால், வைகோ ஏன் நாயக்கரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’என்றும் சிலர் கேட்கிறார்கள். அவர்களது இலக்கு நான் மட்டும்தான். கோவில்பட்டி தொகுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். தோற்றால், இது தெரிந்துதான் வைகோ போட்டியில் இருந்து விலகிவிட்டார் என்பார்கள். எனவே, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தாலும் கோவில்பட்டிக்கென ஒரு நாள் முழுக்க ஒதுக்கியிருக்கிறேன்.

‘மதிமுக - பாமக கூட்டணி’என்று பெயரிட நீங்கள் மறுத்ததால், உங்கள் அணியில் இருந்து பாமக 1996-ல் வெளியேறியது. அப்போது அவ்வளவு கெடுபிடியாக இருந்த நீங்கள், இப்போது ‘தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி’ என்று மதிமுக பெயரே இல்லாத ஒரு அணியை அமைத்துள்ளீர்களே.. பக்குவப்பட்டுவிட்டீர்களா?

அந்தத் தேர்தலில் எங்கள் அணியில் மார்க்ஸிஸ்ட், ஜனதாதளம் போன்ற கட்சிகளும் இருந்தன. பாமகவுக்கு 78 எம்எல்ஏ சீட்டும், 14 எம்பி சீட்டும் தருவதாகச் சொன்னோம். சரி என்று சொன்ன ராமதாஸ், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார் என்று 2 நாட்கள் காத்திருந்தேன். ஆனால், ஒரு தொழிலதிபரின் உதவியோடு அதைக் கெடுத்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்போதும் சரி, இப்போதும் சரி, நான் பக்குவப்பட்டவனாகவே நடந்துகொண்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் மநகூவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது சரிந்திருப்பதாகச் சொல்கிறார்களே?

எங்கள் அணி சோர்வுற்றுவிட்டதாகக் கடந்த சில நாட்களாகத் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. இதே ஊடகங்கள்தான், ‘நான்கு கட்சி கூட்டணியால் வெல்ல முடியாது, விஜயகாந்தும், வாசனும் வந்தால்தான் ஜெயிக்கும்’என்று எழுதினார்கள். விஜயகாந்தும் வாசனும், எங்களுடன் வரவே மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. பத்திரிகைகளின் பழைய கணிப்புப்படி பார்த்தால் எங்களுக்கு 35% வாக்கு கிடைக்க வேண்டும். ஆனால், இப்போது இந்தக் கூட்டணிக்கு 7 முதல் 9% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால், இவர்களைப் பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றுதானே அர்த்தம்?

திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது, ‘கொடியும் சின்னமும் எங்களுக்கே சொந்தம்’ என்று சொன்னீர்களே. அவ்வாறு நடந்திருந்தால் இப்போது என்னாகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

‘இப்படி நடந்திருந்தால் என்னாகியிருக்கும்?’ என்ற கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நடக்காததைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

இந்தத் தவறை நாம் செய்திருக்கவே கூடாது என்று பின்னர் வருத்தப்பட்டது உண்டா?

பிழை செய்வது மனித இயல்பு. நான் எடுத்த முடிவுகளிலேயே மிகத் தவறானதாக நான் கருதுவது, 2004-ல் சிறையில் இருந்து வெளிவந்ததும் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடாதது. அந்த நேரத்தில், நான் நாடாளுமன்றத்துக்குள் இருந்திருந்தால், ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் பேசி, அவர்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியும். அரசுக்குக் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்துத் தாக்குதலை நிறுத்தியிருக்க முடியும் என்று இப்போது தோன்றுகிறது.

அடுத்தது, 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. வாழ்க்கையில எவ்வளவு பெரிய தவறைச் செஞ்சிட்டோம்னு தனிமையில உட்கார்ந்து அவ்வளவு வருத்தப்பட்டேன். 2011 தேர்தலைப் புறக்கணித்ததும் தவறு. தேர்தல் ஜனநாயகத்தில் ஈடுபடுகிற ஒரு கட்சி, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அந்தக் கட்சியை நடத்தவே முடியாது. ஆனாலும், கடும் உழைப்பால் கட்சியைத் தூக்கி நிறுத்தியிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள கம்யூனிஸ்ட் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்களே?

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ ஒருக்காலும் விட மாட்டோம். அதற்கான முயற்சிகள் நடந்தால் முதல் ஆளாக நின்று போராடுவேன். கம்பத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், பெரியகுளம் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் லாசரை வைத்துக்கொண்டே இதைச் சொல்லியிருக்கிறேன்.

இந்தக் கூட்டணி அப்படியே தொடர்ந்தால் 2021-ல் ஆட்சியமைக்க முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. எனவே, தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், கூட்டணி தொடர வேண்டும் என்று சங்கல்பம் எடுத்திருக்கிறீர்களா?

மக்கள் நலக் கூட்டணி ஒரே கட்சி போல் ஒற்றுமையாகச் செயல்படுவதை நீங்கள் அறிவீர்கள். கேப்டனும், வாசனும் நல்ல மனசோடு இருக்காங்க. அதனால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி வலுவாகத் தொடரும். ஒருங்கிணைப்பாளர் பணியை நான் செவ்வனே செய்வேன்.

‘வைகோ தமிழரே இல்லை’ என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே?

அர்ஜெண்டினாவில் பிறந்த சேகு வேராவைக் கியூபா நாட்டு மக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். தமிழனாகவே வாழ்பவன். என் மீது எந்த அஸ்திரமும் வீச முடியாததால், இந்த விஷ அம்பை வீசுகிறார்கள். 2008-க்கு முன் ஈழத் தமிழர்களுக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாமல், ஒரு சினிமாப் படத்தை எடுத்துவிட்டு, உரக்கச் சப்தமிட்டு உலக நாடுகளில் ஈழத் தமிழர் பெயரைச் சொல்லிப் பண வசூல் நடத்திக் கொண்டிருப்பவர்களின் பொய் முகத்திரை விரைவில் கிழியும்.

தமிழக அரசியலில் உச்சபட்ச நேர்மையாளராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?

அதிகாரத்தில் இருந்தவர்களைத்தானே அப்படிச் சொல்ல முடியும்? எனக்குத் தெரிந்து உச்சபட்ச நேர்மையாளர்களாக இருந்தவர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் தகுதி துளியும் கிடையாது.

உங்களைப் போலப் பதவியில் இல்லாதவர்களின் பெயரைச் சொல்லுங்களேன்.

அதிகாரத்தில் இல்லாதவர்களை இவ்வாறு பட்டியலிடுவது தவறு.

50 வருட திராவிட அரசியலால் தமிழகம் வீழ்ந்தது என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

திராவிட இயக்கம் இல்லையேல் சமூக நீதி இல்லை. பெரியார் இல்லையேல் பெண்ணுரிமையிலும், இடஒதுக்கீட்டிலும் தமிழகம் வழிகாட்டி மாநிலமாக இருந்திருக்காது. அறிஞர் அண்ணா தோன்றியிருக்காவிடில் தமிழனுக்கு மொழி உணர்வும், இன உணர்வும் இல்லாமல் போயிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பின்னால், திராவிட இயக்கத் தலைவர்களின் எழுத்தும், பேச்சும், தியாகமும் மறைந்திருக்கிறது. அண்ணா மறைவுக்குப் பிறகு வந்த சிலரின் குற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாதவர்களும் தெருவிலேயே வருவோர் போவோர்களும் ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்களைக் காறித்துப்புவது தலைவர்களின் சிலை மீது அமர்ந்து பறவை எச்சம்போடுவதற்குச் சமம்.

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பது மதிமுகவின் ஆரம்ப காலக் கொள்கை முழக்கம். அதென்ன லட்சியம் என்று சொல்லலாமா?

ஊழல் இல்லாத ஆட்சி. தமிழக உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாத்தல், சாதி மத வேறுபாடற்ற சகோதர மனப்பான்மையை வளர்த்தல், சுதந்திர தமிழ் ஈழ தேசம் போன்றவையே எங்கள் லட்சியம். அவற்றை அடைந்தே தீருவோம்.

கணிசமான இடங்களில் வென்றும் மநகூவால் ஆட்சியமைக்க முடியவில்லை என்றால், யாரை ஆதரிப்பீர்கள்? திமுக, அதிமுகவில் எது சிறிய தீமை?

அப்படிப்பட்ட நிலைமை இந்தத் தேர்தலில் ஏற்படாது. எந்தத் தீமையையும் ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்கு வராது.

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x