

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட அகில இந்திய செயற்குழுத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். நேரு குடும்பத்தின் தலைமையிலேயே காங்கிரஸ் தொடர வேண்டுமா, இல்லை அதற்கு வெளியே புதிதாக ஒரு தலைவர் உருவாகி வர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இடையேதான் இந்த மாநாடு கூடியது.
இதற்கு முன் கடந்த ஏழு வருடங்களாக ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியை ஓரளவு தாங்கிப் பிடித்துக்கொண்டே வந்தார்கள். அவர்களின் எந்த வியூகமும் எடுபடாமல் போனது. இதற்கு பாஜகவுக்குப் பிரதானப் பங்கு உண்டென்றாலும், பிராந்தியக் கட்சிகள் பலவும் காங்கிரஸைப் பெரிதாக மதிக்காததும் ஒரு காரணம். ஆட்சி அதிகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ருசி கண்டுவிட்ட இந்தக் கட்சிகள், தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துகொள்ளும் தகுதிகளை வளர்த்துக்கொண்டுவிட்டன. அந்தக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தற்போது தேவைப்படவில்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு, அதே பாணியில் ஒருபக்கம் அரசியலை நடத்திக்கொண்டும் இன்னொரு பக்கம் அதிதீவிர இந்துத்துவக் கொள்கையைச் செயல்படுத்தியும் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அவல நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சி, புதுவடிவம் எடுத்தாக வேண்டும் என்ற திடீர் முனைப்போடு செயல்படுவதற்கு இப்போதுதான் திட்டம்தீட்டுகிறது. உதய்பூர் மாநாடு அந்தத் திசைவழியில் பயணிக்க முடிவு செய்திருப்பதாகத்தான் தெரிகிறது. இந்த மாநாட்டுக்கு முன்பு சோனியா காந்தி ஒரு முக்கியப் பிரச்சினையை எதிர்கொண்டார். அவரது கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவருக்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். இந்த 23 பேரும் கட்சியில் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்காக இருந்தவர்கள். இந்த நெருக்கடி சோனியாவுக்கு மிகுந்த தலைவலியைக் கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான் உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றவுடன் துரிதமாக அவர் களத்தில் இறங்கியிருப்பதுபோல் தெரிகிறது.
அதன் முதல்கட்ட நடவடிக்கையாக பிரசாந்த் கிஷோரை வரவழைத்து மிகப் பெரிய ஆய்வை மேற்கொண்டார். பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளைக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து, அதற்குப் பிறகுதான் கட்சியின் எல்லா ஊழியர்களும் கலந்துகொள்ளும்படியான மிகப் பெரிய மாநாடு நடத்தும் முடிவை சோனியா எடுத்திருக்கிறார். இந்தப் பின்னணியெல்லாம் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுமா என்ற கேள்விக்கு விடை தரவில்லை. ஆனால், உதய்பூர் மாநாட்டில் அந்தக் கட்சி எடுத்துள்ள முடிவுகள், எந்த அளவுக்குக் கட்சியின் உயிர்த்தலுக்கு உதவிசெய்யும் என்பதுதான் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம். அதனால், உதய்பூர் மாநாடு பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் மாநாடு எதையாவது நாட்டு மக்களுக்குத் தெரிவித்தது என்றால், அது ‘நாங்கள் வீழ்ந்திருக்கிறோம். ஆனால் எழுந்து வருவோம்’ என்ற செய்தியைத்தான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த உத்வேகத்துடன் மாநாட்டுத் தொடக்கவுரையை ஆற்றியிருக்கிறார். அவரது தொனி, பாஜக அரசை நேரடியாக எதிர்கொள்வது என்பதாகத்தான் தெரிகிறது. அங்கு கூடியிருந்த மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஒரு செய்தி கிடைத்தது. சோனியா காந்தி மிகத் தெளிவாகவும் ஆக்ரோஷத்துடனும் இருக்கிறார் என்பதும், நாம் வழக்கம்போல் பானையை உருட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். ‘செய் அல்லது செத்து மடி’ என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.
உதய்பூர் மாநாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, பாஜக அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம். இரண்டு, காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரத் தீர்மானங்கள். மூன்று, கட்சியின் ஸ்தாபனத்தில் செய்யவிருக்கும் பெரிய மாற்றங்கள். பாஜக அரசு மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால், அதன் கடுமை புதிது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிருகத்தனமானது என்று சோனியா காந்தி வர்ணித்திருக்கிறார். பாஜக அரசு நாட்டை முற்றாகப் பிளவுபடுத்திவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸில் சிறு பகுதியினர் மென்மையான இந்துத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். சோனியாவின் பேச்சு அவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் மதவாதிகளிடம், சாதிய, சமூக சக்திகளிடம் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து மதவாதக் குழுக்கள் மட்டும் நீக்கப்பட்டுவிட்டன.
எந்த காங்கிரஸ் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியதோ அதே கட்சி அதைத் திருத்தியமைக்க வலியுறுத்துகிறது. காங்கிரஸ் அரசு 2014-ல் 50% முடித்திருந்த கொள்கைகளைத்தான் தற்போது பாஜக அரசு நிறைவேற்றிவருகிறது. ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி, வங்கிகள் புனரமைப்பு, எல்.ஐ.சி. பங்குகளை விற்பது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எல்லாமே காங்கிரஸ் விட்டுச்சென்ற கொள்கைகள்தான். பொருளாதாரக் கொள்கைகளில் எவையெவற்றை முற்றிலும் கைவிடுவீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு வெள்ளை அறிக்கையை நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்காமல் பெரிய நம்பிக்கை காங்கிரஸ் கட்சிமீது வராது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்கும் தீர்மானம் சரியானது. அதைப் போலவே சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தக் கோருவதும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பட்டியலின, பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யும் எண்ணமும் சரியே. பொருளாதாரக் கொள்கைகள் உழைக்கும் மக்கள் சார்பாக மாற்றப்படும் எண்ணம் சரியானது. ஆனால், அதற்கான செயல்திட்டம் என்ன என்று காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
கட்சி ஸ்தாபனத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கலாம். ஒரு குடும்பம், ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்குக் கீழானவர்களுக்கு 50% ஒதுக்கீடு போன்ற பல சீர்திருத்தங்களை காங்கிரஸ் மாநாடு கொண்டுவந்திருக்கிறது. இவை நல்ல முயற்சிகளே. ‘மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சேர்ந்திருங்கள்’ என்றும் ‘நாட்டு மக்கள் படும் துயரங்களுக்கு வீதியில் இறங்கிப் போராடுங்கள்’ என்றும் காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்வதற்கு உதய்பூர் மாநாடு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், இதைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் உண்மையாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரள மாட்டார்கள்.
இவை எல்லாவற்றையும்விட, இந்தியத் தொழில்துறை வர்க்கம் மீண்டும் காங்கிரஸை நாடுமா என்ற கேள்வியும் காங்கிரஸின் வெற்றிப் பாதைக்கு நடுவே ஒரு சுவராக இருக்கும். அதானியின் அதீதமான வளர்ச்சி கார்ப்பரேட்டுகளுக்கிடையே பிளவைத் தூண்டினால் அது காங்கிரஸுக்குச் சாதகமாகலாம். என்னதான் மக்கள் வாக்களித்து அரசு ஏற்படுவதாக இருந்தாலும், இன்று மிக வலிமையுடன் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதானே பிரதானம்.
- கு.பாஸ்கர், தொடர்புக்கு: baskar6052@gmail.com