கரோனா பெருந்தொற்று: வருங்காலத்துக்காக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

கரோனா பெருந்தொற்று: வருங்காலத்துக்காக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
Updated on
3 min read

முந்தைய காலகட்டங்களில், ‘ப்ளாக் டெத் (கறுப்பு மரணம்)’ எனும் ப்ளேக் நோயை மனித குலம் எதிர்கொண்டபோது, அது எப்படி வந்தது அல்லது அதை எப்படி நிறுத்துவது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதிலிருந்து கரோனா பெருந்தொற்று முற்றிலும் வித்தியாசமானது. புதிய தொற்றுநோய் பற்றிய முதல் எச்சரிக்கை மணி டிசம்பர் 2019-ன் இறுதியில் ஒலிக்கத் தொடங்கியது. 2020, ஜனவரி 10-ம் தேதிக்குள் அறிவியலர்கள் அதற்குக் காரணமான வைரஸைப் பிரித்தெடுத்ததோடு மட்டுமல்லாமல், அதன் மரபணுவையும் வரிசைப்படுத்தி, அது தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட்டார்கள். அடுத்த சில மாதங்களுக்குள், எந்த நடவடிக்கைகள் மூலம் தொற்றுநோய்ப் பரவலின் வேகத்தைத் தணிக்கவும் நிறுத்தவும் முடியும் என்பதும் தெளிவானது. ஒரு வருடத்துக்குள் பயனுள்ள தடுப்பூசிகள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. மனிதர்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடையிலான போரில், மனிதர்கள் ஒருபோதும் இவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்ததில்லை. ஆனால், இதை அரசியலர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.

அறிவியலர்களும் அரசியலர்களும்

அறிவியலர்கள் அயராது பாடுபட்டுக் கண்டுபிடித்த தடுப்பூசிகள் குறித்த தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், அரசியலர்கள் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்கள். உதாரணமாக, அமெரிக்கா மற்றும் பிரேசிலின் பிரபலமான தலைவர்கள் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு, நிபுணர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க மறுத்தது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக சதிக் கோட்பாடுகளை முன்வைத்தனர். ட்ரம்ப், போவ்சனாரோ நிர்வாகங்களின் அலட்சியமும் பொறுப்பற்றதன்மையும் தடுத்திருக்கக்கூடிய லட்சக்கணக்கான மரணங்களுக்குக் காரணமாக அமைந்துவிட்டன. இங்கிலாந்து அரசாங்கம் ஆரம்பத்தில் கரோனா பெருந்தொற்றைவிட பிரெக்ஸிட் மீது அதிக அக்கறை கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இஸ்ரேலானது பேரழிவை எதிர்கொள்ள அமெரிக்க நிறுவனமான ஃபைசருடன் ‘தரவுகளுக்கான தடுப்பூசிகள்’ ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தனியுரிமையையும் தரவு ஏகபோகத்தையும் பற்றிய கவலைகளை எழுப்பும் பெரிய அளவிலான மதிப்புமிக்க தரவுகளுக்கு ஈடாக அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை இஸ்ரேலுக்கு வழங்க ஃபைசர் ஒப்புக்கொண்டது. குடிமக்களின் தரவு இப்போது மதிப்புமிக்க அரசு சொத்துக்களில் ஒன்றாகும் என்பதையும் இது நிரூபித்திருக்கிறது.

சில நாடுகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டாலும், அரசியலர்கள் கரோனாவுக்கு எதிராக ஒரு சர்வதேசக் கூட்டணியை உருவாக்கவும், உலகளாவிய திட்டத்துக்கு உடன்படவும் தவறிவிட்டனர். உலகின் இரண்டு முன்னணி வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கொருவர் முக்கியத் தகவல்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், தவறான தகவல்கள் மற்றும் சதிக் கோட்பாடுகளைப் பரப்புவதாகவும், வேண்டுமென்றே கரோனாவைப் பரப்புவதாகவும் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தன. மற்ற பல நாடுகள் தொற்றுநோயின் பரவல் குறித்துப் பொய்யான தகவல்களைக் கொடுத்தன அல்லது தரவுப் பகிர்வை நிறுத்திக்கொண்டன. குறிப்பாக, தங்கள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடக்கூடிய நாடுகளுக்கும் அப்படிப் போட இயலாத நாடுகளுக்கும் இடையில் ‘தடுப்பூசி தேசியம்’ என்கிற ஒரு புதிய வகையான உலகளாவிய ஏற்றத்தாழ்வை இது உருவாக்கியிருக்கிறது.

கணக்கில் கொள்ள வேண்டியவை

ஊரடங்கை அமல்படுத்தத் தீர்மானிக்கும்போது, ‘நாம் ஊரடங்கை அமல்படுத்தவில்லையெனில், எவ்வளவு பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள்?’ என்பதை மட்டும் மனதில் கொள்ளாமல் ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் எவ்வளவு பேர் மனச்சோர்வை அனுபவிப்பார்கள், எவ்வளவு பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள், எவ்வளவு பேர் பள்ளியை அல்லது வேலையை இழக்க வேண்டியிருக்கும், எவ்வளவு பேர் அவர்களது இணையரால் கொடுமைப்படுத்தப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்?’ என்பதையும் மனதில் கொண்டிருந்திருக்க வேண்டும். நம்முடைய தரவுகள் அனைத்தும் துல்லியமாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தால்கூட, நாம் எப்போதும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, ‘எதைக் கணக்கிடுவது?’, ‘எதைக் கணக்கிட வேண்டும் என்பதை யார் முடிவுசெய்வது?’, ‘தரவு எண்களை நாம் எப்படி மதிப்பீடு செய்வது?’ இது அறிவியல் பணி என்பதைவிட அரசியல் பணியாகும்.

மூன்று அடிப்படை விதிகள்

பெருந்தொற்று நேரத்திலும்கூட மூன்று அடிப்படை விதிகள் நம்மை டிஜிட்டல் சர்வாதிகாரத்திலிருந்து பாதுகாக்கும். முதலாவதாக, நீங்கள் மக்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும்போதெல்லாம் – குறிப்பாக அவர்களின் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி – அவர்களுக்கு உதவப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைத் திரிக்கவோ கட்டுப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ கூடாது.

இரண்டாவதாக, கண்காணிப்பு என்பது இருவழிப் பாதையாகும். இது மேல்மட்டத்திலிருந்து கீழ்நோக்கி மட்டுமே செல்லுமென்றால், அது சர்வாதிகாரத்துக்கான பாதையாகிவிடும். ஆகவே, எப்போதெல்லாம் தனிநபர் மீதான கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் அரசு மீதும் பெரிய குழுமங்களின் மீதுமான கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். உதாரணமாக, தற்போதைய நெருக்கடியில் அரசாங்கமானது அதிகமான நிதியை விநியோகம் செய்துகொண்டிருக்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டுச் செயல்பாடானது, ஒளிவுமறைவின்றி நடைபெற வேண்டும். யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, எங்கே நிதி செல்ல வேண்டுமென்று யார் தீர்மானிப்பது என்பது போன்ற விஷயங்களை ஒரு குடிநபர் எளிதாகத் தெரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். எந்த வணிகங்களுக்கு உண்மையிலேயே நிதி தேவையோ அது அவற்றைச் சென்றடைய வேண்டுமென்பதோடு, அமைச்சர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களின் தொழில் நிறுவனங்களைச் சென்றடையவில்லை என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியும்படி இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஒரே இடத்தில் அதிகத் தரவுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இது பெருந்தொற்று இருக்கும் காலத்துக்கும், அது இல்லாத காலத்துக்கும் பொருந்தும். தரவு ஏகபோகம் (data monopoly) என்பது சர்வாதிகாரத்துக்கான வழிகளில் ஒன்றாகும். எனவே, பெருந்தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக மக்களிடமிருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டால், அதை சுயாதீன சுகாதார அமைப்பு செய்ய வேண்டுமேயொழிய, காவல் துறையினர் செய்யக் கூடாது. இப்படிச் சேகரிக்கப்படும் தரவுகள் தனியாக வைக்கப்பட வேண்டுமேயொழிய, அரசின் மற்ற அமைச்சகங்களிடமோ பெருங்குழுமங்களிடமோ இருக்கக் கூடாது. இது பணிநீக்கங்களையும் திறனற்ற தன்மைகளையும் உருவாக்கும் என்பது நிச்சயம். ஆனால், திறனற்ற தன்மை என்பது ஓர் அம்சம்தானே ஒழியத் தொந்தரவு இல்லை. டிஜிட்டல் சர்வாதிகாரம் அதிகரிப்பதை நீங்கள் தடுக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் சில விஷயங்களைத் திறனற்றதாகவே வைத்திருங்கள்.

அனைத்து அரசியல் முகாம்களைச் சேர்ந்தவர்களும் குறைந்தது மூன்று முக்கியப் படிப்பினைகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

முதலாவதாக, நாம் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும். பெருந்தொற்றின்போது இது நமக்கான விடிவுகாலமாக இருந்தது. ஆனால், இதுவே விரைவில் இன்னும் மோசமான பேரழிவுக்கு ஆதாரமாக மாறக்கூடும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு நாடும் அதன் பொதுச் சுகாதார அமைப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டும். இது நன்கு தெரிந்தாலும் அரசியலர்களும் வாக்காளர்களும் சில நேரங்களில் மிகத் தெளிவான பாடத்தைப் புறக்கணித்துவிடுகிறார்கள்.

மூன்றாவதாக, தொற்றுநோய்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய அமைப்பை நாம் நிறுவ வேண்டும். மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் இடையிலான நீண்ட போரில், முதல் நிலையானது ஒவ்வொரு மனிதரின் உடல் வழியாகவும் செல்லும். இந்த நிலை நாம் வாழும் கிரகத்தில் எங்கு மீறப்பட்டாலும் அது நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தும். மிகவும் வளர்ந்த நாடுகளில் உள்ள பணக்காரர்கள்கூடக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஏழ்மையான மக்களைப் பாதுகாக்கத் தனிப்பட்ட அக்கறை கொண்டுள்ளனர். ஏதோ தொலைதூரக் காட்டுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில், புதிய கிருமி ஒன்று வெளவாலிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றினால், சில நாட்களில் அது ‘வால் ஸ்ட்ரீட்’டில் ‘நடக்க’ ஆரம்பித்துவிடும்!

புதிய நோய்க் கிருமிகளின் தோற்றத்தை மனிதகுலத்தால் தடுக்க முடியாது. இது ஒரு இயற்கைப் பரிணாமச் செயல்முறை. இது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவருவதோடு எதிர்காலத்திலும் தொடரும். ஆனால், இன்று ஒரு புதிய நோய்க்கிருமி பரவுவதைத் தடுப்பதற்கும் அது தொற்றுநோயாக மாறாமல் தடுப்பதற்கும் தேவையான அறிவும் கருவிகளும் மனிதகுலத்திடம் இருக்கின்றன. இருப்பினும் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவி லட்சக்கணக்கானவர்களைப் பலி வாங்கினால் அல்லது 2030-ல் இன்னும் கொடூரமான தொற்றுநோய் மனிதகுலத்தைத் தாக்கினால், இது கட்டுப்படுத்த முடியாத இயற்கைப் பேரிடராகவோ அல்லது கடவுளின் தண்டனையாகவோ இருக்காது. இது ஒரு மனிதத் தோல்வியாக - இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் - ஓர் அரசியல் தோல்வியாகத்தான் இருக்கும்.

- யுவால் நோவா ஹராரி, ‘சேப்பியன்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சுருக்கமாகத் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

நன்றி: ஃபைனான்ஸியல் டைம்ஸ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in