மு.சி.பூர்ணலிங்கம்: ஜஸ்டிஸ் இதழிலிருந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை

மு.சி.பூர்ணலிங்கம்: ஜஸ்டிஸ் இதழிலிருந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை
Updated on
2 min read

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான தமிழ் அறிஞர்களுள் மு.சி.பூர்ணலிங்கமும் (1866-1947) ஒருவர். தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச் செய்த ஆங்கிலப் பேராசிரியர் மு.சி.பூர்ணலிங்கம்.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள முந்நீர் பள்ளம் என்ற கிராமத்தில் சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினருக்கு 1866, மே மாதம் 24-ம் தேதி பூர்ணலிங்கம் பிறந்தார். தனது தந்தையின் ஆசிரியரான செல்லப் பெருமாளிடமே இவரும் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மேலப்பாளையம் பள்ளியில் சுந்தரம் என்ற ஆசிரியரிடம் இலக்கணமும் திருக்குறளும் ஆழமாக கற்றுத்தேர்ந்தார். அடிப்படைத் தமிழ் அறிவினைப் பெற்ற பெருமகனார் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள தருவை என்ற கிராமத்தில் அமைந்திருந்த பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் பூர்ணலிங்கம் புலமை மிக்க மாணவராக அறியப்பட்டார். குடும்ப வறுமையால் தொடர்ந்து படிக்க முடியாமல் பரமக்குடியில் உள்ள முன்சீப் கோர்ட்டில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது படிப்பு ஆர்வத்தையும் இவரது தமிழார்வத்தையும் ஆங்கிலப் புலமையையும் பற்றி அறிந்த இந்துக் கல்லூரி முதல்வர் விங்ளேர், இவர் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு உதவியாக இருந்தார். பட்ட மேற்படிப்புக்காக சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் கல்லூரியில் புகழ்பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் மில்லர் இவருக்கு ஆங்கில ஆசிரியராக வாய்த்தது பின்னாளில் மொழியியல் சார்ந்த இவரது ஆய்வுகளுக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது.

பூர்ணலிங்கம் பாளையங்கோட்டை, சென்னை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பணியாற்றியபோது, ‘ஞான போதினி’ என்ற அறிவியல் இதழ் ஒன்றை நடத்தினார். இது தவிர, நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கிலப் பத்திரிகையிலும் ‘ஆந்திரப் பிரகாசிகா’ என்ற தெலுங்குப் பத்திரிகையிலும் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவாக 'Primer of Tamil Literature’ என்ற தலைப்பில் 1904-ல் பூர்ணலிங்கம் எழுதிய புத்தகம்தான் அவரது முதல் நூல். ‘பத்துத் தமிழ் முனிவர்கள்’, ‘இராவணப் பெரியோன்’, ‘சூரபதுமன் வரலாறு’ உள்ளிட்ட முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் 32 நூல்களும் தமிழில் 18 நூல்களும் மற்றும் சட்ட நூல்களும் எழுதியுள்ளார்.

‘தமிழ் செம்மொழியே’ என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பூர்ணலிங்கம் உரையாற்றியுள்ளார். ஆகவே, தமிழுக்குச் செம்மொழி தகுதி அளித்திட வேண்டும் என்ற முழக்கமிட்ட தமிழ் அறிஞர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற வேண்டும். மேலும், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் பூர்ணலிங்கம்தான். இந்த நூல்தான் இன்று வரை தமிழ் ஆய்வுலகத்துக்கு ஆதார நூலாக விளங்கிவருகிறது. இந்திய வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்து பூர்ணலிங்கம் எழுதிய ‘Tamil India’ எனும் ஆங்கில நூல் 1927-ல் வெளியானபோது, அறிஞர்களின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும் பண்பாட்டையும் வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்று இந்நூல் கூறியிருக்கிறது.

1915-ம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று ஒரு பாடத்திட்டக் குழு இல்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பாடமே தேவையில்லை என்று சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவையில் பேசப்பட்ட காலம் அது. இதனை அறிந்த பரிதிமாற் கலைஞர், பூர்ணலிங்கம், தோட்டக்காடு ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டுக்கும் சென்று ஆதரவு திரட்டினார்கள். மேலும், மதுரை பாண்டித்துரையைச் சந்தித்து, மதுரை தமிழ்ச் சங்கத்தின் சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றும்படியும் கேட்டுக்கொண்டனர். பாண்டித்துரை இந்த மூவரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆசிரியர் சங்கக் கூட்டத் தீர்மானமும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொழிப் பாடமாகத் தமிழ் வைக்கப்பட்ட வரலாற்றில் பூர்ணலிங்கத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. 1938-39 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோரோடு பூர்ணலிங்கமும் தீவிரம் காட்டினார்.

பூர்ணலிங்கத்தின் தமிழ்ப் பணிகளை அவரது நூல்கள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் திறன் கொண்ட மு.சு.பூர்ணலிங்கம், நாம் மறந்துவிடக் கூடாத முக்கியமான தமிழ் ஆளுமைகளுள் ஒருவர்.

- சே.சோ.இராமஜெயம், கௌரவ விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம். தொடர்புக்கு: drramji1978@gmail.com

மே 24: தமிழறிஞர் மு.சி.பூர்ணலிங்கத்தின் பிறந்த நாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in