Published : 19 May 2022 07:07 AM
Last Updated : 19 May 2022 07:07 AM

முதியவர்களைக் கைவிடுகிறோமா நாம்?

நள்ளிரவு ஒரு மணி இருக்கும்... தெரியாத எண்ணிலிருந்து என் கைபேசிக்கு அழைப்பு வந்தது. பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே ஊழியர் ஒருவர் கன்னடமும் தமிழும் சேர்ந்த மொழியில் சொன்னார் “சார், யாருன்னே தெரியல, வயசான ஒருத்தர், எந்த அடையாளமும் இல்ல, பேசறது ஒண்ணும் புரியல, தனியா ஸ்டேஷன்ல அலைஞ்சிட்டு இருக்கார், கையில உங்க பிரிஸ்கிரிப்ஷன் மட்டும்தான் இருக்கு, அவங்க ஃபேமிலி மெம்பரோட நம்பர் இருந்தா கால் பண்ணிச் சொல்ல முடியுமா?”

அந்த முதியவரின் பெயரைச் சொன்னதும், சட்டென அவர் யார் என எனக்குத் தெரிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த முதியவரை அவரது மகனும் மனைவியும் அழைத்துவந்தார்கள். ஆரம்பகட்ட மறதி நோயின் அறிகுறிகள் இருந்தன. கொஞ்சம் குழப்பமாக இருந்தார். மகனுக்கு பெங்களூருக்கு வேலை மாற்றலாகியிருந்தது; மருமகளுக்கு வீட்டிலிருந்தே வேலை. அதனால், அவர்கள் பெங்களூருக்கு மாற்றலாகிச் செல்வது என முடிவெடுத்திருந்தார்கள்.

அவர்களின் இரண்டு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள அம்மாவும் அவர்களுடன் வர வேண்டும். ஆனால், அப்பாவைக் கூட்டிச்செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதுவும் மறதிப் பிரச்சினையோடு இருக்கும் அப்பாவை அழைத்துச்சென்றால் அவரைச் சமாளிக்க முடியாது. ஏதாவது பிரச்சினை ஆகும் என நினைக்கிறார்கள். என்னிடம் கேட்டபோது அவருக்குக் கட்டாயமாக சக மனிதர்களின் துணை தேவை என்று நான் வலியுறுத்தியிருந்தேன். மகனும் சரியென்றுதான் சொல்லிவிட்டுப் போனார். ஆனால், அடுத்த இரண்டாவது நாளில் அந்தத் தந்தை ஒரு ரயில் நிலையத்தில் கைவிடப்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு தாய், அங்கு நிறையப் பிரச்சினைகள் செய்வதாக அவருடைய இரண்டு மகள்களும் என்னிடம் அழைத்துவந்தார்கள். திருமணம் முடிந்து தங்களது கணவருடைய குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்துவரும் மகள்கள், தாயைத் தூரத்து உறவினர் ஒருவரிடம் மாதச் செலவுக்குப் பணம் அனுப்பிப் பார்த்துக்கொள்ள ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். சிறு வயதிலேயே கணவரை இழந்த அந்த வயதான தாய்க்குத் தனது மகள்களை விட்டால் சொந்தம் என்று யாருமில்லை. இறுதிக் காலத்தில் மகள்களுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், கணவர் வீட்டில் அதற்குச் சம்மதமில்லை.

“எங்க அப்பா முகம்கூட எங்களுக்கு ஞாபகமில்ல சார், எங்கம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. ஆனா, இன்னிக்கு அவங்கள எங்களால பார்த்துக்க முடியல, வீட்ல ஒரு வாரம் வச்சிக்கிட்டாலே ஏதாவது பிரச்சினை பண்ணி வச்சிர்றாங்க. அதனால கூட வச்சுக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. இவங்களும் எங்க போனாலும் நிம்மதியா இருக்க மாட்டேங்குறாங்க... என்ன பண்றதுன்னே தெரியல சார்” என மகள்கள் அழும்போது, அந்தத் தாய் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கேட்டார் “நீங்கள்லாம் உங்க புள்ளங்ககூட சந்தோசமாதானே இருக்கீங்க. நானும் அப்படி இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?” -அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

வரும் காலத்தில் நாம் எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாக முதியோர் பராமரிப்பு இருக்கும். நவீன மருத்துவ முறைகளின் காரணமாக மனிதர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. அதன் விளைவாக, முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் 60 வயதைத் தாண்டிய முதியவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2021-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 13 கோடி. அடுத்த பத்தாண்டுகளில் இது 20 கோடியைத் தொடும் என்று தேசியப் புள்ளியியல் ஆணையம் கணிக்கிறது. 2050-ல் 15 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

உலகத்திலேயே மிக அதிகமான முதியோர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கப்போகிறது. கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முதியவர்களின் சதவீதம் மிக அதிகமாக இருக்கிறது. முதியவர்களைப் பராமரிக்க இயலாமல் கேரளம் இப்போதே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதிகரித்துவரும் முதியவர்களை எதிர்காலத்தில் இந்தியா எப்படிப் பராமரிக்கப்போகிறது என்பதுதான் அச்சமூட்டும் கேள்வி.

பொதுவாகவே, “இந்தியா என்பது முதியவர்களைக் கொண்டாடும் நாடு. இந்தியக் குடும்பங்கள் முதியவர்களின் மீது மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருப்பவை” என்று நாம் காலம்காலமாக நம்பிக்கொண்டிருப்பவை எல்லாம் தவறானவை என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. முதியவர்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு (International Network for Prevention of Elder Abuse [INPEA]) தனது 2016-ம் ஆண்டு அறிக்கையில், முதியவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மிக அதிகமாக நடக்கும் ஆசிய நாடாக இந்தியா இருக்கிறது என்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில் குடும்ப அமைப்பு என்பதே சுருங்கியிருக்கிறது. அதுவும் நகர்ப்புறக் குடும்பங்களின் பொருளாதாரச் சூழல் இன்னும் கடினமானது. அது முதியவர்களுக்கு அத்தனை இலகுவானதாகவும் இருப்பதில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில் முதியவர்களைப் பராமரிக்கும் பொறுப்புக்கு ஒரு குடும்பம் தள்ளப்படும்போது, பராமரிக்க நேரும் குடும்ப உறுப்பினர்கள் அந்த முதியவர்களைத் துன்புறுத்துவதன் வழியாகவே தங்களது மனவுளைச்சலைப் போக்கிக்கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களும் நெருக்கடிகளுமே முதியவர்களின் மீதான வன்முறைகளுக்கு முக்கியக் காரணம்.

வன்முறை என்றால், அது வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமே அல்ல. சிறு அவமதிப்பும் கடும் சொல்லும் நிராகரிப்பும் அலட்சியமும், முதியவர்களுக்கு எதிரான சிறு உடல் அசைவுகளுமேகூட உளவியல்ரீதியாக அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. முதியவர்களை எல்லா வயதினரும் பெரும்பாலான நேரம் நுட்பமாகத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த உளவியல் நெருக்கடிகள் முதியவர்களை மிக விரைவாகவே நோய்மையிலும் முதுமையிலும் தள்ளுகின்றன. அவர்கள் அங்கே மரணத்தை ஒரு விடுபடுதலாக எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

முதியவர்கள் பராமரிப்பு தொடர்பாக நமக்கு நீண்ட காலப் பார்வை அவசியமானது. “முதியவர்களைக் கைவிடும் குடும்பத்தினர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டு அணுகாமல், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன, முதியவர்களைப் பராமரிப்பதில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என்ன என்பதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்து, செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பு சிவில் சமூகமாக நமக்கு இருக்கிறது.

முதியவர்களைப் பராமரிப்பதில் குடும்பம் தன்னளவில் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும், இளைய தலைமுறையினருக்கு முதுமை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். முதியவர்களுடன் குழந்தைகள் உரையாடுவதையும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதையும் குடும்பம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முதியவர்களைக் கூட்டாகப் பராமரிக்கும் சமூகத்தை உருவாக்குவதைப் பற்றியும் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அதற்காக அரசு சாரா நிறுவனங்களையும் உள்ளடக்கித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

வாழ்நாளை நீட்டிப்பதை மட்டுமல்லாமல், நீடித்திருக்கும் வாழ்நாளில் மனநலத்தையும் மேம்படுத்த வேண்டியது நவீன அறிவியலின் பொறுப்பு. அதனால் ஒரு தரமான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை முதியவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

To Read this in English: Are we so morally bankrupt as to forsake the aged?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x