

அனைத்து ஏழைகளுக்கும் 2024-க்குள் ஊட்டமேற்றப்பட்ட அரிசி (Fortified rice) விநியோகிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர நாளன்று அறிவித்தார். பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்குத் தீர்வாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ. 2,700 கோடி ரூபாய் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது.
ஜார்கண்ட், 26 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடிகள் வாழும் மாநிலம். அந்தப் பழங்குடிகளிடையே சிக்கிள் செல் நோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. ரத்த நோய் இருப்பவர்கள் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (இந்திய உணவுப் பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம்) ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால், ஜார்கண்டில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் அனைவருக்கும் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுவருவதாக ‘ஆஷா’ (நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு-ASHA) உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழ்நாட்டில் முன்னோடித் திட்டமாக திருச்சி மாவட்டத்தில் 2020 அக்டோபர் முதல் பொது விநியோகத் திட்டத்தில் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்த அரிசியை பிளாஸ்டிக் அரிசி என்று மக்கள் அழைக்கின்றனர். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதே நேரம், மற்றொரு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காகப் பெறப்பட்ட ஊட்டமேற்றப்பட்ட அரிசியின் தரம், நாள்பட்டதால் குறைந்துவிட்டது. அதில் 5 லட்சம் கிலோவை கால்நடைத் தீவனமாக விற்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு இறுதியில் முடிவுசெய்தது. ஊட்டமேற்றப்பட்ட அரிசியை நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதை இந்த விவகாரம் சுட்டிக்காட்டுகிறது. மேற்கண்ட பிரச்சினைகளின் பின்னணியில் ஊட்டமேற்றப்பட்ட அரிசிமீது கவனம் குவிந்துள்ளது.
முரண்பாடுகளும் ஆபத்துகளும்: நமது உடலில் நொதிகளும் ஹார்மோன்களும் சுரப்பதற்கு நுண்ணூட்டச் சத்துகளே உதவுகின்றன. அந்த வகையில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துகளை உணவு தானியங்களில் கலந்து, அவற்றின் மூலம் மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க முயல்வதே ஊட்டமேற்றப்பட்ட அரிசிக்கான அடிப்படை. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, பி-1, பி-2, பி-3, பி-6, பி-12 ஆகியவற்றை ‘Extrusion’ எனும் நடைமுறை மூலம் தானியங்களில் கலந்து ஊட்டமேற்றப்படுகிறது.
மத்திய உணவு அமைச்சகம் கூறுவதன்படி இந்தியாவில் பெண்கள், குழந்தைகளிடையே மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவிவருகிறது. நாட்டில் இரண்டில் ஒரு பெண் ரத்தசோகையாலும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சிக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் களைவதற்கு அரிசி ஊட்டமேற்றுதல் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது.
ஆனால், ஊட்டமேற்றுதலுக்கு அரசு முன்வைக்கும் காரணங்கள் அல்லது ஊட்டமேற்றுதல் மூலம் கிடைக்கும் தீர்வுகள் ஆதாரமற்றவையாக இருக்கின்றன. “இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட 4 ஆய்வுகள் உட்பட உலகளாவிய 17 ஆய்வுகளின்படி வைட்டமின், கனிமச்சத்து ஊட்டமேற்றப்பட்ட அரிசியை உண்டவர்களின் ரத்தசோகையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்கிறார் ‘ஆஷா’வின் இணை ஒருங்கிணைப்பாளர் உஷா சூலபாணி. ஹைதராபாதில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ரத்தசோகைக்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. கிராமப்புறத்தில் வாழும் ஏழைக் குழந்தைகளிடையே ரத்தசோகை அதிகம் காணப்படுகிறது. ஆனால், நகர்ப்புற – பணக்காரர்களிடையே இரும்புச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது.
ஏற்கெனவே, உப்பில் 1980-கள் முதல் அயோடின் கலக்கப்பட்டுவருகிறது. ஒருவரது உடலில் தேவைக்கு அதிகமாக அயோடின் சேர்ந்தாலும் சிறுநீர் போன்றவற்றின் வழியாக அது வெளியேறிவிடும். ஆனால், இரும்புச்சத்து போன்றவை அப்படி எளிதாக வெளியேறாது. எனவே, ஊட்டமேற்றப்பட்ட அரிசி ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிகல் நியூட்ரிஷன்’ - 2021 ஜூலை 28 இதழில் அனுரா குர்பத்தை முதன்மை ஆசிரியராகக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை எச்சரிக்கிறது.
கர்ப்பிணிகள் கூடுதலாக இரும்புச்சத்தை உட்கொள்வது, கருவையும் பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கலாம். பிறக்கும் குழந்தைகள் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கும் என்கிறது அந்த ஆய்வு. “ஏற்கெனவே சுகாதாரத் திட்டங்களில் இரும்புச்சத்துத் துணைமருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தப் பின்னணியில், எந்த உத்தரவாதமான பலன்களையும் தராத, ஆபத்தான அரிசி ஊட்டமேற்றுதல் தவிர்க்கப்பட வேண்டியது, வீண் செலவும்கூட” என்கிறார் மேற்கண்ட கட்டுரையின் இணைஆசிரியர் ஹெச்.பி.எஸ்.சச்தேவ்.
யாருக்கு லாபம்?: அரிசிக்கு ஊட்டமேற்றுதலைக் கட்டாயப்படுத்துவது, அது சார்ந்த மிகப் பெரிய சந்தையை உருவாக்கும். அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3.4 கோடி டன் (டன் = ஆயிரம் கிலோ) அரிசி தேவைப்படுகிறது. அரிசியில் ஊட்டமேற்றுவதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.73 காசு செலவிடப்படும். ஒரு கிலோவுக்கு என்று பார்க்கும்போது இது குறைவான தொகையாகத் தெரிந்தாலும், பல கோடி கிலோ அரிசி வாங்கப்படும்போது, விலை பல நூறு கோடி அதிகரித்துவிடும். மக்களைவிட தொழில் நிறுவனங்களுக்கே ஊட்டமேற்றுதல் அதிக லாபத்தைத் தரக்கூடும் என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
உலகில் ஜெர்மனியின் பி.ஏ.எஸ்.எஃப்., சுவிட்சர்லாந்தின் லோன்ஸா, ஃபிரான்சின் அடிஸ்ஸோ, நெதர்லாந்தின் ராயல் டி.எஸ்.எம்., ஏ.டி.எம். ஆகிய ஐந்து பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே செயற்கையாக நுண்ணூட்டச் சத்துகளை உற்பத்திசெய்கின்றன. அவர்களுக்கு உத்தரவாதமான லாபம் கிடைக்கும் அதே நேரம் சிறு, குறு அரிசி உற்பத்தியாளர்கள் நாடெங்கிலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
தேவையற்ற கவனம்: பொதுவாக, நேரடி உணவு வகைகளில் உள்ள சத்துகளை உடல் மேம்பட்ட வகையில் கிரகித்துக்கொள்கிறது. சிலருக்குக் குறிப்பிட்ட சத்துகள் பற்றாக்குறை ஏற்படும்போது, தரப்படும் சத்து மாத்திரைகள், துணைமருந்துகளிலிருந்து நுண்ணூட்டச் சத்து கிரகித்துக்கொள்ளப்படும் விகிதம் குறைவு என்பதை மருத்துவ ஆய்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஊட்டமேற்றப்பட்ட அரிசியிலும் அதுவே உண்மை.
ஊட்டமேற்றப்பட்ட அரிசியை அரசு பரவலாக்கிவரும் நிலையில், பிரபல வடஇந்திய அரிசி நிறுவனம் ஒன்று பாசுமதி அரிசியில் இரும்புச்சத்தை ஊட்டமேற்றி விற்கத் தொடங்கியுள்ளது. பருப்பு, காய்கறி எதுவும் இல்லாமல் இந்த அரிசியே போதுமான ஊட்டச்சத்தை வழங்கிவிடும் என்று அது விளம்பரப்படுத்துகிறது. இப்படி பிரபலப்படுத்தப்பட்டுவரும் ஊட்டமேற்றப்பட்ட அரிசியை, ஒரு நாளைக்கு 250-350 கிராம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கூற்றுகள் முற்றிலும் அறிவியல் அடிப்படை அற்றவை. ஒரு இந்தியருக்கான ஆரோக்கியமான உணவுத்தட்டில் 40% மட்டுமே தானியங்கள் இடம்பெற வேண்டும். அந்த தானியங்களில் அரிசியின் அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்கிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்.
என்ன தீர்வு?: அரிசியைத் தாண்டி எத்தனையோ தானியங்கள் உள்ளன. உணவு உட்கொள்ளலைப் பன்முகப்பட்டதாக மாற்றாமல், வெறுமனே ஒரு தானியத்துக்கு ஊட்டமேற்றுவதால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நம்புவது சரியல்ல. ஊட்டமேற்றப்பட்ட உணவு வகைகளைக் கட்டாயமாக்குவதற்குப் பதிலாக, ஒருவருடைய சரிவிகித உணவை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
. இறைச்சி, விலங்கு சார்ந்த உணவு, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும். . பிறந்த குழந்தையிடம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கு, முதல் ஆயிரம் நாட்களில் பாலூட்டுதலை உத்தரவாதப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். . வீட்டில் காய்கறிகளை வளர்க்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் என்பது மஹாராஷ்டிரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. . பதப்படுத்தப்படாத, பட்டை தீட்டப்படாத அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். பட்டை தீட்டப்படாத அரிசியில் நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.
உணவுப் பொருட்களைத் தொழில்நுட்பரீதியில் பதப்படுத்துவதை விதந்தோதுவதையும் ஊட்டச்சத்துப் பிரச்சினைகளுக்கு ஒற்றைத் தீர்வை முன்மொழிவதையும் அரசு நிறுத்த வேண்டும். செலவு குறைந்த, உள்ளூர் அளவிலான, பன்முகத் தீர்வுகளை மக்களிடையே முன்வைக்க வேண்டும். நீடித்த பலன்களைத் தரக்கூடிய இயற்கை சார்ந்த தீர்வுகளையும் உணவு பன்முகத்தன்மையையும் ஊக்குவிப்பதே ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உத்தரவாதமான பலன்களைத் தரும்.
- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in