போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பு!: நோம் சாம்ஸ்கி பேட்டி

போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பு!: நோம் சாம்ஸ்கி பேட்டி
Updated on
3 min read

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மனித குலத்தின் பெரும்பகுதியினரை உலுக்கியிருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் முக்கியப் போர்க்குற்றங்களில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று ‘Truthout’ இணைய இதழுக்கான பிரத்யேகப் பேட்டியில் உலகின் தலைசிறந்த அறிவிஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கி கூறியிருக்கிறார். அவரது பேட்டியிலிருந்து...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம், உக்ரைன் தொடர்பான ‘சிவப்பு எல்லை’க்கான பாதுகாப்புக் கோரிக்கைகளை வாஷிங்டன் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுத்ததன் மூலம் புடின் மிகவும் கொதிப்படைந்தார் என்பதற்கான ஏராளமான அறிகுறிகள் உள்ளன. அவர் படையெடுப்பைத் தொடங்க ஏன் முடிவுசெய்தார் என்று நினைக்கிறீர்கள்?

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஒரு பெரிய போர்க்குற்றம். இது ஈராக்கின் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கும், 1939 செப்டம்பரில் நிகழ்ந்த போலந்துக்கு எதிரான ஹிட்லர் - ஸ்டாலின் படையெடுப்புக்கும் நிகரானது. போருக்கான காரணங்களைத் தேடுவது அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால், இதில் எந்த நியாயமும் இல்லை. இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். புடினின் சிந்தனை ஓட்டங்கள் குறித்த ஏராளமான குறிப்புகள் இப்போது வெளியாகின்றன. இவை அனைத்தும் துல்லியமாக இருக்கலாம். ஆனால், வேறு சில சாத்தியக்கூறுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய விவகாரங்களுக்கான நிபுணர்களுள் முக்கியமானவரும், ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதருமான ஜேல் மேட்லாக் உக்ரைன் போருக்கு முன்பு இப்படிக் கூறியிருக்கிறார்: “‘நேட்டோவில் மேலும் உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. முக்கியமாக, உக்ரைன் மற்றும் ஜார்ஜியா நாடுகளை நேட்டோவில் சேர்ப்பதில்லை’ என்னும் உறுதிமொழியை புடின் கோரியிருந்தார். பனிப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நேட்டோ கூட்டணியின் விரிவாக்கம் இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது ரஷ்யாவை உள்ளடக்கிய ஐரோப்பாவில் ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இணக்கமாக விரிவாக்கம் ஏற்பட்டிருந்தாலோ தற்போதைய நெருக்கடிக்கு எந்த அடிப்படையும் இருந்திருக்காது".

நீண்ட காலத்துக்கு முன்பு நான் கற்றுக்கொண்ட பாடம் நினைவுக்கு வருகிறது. 1960-களின் பிற்பகுதியில், தெற்கு வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணியின் (அமெரிக்கர்களின் பரிபாஷையில் ‘வியட் காங்’) சில பிரதிநிதிகளுடன் ஐரோப்பாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றேன். இந்தோ சீனாவில் அமெரிக்கா இழைத்த கொடூரக் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்த குறுகிய‌ போராட்டக் காலம் அது.

வன்முறையான எதிர்வினை மட்டுமே அமெரிக்கா இழைத்த கொடூரங்களுக்குச் சரியான பதிலடியாக இருக்கும் என சில இளைஞர்கள் கோபம் பொங்கச் சொன்னார்கள். பிரதான தெருக்களில் ஜன்னல்களை உடைத்தல், ராணுவப் பயிற்சி மையங்களில் குண்டுகளை வீசுதல் இப்படி. இதற்குக் குறைவான எதனையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வியட்நாமியர்கள் இதை வேறுவிதமாக அணுகினார்கள். எதிர் வன்முறை நடவடிக்கைகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் ஒரு பயனுள்ள எதிர்ப்பின் மாதிரியை முன்வைத்தனர். வியட்நாமில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் கல்லறைகளில் வியட்நாமியப் பெண்கள் அமைதியாக‌ப் பிரார்த்தனை செய்தார்கள்.

அமெரிக்காவுக்கு எதிராக எம்மாதிரியான நடவடிக்கைகளை அமெரிக்க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டார்களோ அதில் வியட்நாமியர்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் உயிர்வாழ விரும்பினார்கள். இந்தப் பாடங்களை எதிர்காலத்துக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இப்போது நாம் கவனம் கொள்ள வேண்டியது.

இதற்கிடையில் கொடூரமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தங்கள் தாயகத்தைத் துணிச்சலுடன் பாதுகாப்பவர்களுக்கும், பயங்கரங்களிலிருந்து தப்பிப்பவர்களுக்கும், தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் பொருட்படுத்தாது தங்கள் அரசின் குற்றத்தைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட ஆயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கும் அர்த்தமுள்ள ஆதரவை நாம் வழங்க வேண்டும். பூமி எதிர்கொள்ளும் மிகப் பெரும் சுற்றுச்சூழல் பேரழிவைக் கட்டுப்படுத்த பெரும் வல்லரசுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இந்தப் பேரழிவு (ரஷ்ய -உக்ரைன் போர்) நிகழ்ந்துள்ளது.

கொசாவா, இராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தொடர்ச்சியாக நிகழ்த்திய சட்ட மீறல்களை புடின் தனது பிப்ரவரி 24 உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். உக்ரைன் மீது படையெடுத்ததற்காக புடின் கோரும் சட்ட நியாயங்கள் குறித்தும், பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேசச் சட்டங்களின் நிலை குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

அமெரிக்க உயரதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, நேட்டோவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பையும், லிபியாவின் மீதான குண்டுவீச்சையும் ஐ.நா. சபையில் தனது வீட்டோவைப் பயன்படுத்தாமல் ரஷ்யா அனுமதித்தது. ரஷ்யாவுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், ரஷ்யாவின் கூட்டாளியான செர்பியாவின் மீது அமெரிக்கா நிகழ்த்திய குண்டுவீச்சு நிகழ்வுதான் பனிப்போருக்குப் பிந்தைய ஐரோப்பியப் பாதுகாப்பு ஒழுங்கை அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சியில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் சர்வதேசச் சட்டத்தின் நிலையானது எழுத்தில் அப்படியேதான் உள்ளது, செயலில் அல்ல. சர்வதேசச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று முன்னாள் அதிபர் கிளின்டன் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘‘முக்கியமான சந்தைகள், எரிசக்தி விநியோகங்கள், ராணுவரீதியிலான வளங்கள் ஆகியவற்றுக்கான தடையற்ற வழிகளை உறுதிசெய்தல்’’ போன்ற முக்கிய நலன்களைப் பாதுகாப்பதற்கு ‘‘ஒருதலைப்பட்சமாக ராணுவ சக்தியைப் பயன்படுத்துவது’’ உட்பட, ‘‘தேவைப்படும்போது ஒருதலைப்பட்சமாக’’ செயல்படுவதற்கான உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது என்று கிளின்டனின் கோட்பாடு அறிவித்தது. அவருக்குப் பின்வந்த அதிபர்களும்கூட சட்டத்தை மீறக்கூடியவர்களாகத்தான் இருந்துவந்திருக்கிறார்கள்.

ரஷ்யப் படையெடுப்பின் நோக்கம், ஜெலென்ஸ்கி அரசாங்கத்தை அகற்றி அதன் இடத்தில் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை நிறுவுவதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், என்ன நடந்தாலும், வாஷிங்டனின் புவியரசியல் விளையாட்டுகளில் ஒரு சிப்பாய் ஆவதற்கான‌ உக்ரைனின் முடிவு, அதற்கு ஒரு சிக்கலான எதிர்காலத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு வழிவகுக்கவோ - அல்லது ரஷ்யாவுக்குள் புடினின் கட்டுப்பாட்டைக் குறைக்கவோ, கூடவே கியூபா, வெனிசுலா மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளிலும் சீர்குலைவு ஏற்படுத்தவோ செய்யுமா?

உக்ரைன் மிகவும் நியாயமான தேர்வுகளைச் செய்திருக்கவில்லை. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இருக்கும் விருப்பங்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்புபோல‌ உக்ரைனுக்கு இல்லை. ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள் சீனாவை நோக்கி அதைத் தள்ளும் என்று நான் சந்தேகிக்கிறேன். ரஷ்யாவின் நிதி அமைப்புகளால் அவற்றுக்கெதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள முடியுமா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தப் படையெடுப்பு ரஷ்யாவுக்கும் (சீனாவுடன் கூட்டணியில் இணைந்தும்) மேற்கு நாடுகளுக்கும் இடையே நீடித்த போட்டியின் புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்று நினைக்கிறீர்களா?

இதுவரை சீனா தனது பங்கை நிதானமாகவே ஆற்றிவருகிறது. விரிவடைந்துவரும் உலகளாவிய அமைப்புக்குள் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் சமீபத்தில் அர்ஜென்டினாவையும் இணைத்திருக்கிறது.

நாம் ஏற்கெனவே விவாதித்தபடி போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பாகும். அங்கு வெற்றியாளர்களே இல்லை. மனித வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அதை மறுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.

- Truthout.org இதழின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. சுருக்கமாகத் தமிழில்: செ.சண்முகசுந்தரம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in