

இந்த நூல் பக்க அளவில் சிறியது. ஆயினும், பேசப்படும் பொருள் பரப்பளவில் மிகப் பரந்தது. உலக அளவிலான நோக்கோடு, சங்க இலக்கியம் முதல் சமகால சினிமா வரை தமிழ் நிலையில் தோய்ந்து ‘தமிழ் அழகியல்’ (Tamil Aesthetics) குறித்துப் புதிய விளக்கங்களை முன்வைக்கிறது. அது பற்றிய புதிய உரையாடல்களை முன்னெடுக்கிறது.
இந்நூலில் மொத்தம் ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘நாயக - நாயகி பாவம்: கடவுட் காதல்’ என்கிற முதல் கட்டுரை ‘காமப் பகுதி கடவுளும் வரையார் / ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்’ என்கிற தொல்காப்பிய நூற்பாவின் பொருளைத் தேடுகின்றது. சங்க இலக்கியத்தில் மனிதக் காதலைக் கூறும் பாடல்கள் உள்ளன; ‘கடவுட் காதல்’ பாடல்கள் இல்லை. ஆனால், மேலே எடுத்துக்காட்டிய நூற்பா ஏதோ ஒருவகையில் ‘கடவுட் காதலை’ப் பற்றி உரைக்கிறது எனப் பல்வேறு உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்நூலாசிரியர்கள் உரையாசிரியர்களின் அவ்விளக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். அந்நூற்பாவின் பொருள் உரையாசிரியர்கள் கூறுவது அன்று. சரியான பொருள் எதுவென்று தெளிய மேலும் ஆய்வுகள் தேவை எனக் கட்டுரையின் முடிவாகக் கூறுகின்றனர். இந்நூலின் இரண்டாவது, மூன்றாவது கட்டுரைகள் கைக்கிளை, பெருந்திணை பற்றியன. சங்க இலக்கிய ரசனையிலும் ஆய்விலும் அன்பின் ஐந்திணைப் பாடல்கள் பாராட்டிப் போற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒருதலைக் காமம்/காதலைப் பேசும் கைக்கிளைத் திணைப் பாடல்கள் குறித்தும், பொருந்தாத காமம்/காதலைப் பேசும் பெருந்திணைப் பாடல்கள் குறித்தும் ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. கைக்கிளையையும் பெருந்திணையையும் பற்றிய வழக்கமான புரிதலுக்குப் பதிலாக, அவற்றை ஆழமாக எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீண்ட சுவையான விவாதத்தை இந்நூலாசிரியர்கள் நடத்தியுள்ளனர்.
இந்நூலின் கைக்கிளை பற்றிய கட்டுரை நக்கணையார் என்கிற பெண் புலவரின் பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இப்புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை என்றும், பெருங்கோழி நாய்கன் மகன் கண்ணனார் என்றும் இருவகையாகக் குறிப்பிடப்பட்டார். புலவரின் பெயருக்கான விளக்கங்களை நூலாசிரியர்கள் விரிவாக முன்வைக்கின்றனர். நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் உள்ள இப்புலவருடைய கைக்கிளைப் பாடல்கள் எவ்வாறு சிறந்த கவிதைகளாக விளங்குகின்றன எனவும் எடுத்துக்காட்டுகின்றனர்.
‘சங்க காலமும் சம காலமும்: சில பனுவல்கள், சில பார்வைகள்’ என்ற பெருந்திணை பற்றிய கட்டுரை, கலித்தொகை 65 பாடல்மீது கவனம் குவிக்கின்றது. இப்பாடல், இரவு நேரத்தில் தலைவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவியிடம், தொழுநோயாளியான முதியோர் ஒருவர் காமம் மிகுந்து தலைவியை இச்சித்து அழைத்தது பற்றியது. இந்தப் பாடலை, சுந்தர ராமசாமியின் ‘வாசனை’ என்ற சிறுகதையோடு இந்நூலாசிரியர்கள் ஒப்பிட்டும் காட்டுகின்றனர்.
இந்தச் சித்தரிப்புகளின் பின்புலத்தில் உள்ள மரபு முரணையும் சமூக முரணையும் விளக்கியுள்ளனர். மெய்ப்பாடு பற்றிய ‘நிமிர்ந்தோங்கிய நெடிய பயணம்: மனோரமாவும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகளும்’ என்கிற கட்டுரை மிகவும் சுவையான கட்டுரை. மெய்ப்பாடு குறித்த தொல்காப்பிய நோக்குநிலை நின்று, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகளின் மெய்ப்பாட்டு அமைவு குறித்து இந்நூலாசிரியர்கள் விளக்குகின்றனர். ‘விலக்கு: தமிழ்க் கவிதையியலின் ஒரு கூறு’ என்ற கட்டுரை ‘பல்வகைக் கூத்தும் விலக்கின் புணர்த்து’ என்ற தொடரில் உள்ள ‘விலக்கு’ சொல்லின் பொருளைத் தேடுவதில் தொடங்குகின்றது.
‘விலகிச் சென்று மீண்டும் இணையும்’ ஒரு படைப்பாக்க உத்தி என்று விளக்குகின்றனர். மேலும், இந்த உத்தி மேற்கத்திய இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளனர். அத்துடன் சிலப்பதிகாரம், பிரதாப முதலியார் சரித்திரம், தஞ்சை வட்டார இரணிய நாடகம், தமிழ்த் திரைப்படங்கள் ஆகியவற்றில் இந்த உத்தி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதையும் விளக்கியுள்ளனர். இந்த விலக்கு என்கிற உத்தியை இந்த ஆய்வு நூல் முழுவதிலும்கூடக் கையாண்டுள்ளனர் என்பதை நிதானமாக வாசிக்கும்போது கண்டுகொள்ள முடிகின்றது.
நீண்ட தொன்மைக்காக மட்டுமில்லாமல், நம் காலத்திலும் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவும் தமிழ் மரபின் தொடர்ச்சியை இந்நூல் வாசிப்பின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகின்றது. தமிழியல் பரப்பின் மிக முக்கியமான ஆய்வு நூல்களில் ஒன்றாக இந்நூல் விளங்கும்.
கடவுட் காதல்: தமிழ் கவிதையியலில் புதிய பார்வைகள்
சுந்தர் காளி – பரிமளம் சுந்தர்
வெளியீடு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113
விலை: ரூ.70
தொடர்புக்கு: 044-22542992