

இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறப்புப் புகைப்பட (Feature Photography) பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நால்வருக்கு விருது கிடைத்திருக்கிறது. அத்னன் அபிதி (புதுடெல்லி), சன்னா இர்ஷத் மட்டூ (காஷ்மீர்), அமித் தவே (அகமதாபாத்), டேனிஷ் சித்திக்கி (புதுடெல்லி). இவர்கள் நால்வரும் அமெரிக்கச் செய்தி நிறுவனமான ‘ராய்ட்டர்’ஸின் ஒளிப்படச் செய்தியாளர்கள். கரோனா காலகட்டத்தில் இந்தியச் சூழலைக் காட்சிப்படுத்தியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
டேனிஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஆப்கன் ராணுவத்துக்கும் தாலிபான்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தைப் பதிவுசெய்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவருக்கு இது இரண்டாவது புலிட்சர் விருது. அத்னன் அபிதிக்கு இது மூன்றாவது புலிட்சர். ரோஹிங்கியா முஸ்லிம்களின் அவலநிலையைக் காட்சிப்படுத்தியதற்காக டேனிஷ் சித்திக்கிக்கும் அத்னன் அபிதிக்கும் 2018-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒளிப்படப் பிரிவில் புலிட்சர் விருது பெற்ற முதல் இந்தியர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு.
ஊடகவியலாளர்களின் முக்கியத்துவம்
கரோனா ஊரடங்குகளின்போது போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட்டன. ஊரடங்கின் காரணமாக வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், உயிர் பிழைத்திருக்கப் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்தக் கிராமங்களை நோக்கி நடந்து சென்றனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல், மருத்துவமனை வாசல்களில் மக்கள் கதறி அழுதனர். இறந்துபோன சடலங்களை எரிக்கக்கூட இடம் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது தாலிபான். அவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத மக்கள், வெளிநாடு தப்பிச்செல்லக் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்தை நோக்கி ஓடினர். விமானங்கள் நிரம்பி வழிந்தன. விமானங்களின் இறக்கைகளில்கூட ஆட்கள் ஏறினார்கள். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் உக்ரைன் பேரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது. சாலையில் மனிதர்கள் ஆங்காங்கே செத்துக்கிடக்கின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் ராணுவத்தின் தாக்குதல், உய்குர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் அடக்குமுறை - இந்தக் காட்சிகளை ஒளிப்படங்களாகப் பார்க்கும்போது, நம் கண்ணுக்குத் தெரிவது குறித்து மட்டும் நாம் சிந்திக்கிறோம். நாம் படிக்கும், நாம் பார்க்கும் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும், ஒவ்வொரு ஒளிப்படத்துக்குப் பின்னாலும், ஊடகவியலர்கள் இருக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்துக் களத்துக்குச் சென்று செய்திகள் சேகரித்து உலகுக்கு வழங்குகின்றனர்.
இதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் இதழியலுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் அறிவிக்கப்படும்போது, அது சர்வதேச கவனத்தைப் பெறுகிறது. ஒரு சமூகத்தில் இதழாளர்கள் என்ன பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை அது மக்களுக்கு நினைவூட்டுகிறது.
புலிட்சரின் வரலாறு
இந்தப் பரிசைத் தோற்றுவித்த ஜோசப் புலிட்சருக்கு (1847-1911) பத்திரிகைத் துறைமீது இருந்த மதிப்பாலும், ஈடுபாட்டாலும் அத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குத் தான் 2 லட்சம் டாலர் நிதி தருவதாகவும், அந்தத் தொகையைக் கொண்டு இதழியலுக்கென்று கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்றும், அந்தத் தொகையில் நான்கில் ஒரு பங்கு இதழியல் தொடர்பான விருதுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 1917-லிருந்து புலிட்சர் விருது வழங்கப்படலானது. தற்போது இதழியல், புனைவுகள், அபுனைவுகள், நாடகம், வரலாறு, தன்வரலாறு, கவிதை, இசை உட்பட 22 பிரிவுகளில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்குமான விருதுத் தொகை 15,000 டாலர்.
ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் விருதை அதிக எண்ணிக்கையில் தட்டிச்செல்வது ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஆகிய மூன்று அமெரிக்க முன்னணி நாளிதழ்கள்தான். இம்முறை பொது சேவைப் பிரிவுக்கான விருது ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை உக்ரைன் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் துணிச்சலாக நின்று பதிவுசெய்து வெளி உலகுக்குக் கொண்டுசென்றதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிட்சர் இந்தியர்கள்
முதல் புலிட்சர் விருது பெற்ற இந்தியர் கோபிந்த் பெஹாரி லால். அவர் சார்ந்த குழுவுக்கு 1937-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2000-ல் புனைவுப் பிரிவில் இந்திய வம்சாவளி எழுத்தாளரான ஜும்பா லஹிரிக்கு, அவரது ‘Interpreter of Maladies’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 2003-ல், ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழில் பணியாற்றிய கீதா ஆனந்துக்கும், 2011-ல் சித்தார்த்த முகர்ஜிக்கு, ‘The Emperor of All Maladies: a Biography of Cancer’ என்ற அவரது அபுனைவு நூலுக்காகவும், 2014-ல் விஜய் சேஷாத்திரிக்கு ‘3 Sections’ என்ற கவிதைத் தொகுப்புக்காகவும் புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
2016-ல் ‘லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்’ நாளிதழைச் சேர்ந்த சங்கமித்ரா கலிதாவுக்கும், 2020-ல், காஷ்மீர் நிலவரத்தைப் காட்சிப்படுத்தியதற்காக சன்னி ஆனந்த், முக்தார் கான், தர்யாசின் ஆகிய மூவருக்கும் புலிட்சர் வழங்கப்பட்டது. அதேபோல் ராய்ட்டர்ஸைச் சேர்ந்த அத்னன் அபிதி, அனுஸ்ரீ பத்னவிஸ் இருவருக்கும் ஹாங்காங் போராட்டத்தைக் காட்சிப்படுத்தியதற்காக 2020 புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 2021 மேகா ராஜகோபாலன், நீல் பேடி ஆகிய இருவருக்கும் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அப்படிப் பார்க்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் தொடர்ச்சியாக புலிட்சர் விருது பெற்றுவருகின்றனர்.
புலிட்சர் விருது ஒரு அமெரிக்க விருதுதான் எனினும், சர்வதேச அளவில் இதழாளர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாகவும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் அது உள்ளது.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in