

தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும். இது குறித்து முதல்வரும், உயர் கல்வித் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூறிய பல்வேறு செய்திகள், தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டன.
1975-லிருந்து தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியிலும், நிர்வாக அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 1976-ல்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1947-லிருந்து 1990 வரை ஒருசில மத்தியப் பல்கலைக்கழகங்களே இருந்துவந்தன. அவற்றின் நோக்கராக (Visitor) குடியரசுத் தலைவர் இருந்துவந்தார். அந்தப் பல்கலைக்கழகங்களில் தேர்வுக் குழுவால் தேர்வுசெய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக நியமித்துவந்தார்.
1996-க்குப் பிறகு, ஒன்றிய அரசு வருமான வரியுடன் சேர்த்து கல்வி வரி எனக் கூடுதலாக 4% வசூலிக்க ஆரம்பித்தது. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கல்வித் துறைக்கான வருவாயாகக் கிடைத்தது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதால் இதனால் வரும் வருவாயை மாநில அரசுக்கோ அல்லது மாநில பல்கலைக்கழகத்துக்கோ பிரித்து அளிக்கப்படவில்லை. இது குறித்து எந்த ஒரு மாநில அரசும் ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப்பெறவில்லை.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால், இந்த நிதியை வைத்துக்கொண்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றை ஒன்றிய அரசே தொடர்ந்து தொடங்க ஆரம்பித்தது. இதற்கான துணைவேந்தர் குழுவை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே நியமித்தது. இதன் பிறகு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே துணைவேந்தர்களை நியமித்துவருகிறது. இதில் குடியரசுத் தலைவருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்பது தெளிவாகிறது.
மத்தியப் பல்கலைக்கழகத்துக்கான நோக்கராகக் குடியரசுத் தலைவரே இருந்துவருகிறார். இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தலைவராகக் கல்வியாளர்கள் அல்லது புகழ்பெற்ற பிரதிநிதிகள் அல்லது சமூகச் சேவையாளர்கள் எனப் பலரையும் நியமிக்கிறார்கள். உதாரணமாக, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக வேந்தராக, தலைவராகப் பேராசிரியர் ஜி.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அருகில் உள்ள தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்துக்குப் புகழ்பெற்ற கல்வியாளர்களைத் தலைவர்களாக நியமித்துவருகிறார்கள்.
அதே போல் ஒன்றிய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.டி.யின் தலைவர்களாக, புகழ்பெற்ற கல்வியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் இந்தியா முழுவதிலும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நோக்கராக மட்டுமே உள்ளார். பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமைதாங்குவதற்கும், மற்ற பணிகளுக்கும் புகழ்பெற்ற கல்வியாளர்கள் தலைவர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர், அவர்களே வேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வேந்தராக உள்ள ஆளுநர் மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வருடத்திற்கு 2 முறை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதும், அது தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொள்வதும், ஆளுநரிடம் பல்கலைக்கழகங்கள் தேதி பெறுவதும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை பல்கலைக்கழகமும் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டன. மாநில அரசின் கொள்கையாக மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என மாநில அரசு தொடங்கும் நிலையில், ஆளுநர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுவர முடியுமா?
இந்த அடிப்படையில் பார்த்தால், ஆளுநர் அரசமைப்பில் சொல்லப்பட்ட அவரது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைப் பார்ப்பதே அவருக்குப் பெரிய பணியாக இருந்துவருகிறது. இதனால்தான் தமிழ்நாட்டின் ஆளுநர், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்கூடத் தன் கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல், அவர் பதவியின் வழி வந்துள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பெரிதும் தன் கையில் எடுத்துப் பணியாற்றிவருகிறார்.
பிரிட்டிஷ் காலத்தில் ஆளுநர்கள் பல்கலைக் கழகத்தின் தலைவர்களாக இருந்த காரணத்தால் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் பிரிட்டிஷ் ராணியின் பிரதிநிதிகளாக இங்கு பணியாற்றினார்கள். அதிகாரம் பெற்ற ஆளுநர்கள் இருந்ததால் அவர்கள் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துவந்தனர். இந்தியா விடுதலை பெற்ற 1947-க்குப் பிறகு இந்தியாவின் எந்தவொரு தனிநபருக்கும் ராஜ அதிகாரம் இல்லை. இந்தியா ஒரு பரிபூரண ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு வேந்தரோ துணைவேந்தரோ இன்றைய சூழ்நிலையில் தேவைதானா என்பதையும் மாநில அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆகவே, பல்கலைக்கழக வேந்தரைத் தலைவர் என்றும் துணைவேந்தர்களை துணைத் தலைவர் என்றும் மாற்றம் செய்திட வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் குடியரசுத் தலைவர் நோக்கராக இருப்பதைப் போல் ஆளுநரை அதிகாரமற்ற நோக்கராக நியமிக்கலாம்.
ஒன்றிய அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் கல்வியாளர்களைத் தலைவராக நியமிப்பதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சிறப்பு பெற்ற கல்வியாளர்களைத் தலைவர்களாக நியமிக்கலாம். ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே துணைவேந்தர்களை நியமிப்பதுபோல் மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுத் துணைவேந்தர்களை நியமிக்கலாம். தற்போது கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவு பெரிதும் தேவையானதாகும். இதனை ஆராய்ந்து மேற்கூறியதை ஆலோசிக்கலாம், நிறைவேற்றலாம்.
- வி.ஆர்.எஸ்.சம்பத், வழக்கறிஞர், ஆசிரியர், ‘சட்டக்கதிர்’. தொடர்புக்கு: sattakadir1992@yahoo.co.in