

அருங்காட்சியகங்களில் பல துறைகள் கொண்ட காட்சிக்கூடங்கள் இருந்தாலும் ஓர் இயற்கை ஆர்வலனாக நான் விரும்பும் பகுதி விலங்கியல் கூடங்கள்தான். காட்டுயிர்களை உயிருடன் அவற்றின் இயற்கையான வாழிடங்களில் மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு, பாடம்செய்துவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உடல்களைப் பார்ப்பது ஒருவேளை மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். ஆயினும், கண்ணாடிக் கூண்டில் உள்ள, பளிங்குக் கண்கள் பொருத்தப்பட்ட, கண்ணாடிக் குடுவையில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் பதப்படுத்தப்பட்ட, நிறங்களை இழந்த, சில வேளைகளில் கோரமாகத் தோற்றமளிக்கும் இறந்துபோன உயிரினங்களின், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கியத்துவத்தை அறிந்தால் நிச்சயமாக நாம் ஆச்சரியமடைவோம்.
அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்காகப் பாடம்செய்த உடல்களை வைத்திருந்தாலும், அந்த உயிரினங்களின் உபரியான சேகரிப்புகளைப் பதப்படுத்தி, பத்திரமாகப் பெட்டிகளுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். இவற்றுக்குக் காப்பு சேகரிப்புகள் (Reserve collection) என்று பெயர். இவை யாவும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல அறிவியல் கேள்விகளுக்கு விடையளிக்கப் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக, சரியான விவரங்களைக் கொண்ட (அந்த உயிரினம் சேகரிக்கப்பட்ட நாள், இடம், சேகரித்தவரின் பெயர் முதலான), பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து, முறையாகப் பாடம்செய்யப்பட்ட, உயிரின சேகரிப்புகளிலிருந்து அவற்றின் டி.என்.ஏ.வைக்கூட ஆராய்ச்சியாளர்கள் பிரித்துள்ளனர். இது அந்த உயிரினங்களின் வகைப்பாட்டியலுக்கும், அவை பரவியிருந்த நிலப்பகுதி குறித்த புரிதலுக்கும், அவற்றின் எண்ணிக்கை சார்ந்த விளக்கங்களுக்கும், பரிணாமவியல் கோட்பாடுகளுக்கும் விடையளிக்கும். உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் (field guids) எழுதும்போது, அவற்றுக்கான விளக்கப்படங்களை (illustrations) வரைவதற்குப் பாடம்செய்யப்பட்ட உடல்களே (இன்று வரையில்) பேருதவி புரிகின்றன.
அண்மையில், தமிழ்நாட்டில் உள்ள பறவை வகைகளின் பட்டியலைத் தயாரிக்கும்போது, சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பறவைகள், விலங்கியல் கூடத்தின் பழைய குறிப்பேடுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் சுமார் 530 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒளிப்படக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்தில் பறவைகள் சுடப்பட்டு அல்லது பிடிக்கப்பட்டுப் பாடம்செய்து வைக்கப்பட்டன. இதுபோல பல பறவையியலர்கள் சேகரித்த பறவைகள், பாடம்செய்யப்பட்ட நிலையில் உலகின் பல அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விவரங்களை (சில வேளை படங்களுடன்) அந்தந்த அருங்காட்சியகங்கள் அவற்றின் வலைதளங்களில் அனைவரும் காணும்படியாகப் பதிவேற்றம் செய்துள்ளன. இப்படி, தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்தப் பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்களின் (bird skins) விவரங்கள் Vertnet (www.vertnet.org) போன்ற இணையதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், சுமார் 30 வகையான பறவைகளின் விவரங்கள் (அதாவது இங்கிருந்து சேகரிக்கப்பட்ட பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்கள்) சென்னை அருங்காட்சியகத்தின் குறிப்புகளிலும் சேகரிப்பிலும் மட்டுமே உள்ளன. இவற்றின் விவரங்கள் உடனடியாக இணையத்தில் கிடைப்பதில்லை. இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
அருங்காட்சியகங்களில் உள்ள பாடம்செய்யப்பட்ட உயிரினங்களின் விவரங்களைப் பொதுவெளியில் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுவளப் புத்தாக்க உரிமத்தின் கீழ் (creative commons liscense) வெளியிட வேண்டும். உலகில் பல அருங்காட்சியகங்கள் இந்த வழியைப் பின்பற்றி, அவர்களது தரவுகளை எண்வய (டிஜிட்டல்) வடிவில் தயார்செய்து, விக்கிபீடியா போன்ற பொதுவகங்களில் பதிவேற்றியுள்ளனர். எடுத்துக்காட்டாக, நெதர்லாந்தில் உள்ள தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (Naturalis Biodiversity Center) உள்ள எல்லா உயிரினங்களின் படங்களும் விவரங்களும் GLAM Wiki (‘Galleries, Libraries, Archives, and Museums’ with Wikipedia) எனும் திட்டத்தின் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளன.
இவற்றில் இந்தியாவில் உள்ள முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் இமயமலைக் காடையின் (Himalayan Quail) பாடம்செய்யப்பட்ட உடலை 360o கோணத்தில் தெளிவாகக் காட்டும் காணொளியும் அடக்கம். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், அருங்காட்சியக அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் புதுடெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முன்னெடுப்புகளை இந்தியாவில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான போதுமான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.
இயற்கைக் கல்வியையும் உயிரியலையும் கள அனுபவத்தின் வாயிலாகவும் பரிசோதனைக் கூடங்களிலும் சொல்லிக்கொடுப்பது நல்லது. அருங்காட்சியகங்களில் நேரத்தைச் செலவிடுவதாலும் பல அறிவியல் சார்ந்த கருத்துகளையும் நாம் நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நாம் நூலில் படிக்கும், படத்தில் பார்க்கும் பல உயிரினங்களை, அவற்றின் சரியான உருவ அளவை அறிந்துகொள்ளவும், அருகில் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அருங்காட்சியக அதிகாரிகளும், பொதுமக்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் காட்சியமைப்புகளைச் சிறந்த முறையில் அமைக்க வேண்டும்.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் மேலதிக விவரங்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள சிறந்த ஒலி-ஒளிக் காட்சி அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அரதப்பழசான பாடம்செய்யப்பட்ட உடல்களை அகற்றி, புதியனவற்றை வைக்க வேண்டும். இந்தியக் காட்டுயிர் சட்டம் 1972-ன்படி எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது. ஆகவே, இதற்கு முன்பு இருந்ததுபோல் உயிரினங்களைக் கொன்று அவற்றின் உடல்களைச் சேகரிக்க முடியாது. ஆயினும் உயிரியல் பூங்காக்களில் இயற்கையாக மரணமடையும் உயிரினங்களையும், சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் உயிரினங்களையும் தகுந்த முன்அனுமதி பெற்றுப் பாடம்செய்து காட்சியமைப்புகளை மேம்படுத்தலாம்.
இதற்கு வனத் துறையின் ஒத்துழைப்பும் அவசியம். அருங்காட்சியகங்களில் உள்ள காட்சியமைப்புகளில் உயிரினங்களின் சரியான விவரங்களை அளிப்பது அவசியம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உயிரினங்களின் சரியான தமிழ்ப் பெயர்களைக் கொடுக்க வேண்டும். சென்னை அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் மாநிலப் பாலூட்டியான வரையாட்டுக்கு நீலகிரிக் காட்டு வெள்ளாடுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் அருங்காட்சியகங்களில் சரியான தகவல்களைக் கொடுப்பது மிகவும் அவசியம். அருங்காட்சியகங்கள் நம் அறிவை விசாலமாக்கும் இடங்கள். அதைத் தொடர்ந்து சரியான வகையில் பராமரிப்பதும் மேம்படுத்துவதும் அரசின் கடமை. அதுபோலவே, அங்கு எளிதில் கிடைக்கும் அரிய தகவல்களையும் அறிவையும் பயன்படுத்திக்கொள்ளுதல் நம் அனைவரின் கடமை.
- ப.ஜெகநாதன், பறவையியலர். தொடர்புக்கு: jegan@ncf-india.org
மே-18: உலக அருங்காட்சியக நாள்