

தமிழில் ஓர் இணையக் கலைக்களஞ்சியத்தை ஜெயமோகனும் அவருடைய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினரும் இணைந்து தொடங்கியிருக்கிறார்கள். இந்த வலைதளத்துக்கு ‘தமிழ் விக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிவுகள் வெளியாகும். இப்போதைக்கு இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளுக்கான கலைக்களஞ்சியமாக ‘தமிழ் விக்கி’ இருக்கும், ஓராண்டுக்குப் பிறகு வரலாற்றையும் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ஜெயமோகன் கூறியுள்ளார். இரண்டாயிரம் பதிவுகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் ஐயாயிரம் பதிவுகள், பத்தாண்டுகளில் ஐம்பதாயிரம் பதிவுகள் என்னும் திட்டத்துடன் செயல்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் விக்கியின் ஆசிரியராக வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் பொறுப்பேற்றிருக்கிறார். பேராசிரியர்கள் மெளனகுரு, ஆ.ரா.சிவக்குமாரன், மா.சுப்பிரமணியம், தெ.வே.ஜெகதீசன், ப.சரவணன், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சோ.தர்மன், ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், சுசித்ரா ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினர்களாகச் செயல்படுகிறார்கள். யார் வேண்டுமானாலும் கட்டுரைகளுக்குப் பங்களிக்கலாம். தகவல்கள், திருத்தங்களை முன்வைக்கலாம். ஆனால், ஆசிரியர் குழு சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகே இணையத்தில் அவை பதிவேற்றப்படும். ‘தமிழ் விக்கிபீடியா'வில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், பிறர் எழுதியதைத் திருத்தலாம் என்னும் நிலை இருக்கிறது; தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் முனைப்பு, பெயர்ச்சொற்களைக்கூட தூய தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றுவது போன்றவற்றால், தமிழ் விக்கிபீடியா பயன்படுத்த உகந்ததாக இல்லை என்றும் அதனாலேயே புதிய தளத்தைத் தொடங்கியிருப்பதாகவும் ஜெயமோகன் கூறியிருக்கிறார்.
‘தமிழ் விக்கி’ குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அது குறித்த சர்ச்சைகளும் கலவையான விமர்சனங்களும் எழத் தொடங்கிவிட்டன. மே 7 அன்று அமெரிக்காவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த ஹார்வர்டு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜானதன் ரிப்ளி, கொலம்பியா பல்கலைக்கழக விரிவுரையாளர் டைலர் ரிச்சர்டு, வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், டாக்டர் விஜய் ஜானகிராமன் ஆகியோர் கடைசி நேரத்தில் விழாவிலிருந்து விலகிக்கொண்டனர். புதிய வலைதளத்துக்கு ‘தமிழ் விக்கி’ என்று பெயர் வைத்திருப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடையாளத்தை அபகரிக்கும் முயற்சி என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் ‘விக்கி’ என்னும் சொல்லுக்குக் காப்புரிமை கிடையாது என்று ஜெயமோகன் கூறுகிறார். ஆனால், ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்தில் உள்ள பெயரில், ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்ன, அவர்களுக்குப் பிடித்த வேறு பெயரில் வைத்துக்கொள்ளலாமே என்கிற விமர்சனங்களுக்கு பதில் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே செயல்பட்டுவரும் ‘தமிழ் விக்கிபீடியா’வில் ஜனநாயகத்தன்மை உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ் விக்கி’க்கு ‘ஆசிரியர் குழு’ என்று ஒரு நிலையான குழுவை நியமிப்பது, பதிவுகளில் எந்த அளவுக்கு ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்னும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நாவலாசிரியர்கள் என்கிற பிரிவில் இடம்பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களில் பலரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருப்பது யதேச்சையாக நிகழ்ந்த ஒன்றுதானா? ‘தமிழ் விக்கி’யின் தொடர் செயல்பாடுகளே மேற்கண்ட கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் என்று நம்புவோம்.
- நந்தா