Published : 16 May 2022 07:32 AM
Last Updated : 16 May 2022 07:32 AM
கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளிக் காய்ச்சல் எனும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் சென்ற வாரம் பரவி பலரையும் பீதியடைய வைத்தது. அது இப்போது தமிழகத்திலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதுவும் கரோனா போன்றதொரு புதிய தொற்றுநோயா எனும் பதற்றம் நிறைந்த பார்வை சாமானியர்களை அச்சுறுத்துகிறது.
முதலில், தக்காளிக் காய்ச்சல் ஒரு புதிய நோயல்ல. 1957-ல் நியூசிலாந்தில் தோன்றிய ஒருவகைத் தொற்றுநோய். உலகெங்கிலும் எப்போதும் ஆங்காங்கே இருந்துகொண்டிருப்பதுதான். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இது அவ்வப்போது தோன்றுவதுண்டு. 2018-ல் மலேசியாவில் இந்த நோய் 76 ஆயிரம் குழந்தைகளை ஒரே நேரத்தில் பாதித்ததுதான் மருத்துவ வரலாற்றின் பெருந்துயரம். இப்போது கேரளத்திலும் தமிழகத்திலும் பரவலாகப் பரவிவருவதால் பேசுபொருளாகியிருக்கிறது.
‘தக்காளிக் காய்ச்சல்’ என்று பழகுதமிழில் அழைக்கப்படும் இந்த நோய்க்குக் ‘கை-கால் வாய் வைரஸ் நோய்’ (Hand, Foot and Mouth Disease - HFMD) என்பது மருத்துவப் பெயர். இது பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே தாக்கும். மக்கள் நெருக்கமாக வாழும் இடங்கள், குழந்தைக் காப்பகங்கள் (Daycare centers), அசுத்தமான இருப்பிடங்கள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகிய இடங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு அதிகம். மற்ற பருவ காலங்களைவிடக் கோடையில் இதன் பரவும் தன்மை அதிகம்
இது ‘என்டிரோ வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 (Coxsackie virus A16) எனும் வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இது அவ்வளவாக ஆபத்தைத் தரும் வைரஸ் இல்லை. மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். இதுவே, காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 6 (Coxsackie virus A 6) அல்லது என்டிரோ வைரஸ் 71 (Entero virus 71) வகை வைரஸால் பாதிக்கப்பட்டால், பாதிப்புகள் கடுமையாக இருக்க வாய்ப்புண்டு. இப்போது பரவிவரும் தக்காளிக் காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 வகையால் ஏற்படுவதாகவே ஆரம்பகட்டப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இது குறித்து பயப்படத் தேவையில்லை. அதேசமயம், இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால், இது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம்.
என்ன அறிகுறிகள் தோன்றும்?
முதலில் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் வரும். பசிக்காது. தொண்டையில் எரிச்சல் ஏற்படும். இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் ஆகிய தொல்லைகள் தொடங்கும். உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் வாய்ப் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றும். இவற்றைப் பார்த்ததும் பெற்றோர் அம்மைக் கொப்புளங்கள் என்று எண்ணி சிகிச்சை பெறாமல் இருந்துவிடுவது வழக்கம். இவை அம்மைக் கொப்புளங்கள் இல்லை. சிகிச்சை எடுக்காவிட்டால், கொப்புளங்களில் நீர் கசியும். வாய், நாக்கு மற்றும் தொண்டைக்குள் புண்கள் பெரிதாகும். குழந்தை விழுங்குவதற்குச் சிரமப்படும். ஒன்றுமே சாப்பிட முடியாமல் அழுதுகொண்டிருக்கும்.
பிறகு முகம், தொடை, தாடை, முழங்கை ஆகியவற்றில் தக்காளி நிறத்தில் சிறுசிறு திட்டுகள் உருவாகும். அங்கு அரிப்பு உண்டாகும். அதைச் சொறியும் விரல்களில் கிருமிகள் இருந்தால், கொப்புளங்களில் சீழ்பிடிக்கும். பொதுவாக, இந்த நோய் ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். ஆனாலும், இது குழந்தைகளைத் தாக்குவதால், தாங்கிக்கொள்ள சிரமப்படும். முக்கியமாக, சாப்பிட முடியாமல் சிரமப்படும். ஆகவே, குழந்தைக்குக் காய்ச்சல் வந்ததும் மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.
சிகிச்சை என்ன?
இந்த நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. என்றாலும், காய்ச்சலைக் குறைக்கவும், கொப்புளங்களில் காணப்படும் நீர்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும், தொண்டைப் புண் வலியை மட்டுப்படுத்தவும் மருந்துகள் தரப்படும். இவற்றின் பலனால், குழந்தைக்கு நோய்க்குறி தொல்லைகள் குறைந்து, சாப்பிடத் தொடங்கிவிடும். நோய் கண்ட குழந்தைகள் குறித்து கவலைகொள்ளும் பெற்றோருக்கு இதுவே மனச்சுமையைக் குறைத்துவிடும்.
தக்காளிக்கு என்ன தொடர்பு?
இந்த நோய்க்கு ‘தக்காளிக் காய்ச்சல்’ என்று பெயர் கொடுத்திருந்தாலும் தக்காளிக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தக்காளி மாதிரி சிவப்பு நிறத்தில் கொப்புளங்களும் சருமத் திட்டுகளும் தோன்றுவதால்தான் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. தக்காளியால் இது பரவுவதில்லை. மேலும், இது கரோனா வைரஸ் போன்றோ, நிபா வைரஸ் போன்றோ அச்சப்படக்கூடிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.
பரவுவது எப்படி?
இந்த வைரஸ் கிருமிகள் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் எச்சில், தொண்டை மற்றும் மூக்குத் திரவங்களில் வசிக்கும்.குழந்தை தும்மினால், இருமினால், மூக்கைச் சிந்தினால், சளியைத் துப்பினால் கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். அதோடு மூக்கு, வாய், சருமம் போன்ற வெளிப்பகுதிகளிலும் அவை ஒட்டிக்கொண்டிருக்கும். சிவப்பு நிறக் கொப்புளங்களிலும் காய்ந்ததும் உருவாகும் பொருக்குகளிலும் அவை குடியிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே விரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் பரவிவிடும். குழந்தை பயன்படுத்தும் ஆடை, அணையாடை (டயாப்பர்), கைக்குட்டை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, விளையாட்டுப் பொம்மைகள், கதவுக் கைப்பிடிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் கிருமிகள் அவர்களுக்கும் எளிதாகக் கடத்தப்படும். இவை தவிர, குழந்தையை முத்தமிட்டோலோ, அணைத்துக்கொண்டாலோ அப்போதும் கிருமிகள் பரவ வாய்ப்புண்டாகும். குழந்தையின் மலத்தின் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவும்.
தடுப்பது எப்படி?
இந்த நோய் பரவ அசுத்தம் ஒரு முக்கியக் காரணம் என்பதால், வீட்டிலும் பள்ளிகளிலும் சுத்தம் காப்பதும் சுகாதாரம் பேணுவதும்தான் இந்த நோய்க்குப் போடப்படும் முதன்மைக் கடிவாளங்கள். குழந்தைக்குத் தினமும் சுத்தமான ஆடை அணிவிப்பது முக்கியம். நிறைய திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டியது கட்டாயம். அதோடு, கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் அல்லது சானிடைசரைப் பயன்படுத்தியும் கழுவலாம். முக்கியமாக, குழந்தை கழிவறைக்குச் சென்று வந்ததும், குழந்தைக்கு அணையாடையை (டயப்பர்) மாற்றியதும், குழந்தை இருமியதும் தும்மியதும் குழந்தையின் கைகளையும் முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்ளச் சொல்ல வேண்டும் அல்லது குழந்தைக்குக் கழுவி விட வேண்டும்.
பெற்றோரும் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தை பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் வீட்டுத் தரை மற்றும் கதவின் பிடிகளையும் அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கு அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். வெளி இடங்களுக்கும் கூட்டமாக உள்ள இடங்களுக்கும் குழந்தையை அழைத்துச் செல்லக் கூடாது. இந்தத் தடுப்பணைகள்தான் தக்காளி காய்ச்சலுக்கான முக்கியத் தற்காப்புகள்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com
To Read this in English: Precautions for Averting Tomato Fever
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT