2014-ன் அறிவியல் புனைகதைகள்!

2014-ன் அறிவியல் புனைகதைகள்!
Updated on
2 min read

நம்முடைய வாழ்க்கையிலிருந்து தொலைக்காட்சி மறைந்து இணையம் இடம்பெற்ற காலம் முதல் அறிவியல் புனைகதைகள்தான் பொதுவான கலாச்சாரமாகிவிட்டது. இளைய சமுதாயம் தங்களுக்கென்று தனிக் கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அறிவியல் புனைகதைகள் அவற்றின் உரையாடலில் முக்கிய இடத்தைப் பிடித்துவருகிறது. இளைய தலைமுறையினர் முட்டாள்களல்ல. பார்ப்பதற்கு வியப்பூட்டுகிறது என்பதற்காக ‘தி ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர்’ அறிவியல் புனைகதைத் திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்துவிடவில்லை. முதலாளித்துவத்தின் பிந்தைய கட்டத்தில் அழிவுகளுக்கிடையே இளைய தலைமுறை எப்படி வளர்கிறது என்பதை அனுபவத்தில் உணர்த்துகிறது இந்தத் திரைப்படம். பல்வேறு விதமான அனுபவங்களைத்தான் இன்றைய அறிவியல் புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.

பழையன கழிதலும்…

அறிவியல் புனைகதைகள் வேகமாக மாறி வருகின்றன. பிரிட்டிஷ் அறிவியல் புனைகதை சங்கத்தின் ரசிகர்களும் ஆர்தர் சி கிளார்க் விருதுகளுக்கான நடுவர்களும் 2013-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியலை இறுதிசெய்தபோது அதில் வயதானவர்களும் வெள்ளை நிறத்தவர்களும் ஆண்களும்தான் 100% இருந்தார்கள். அவர்கள் பின்னோக்கிய பார்வையைக் கொண்டவர்கள். அறிவியல் புனைகதை எப்படி இருந்தது என்பதை விளக்குபவர்கள், எப்படி அது மாறிவருகிறது என்பதை அறியாதவர்கள். அவர்களிள் ஒருவரான ஆடம் ராபர்ட்ஸ் பொட்டில்

அறைந்தாற்போல பதில் சொன்னார். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கம் எப்படியாகும் என்று கேட்டபோது, வெள்ளைக்கார ஆண்களைவிட பிற நாடுகளைச் சேர்ந்த, வேறுபட்ட அனுபவங்

களைக் கொண்ட மற்றவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும்போது தன்னுடைய படைப்பு அர்த்தமற்றதாகிவிடும் என்று பதில் அளித்தார்.

எத்தியோப்பியாவை நோக்கி…

‘தி கேர்ள் இன் தி ரோட்’ என்ற திரைப்படம் மோனிகா பைர்னின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. மாறிவரும் உலகில் மோனிகாவுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கும் புனைகதைத் திரைப்படம் இது. சேதம் அடைந்த உலகு வழியாக இரு இளம் பெண்கள் எத்தியோப்பியாவுக்குச் செல்வதுதான் கதை. மீனா என்ற பெண் வினோதமான பாம்புக் கடிக்கு உள்ளாகி எத்தியோப்பியா நோக்கிச் செல்கிறாள். மரியமா என்பவரும் ஆபத்தில் சிக்கி ஆப்பிரிக்காவின் சஹாராவைக் கடக்கிறார். மோனிகா அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்பதுடன் எம்.ஐ.டி.யில் படித்தவர். அவருடைய உலக அனுபவமும் அறிவியல் தெளிவும் நாவலில் எதிரொலிக்கின்றன. மிகவும் நுணுக்கமான, தீவிரமான, அச்சமற்ற நாவல் என்று இதைப் பாராட்டுகிறார் கிம் ஸ்டான்லி ராபின்சன். இந்த ஆண்டு இந்த நாவல் குறித்து அதிகம்பேசப்படும்.

ஒசாமா

லவி திதார் எழுதிய ‘ஒசாமா’ என்ற அறிவியல் புனைகதை நவீன வரலாறு பற்றியது. 2012-ல் உலக ஃபேன்டசி விருதை இந்தப் புத்தகம் பெற்றது. நைரோபியில் தங்கியிருந்தபோது பயங்கரவாதிகள் அங்கே நடத்திய நாசவேலைகளை நேரில் கண்டவர் லவி திதார். அத்துடன் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவர்களும் தங்கியிருந்தனர். இதுவும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலும் ஆப்கானிஸ்தானில் தலிபன்களின் ஆதிக்கமும் தந்த அனுபவத்தின்பேரில் இந்த நாவலைப் படைத்திருக்கிறார். பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாகச் செல்பவர்களும் உயிரிழந்தவர்களின் ஆவிகளும் உலவுவதைக் கதாநாயகன் பார்க்கிறான். ஒசாமா என்ற பெயருள்ள ஒருவரைக் கண்டுபிடிக்கும் வேலையைக் கதாநாயகனிடம் ஒரு பெண் ஒப்படைக்கிறார். அந்த நபரைத் தேடி ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை பல்வேறு நகரங்களுக்குக் கதாநாயகன் செல்வதுதான் கதை. நவீன வரலாற்றை வேறு விதமாகச் சித்தரிக்கும் நாவல் இது. இளைய தலைமுறையை ஈர்க்கும் அறிவியல் புனைகதை இது.

கோலமும் ஜின்னி பூதமும்…

ஹெலன் வெக்கர் எழுதிய ‘தி கோலம் அண்ட் தி ஜின்னி’ 2013-ல் வெளிவந்த என்னைக் கவர்ந்த நாவல். மெதுவாகப் பற்றத் தொடங்கி இந்த ஆண்டு பெரிய அளவில் பேசப்படவிருக்கும் நாவல். வெக்கர் அருமையான உரைநடை எழுத்தாளர். தேவையற்ற வார்த்தைகளோ, மோசமான பத்தியோ, அத்தியாயமோ இல்லாதது. தன்னுடைய கணவரிடமிருந்து விடுவிக்கப்பட்ட கோலம் என்ற களிமண்ணாலான பெண்ணும், மந்திரத்தால் கட்டுண்டு ஒரு செப்புப் பாத்திரத்தில் அடைக்கப்பட்டு நியூயார்க் நகரக் கடையில் விடுதலை பெற்ற ஜின்னி என்ற பூதமும் இரு கதாபாத்திரங்கள். 19-வது நூற்றாண்டு நியூயார்க்தான் களம். நாடுகளுக்கு இடையே அலைபாயும் மனித சமுதாயங்களைப் பற்றிய நீதிக்கதை என்றும் இதைக் கூறலாம்.

விண்வெளி சமர்ப்பணம்

ஆன் லெக்கி எழுதிய ‘ஆன்சிலரி ஜஸ்டிஸ்’ மற்றொரு அறிவியல் புனைகதை. விண்வெளியைக் களமாகக் கொண்டிருக்கும் பல நாவல்களுக்கு சமர்ப்பணம் செலுத்தும் வகையிலான நாவல். பிரெக் என்ற பெண் கதாபாத்திரம்தான் இந்த நாவலின் மையம். ஒரேயொரு உடலுடன், பல உடல்களையும் செயற்கையான அறிவையும் கொண்ட பனியுலகக் கடவுளை பிரெக் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை. இதில் சம்பவங்கள் அழகாக ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. நாவலின் நடையும் போக்கும் வாசிக்கத் தூண்டும்.

ஜெஃப் வான்டர் மீரின் ‘வெனிஸ் அண்டர்கிரவுண்ட்’ குறிப்பிடத் தக்க அறிவியல் புனைகதை. கடந்த பத்தாண்டுகளாக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஜெஃப் வான்டர். இந்த நாவலிலும் சொர்க்கம், நரகம், காதல், சதி எல்லாம் உண்டு. இந்த நாவல் குறித்து முதலில் வந்த தகவல்களால் வாசகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

- © தி கார்டியன், தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in