Published : 17 May 2022 07:08 AM
Last Updated : 17 May 2022 07:08 AM
இருபத்தெட்டு ஆண்டு காலமாகப் பேசப்பட்டுவரும் எல்.ஐ.சி. பங்கு விற்பனை முதன்முறையாக அரங்கேற்றப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் மே 4 அன்று 3.5% அரசின் பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
யாருக்கு மகிழ்ச்சி?
இதுதான் இந்தியாவிலேயே இதுவரை நடந்த பங்கு விற்பனைகளிலேயே முதன்மையானது என்று பெருமை பேசப்படுகிறது. இந்தப் பங்கு விற்பனை ரூ. 21,000 கோடிகளைத் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டத் திணறிக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். இவ்வளவு பிரம்மாண்டமான நிறுவனத்தில் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதால், இந்தியப் பெரும் தொழிலதிபர்களும் மகிழ்ச்சி அடையலாம்.
எல்.ஐ.சி. பங்குகளில் முதலீடு செய்தால் கையைக் கடிக்காது என்று உயர் நடுத்தர வர்க்கம்கூட மகிழ்ச்சி அடையலாம். ஆனால், எந்த நோக்கங்கள், இலக்குகளை முன்னிறுத்தி 1956-ல் எல்.ஐ.சி. உருவாக்கப்பட்டதோ அவற்றில் அக்கறை கொண்டவர்களும் தேச வளர்ச்சிக்கு இது ஆற்றிவரும் பெரும் பங்களிப்பை அறிந்தவர்களும் எல்.ஐ.சி. தரும் சமூகப் பாதுகாப்புக் குடையின் கீழ் நிழல் பெறும் கோடானுகோடி சாமானிய மக்களும் மகிழ்ச்சி அடைய முடியுமா? மேலும், முன்பு இந்தத் துறை திவால்களாலும் மோசடிகளாலும் செல்லரிக்கப்பட்டிருந்தது; அந்த நிலையிலிருந்து மேம்படுத்தப்பட்ட, வளர்ச்சியடைந்த, நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ள நிறுவனம் என்ற பெயரைத் தற்போது எல்.ஐ.சி. பெற்றிருக்கிறது. அதன் பாலிசிதாரர்களெல்லாம் தற்போது மகிழ்ச்சி அடைய முடியுமா?
கடந்த நிதியாண்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 2.94 கோடி புதிய பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன எனில், அவற்றில் 2.17 கோடி பாலிசிகள் எல்.ஐ.சி.யால் விற்கப்பட்டவையாகும். 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டிக்கு வந்த பிறகும், இன்னும் இன்சூரன்ஸ் பரவலுக்கு எல்.ஐ.சி.யே 74% பங்களிப்பை வழங்குகிறது என்பது சாதாரண சாதனையா! பிரீமிய வருவாயில் 63%, பாலிசி எண்ணிக்கையில் 74% எனில், சாமானியருடைய இல்லங்களின் கதவுகளைத் தட்டுவது யார் என்பதும் வெளிப்படவில்லையா? பங்கு விற்பனை அரங்கேறுவதற்கு 34 நாட்களுக்கு முந்தைய நிலவரம் இது.
இவ்வளவு காலம் ‘பாலிசிதாரர் நலன்’ என்று இயங்கிவந்த நிறுவனம், இனி ‘பங்குதாரர்’ நலனையும் கவனிக்க வேண்டும் எனில், அரசுத் திட்டங்களுக்கான பெரும் பங்களிப்பு, சமூக அக்கறை, சமூகப் பாதுகாப்புக் குடைக்குள் சாமானிய மக்களுக்கும் இடம் தருதல் இவையெல்லாம் தொடருமா? லாபமற்ற வணிக நடவடிக்கைகள் கூடாது என்று பங்குதாரர்கள் நிர்ப்பந்தம் செய்ய மாட்டார்களா?
இன்று 3.5% பங்குகள்தான் விற்கப்பட்டுள்ளன. எல்.ஐ.சி.யின் 50% அரசுப் பங்குகள் விற்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் காப்பீட்டுத் தனியார்மயத்துக்கு ‘வரைபடம்’ போட்ட மல்கோத்ரா குழு அறிக்கை 28 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. ஆனால், மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட தொடர் பிரச்சாரம், உரையாடல்கள், எல்.ஐ.சி.யின் நேர்மையான சேவையில் மக்களிடம் இருந்த நற்பெயர் ஆகியன ஒரு வலுவான மக்கள் கருத்தை எல்.ஐ.சி.க்கு ஆதரவாக உருவாக்கியிருந்தன. எந்தவொரு மிக முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார முடிவாக இருந்தாலும் அவை குறித்த விவாதங்கள் சமூகத்தின் அடித்தளம் வரை நடந்தேறுவதுதான் ஜனநாயகத்தின் இலக்கணம்.
ஆனால் ஆட்சியாளர்கள், எல்.ஐ.சி. பங்கு விற்பனை பிரச்சினையில், தனிச் சட்ட வரைவைக்கூடக் கொண்டுவராமல் நிதி மசோதாவுக்குள் திணித்து நிறைவேற்றியதெல்லாம்கூட நடந்தது. அதன் காரணமாக 50% பங்கு விற்பனை என்று 1994-ல் முன்மொழியப்பட்டாலும் 28 ஆண்டுகள் கழித்து 3.5% என்ற அளவிலேயே பங்குகளை விற்க முடிந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இப்போதும் எல்.ஐ.சி. அரசு நிறுவனமாகவே தொடர வேண்டும் என்று தாங்கிப்பிடிக்கிற மக்கள் கருத்து. இன்னொன்று, எல்.ஐ.சி.யின் வளர்ச்சி. அரசு நினைத்தாலும் 1994 போல 50 சதவீதத்தை விற்க வேண்டும் என்று சொல்ல முடியாது. அவ்வளவு பெரிய பங்கு விற்பனையைத் தாங்குகிற அளவுக்குப் பங்குச் சந்தை இல்லை.
விசித்திரமான விற்பனை
இரண்டு வழிகளில் இந்தியப் பங்குச் சந்தை ஒரு விசித்திரமான விற்பனையை முதன்முதலாகச் சந்தித்துள்ளது. பொதுவாக, விற்கப்படும் நிறுவனங்களுக்கு ஒப்பனை செய்வார்கள். சந்தைக்குத் தயார்செய்வார்கள். ஆனால், எல்.ஐ.சி. பங்கு விற்பனையில் சந்தைக்கு ஒப்பனை செய்தார்கள். சந்தையை விரிவுசெய்தால்தான் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான பொருளாதார நடவடிக்கையை அது தாங்கும் என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. ஆகவே, அந்நிய முதலீட்டாளர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. டீ மேட் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை உயர்த்த தொலைக்காட்சி, எப்.எம். வானொலி வாயிலாகப் பல மாதங்கள் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இரண்டாவது, இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தும் எவ்வளவு சதவீதப் பங்குகளைச் சந்தைக்குக் கொண்டுவருவது, எவ்வளவு விலை வைப்பது என்பதிலும் தடுமாற்றங்களைச் சந்திக்க நேரிட்டது. 10% பங்குகள் விற்பனை என்று முதலில் பேசப்பட்டது. 7% என்று கசிய விடப்பட்டது. 5% என்று முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கடைசியில், 3.5% என்று அமலாக்கப்பட்டது. அந்நிய நிறுவன முதலீடுகள் வெளியேறுதல், உக்ரைன், பெட்ரோல் விலை உயர்வு ஆகிய சூழலில் இப்பங்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனால் விலை நிர்ணயம் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உள்ளார்ந்த மதிப்பைவிட (Embedded Value) சந்தை மதிப்புக்கான பெருக்கல் விகிதம் (Multiplication factor) சராசரியாக 3.4 மடங்கு உள்ளது எனவும், எல்.ஐ.சி. பங்கானது சந்தை மதிப்புக்கு 1.1 பெருக்கல் விகிதமே தரப்படுகிறது எனவும் எல்.ஐ.சி. வெளியிட்ட பொது அறிவிப்பு குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ. 949 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதன் சந்தை மதிப்பு பெருக்கல் விகிதமும், பங்கு விலை விகிதமும் பொதுவெளியில் பொருளாதார நிபுணர்கள், ஓய்வுபெற்ற மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ஊடகவியலர்கள் உள்ளிட்ட பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசுக்குக் குறைந்தது 32,000 கோடியாவது இழப்பு என்ற விமர்சனத்துக்கு அரசிடமிருந்து பதில் இல்லை. விலையை அரசோ எல்.ஐ.சி.யோ நிர்ணயிக்கவில்லை; ‘நங்கூர’ முதலீட்டாளர்கள் (Anchor Investors) தீர்மானித்துள்ளார்கள் என்பது தெளிவு. நாங்கள் ‘மக்கள் உடமை’யாக மாற்றப்போகிறோம் என்று அரசு பறக்கவிட்ட பலூன்கள் எல்லாம் வெடித்துச் சிதறியுள்ளன.
65% பங்குகள் ‘நங்கூர’ முதலீட்டாளர்கள் உட்பட அந்நிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், உயர்தட்டுச் செல்வந்தர்கள் ஆகியோருக்கு (3.5% வெளியீட்டில்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சில்லறை முதலீட்டாளர் கைகளில் போகும் 35% பங்குகளும் கொஞ்ச காலம்தான் அவர்கள் கைகளில் தங்கும் என்பதும் பங்குச் சந்தை அரிச்சுவடி அறிந்தவர்களுக்குத் தெரியும். 3.5% என்று அளவும் குறைந்து, ரூ.949 என விலையும் குறைந்து அதற்கு மேல் தள்ளுபடிகளோடும் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டவைதான் இந்தப் பங்குகள்.
அணையா தீபம்
எல்.ஐ.சி.யின் இலச்சினை அழகானது. இந்திய மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒன்று. உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாத அளவுக்குச் சமூகப் பாதுகாப்புக்கான கோவர்த்தன மலையை 29 கோடி மக்களுக்கும் பிடித்து நிற்பது. 13 லட்சம் முகவர்களுக்கு வாழ்வுரிமை தருவது. அதனால் ஒவ்வொரு இல்லத்திலும் அது சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது.
50% பங்கு விற்பனையை நோக்கி முன்னேற விரும்பிய அரசின் பயணம் 3.5% என்கிற அளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்போதும் எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கான சட்டத் திருத்தத்தில் ‘எந்தக் காலத்திலும்’ அரசின் கைவசம் 51% பங்குகள் இருக்கும் என்ற சரத்து இணைக்கப்பட்டுள்ளதன் பொருள், எல்.ஐ.சி. அரசு நிறுவனமாகவே தொடரும் என்பதே. இதுவே மக்கள் கருத்தின் வெற்றி. என்றாலும் மக்கள் விழிப்பு தொடராவிடில் சட்டம் வெறும் காகிதமே. ஆகவே, மக்கள் மத்தியில் விவாதங்கள் தொடர வேண்டும். 3.5-லிருந்து முன்னேற முனைகிற அரசின் நகர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
- க.சுவாமிநாதன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர். தொடர்புக்கு: swaminathank63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT