Published : 14 May 2022 10:15 AM
Last Updated : 14 May 2022 10:15 AM

நூல்நோக்கு | குழந்தையின் கண் கொண்ட கவிதைகள்

அதிஸ்யா
- க.அம்சப்ரியாவின் சாக்பீஸ் கவிதைகள்
தொகுப்பு: ப்ரியம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
சென்னை-11
விலை: ரூ.100
தொடர்புக்கு:
94446 40986

‘உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகளல்ல; உங்கள் வழியாக இப்பூமிக்கு வந்தவர்கள்’ என்றார் கலீல் ஜிப்ரான். நம் குழந்தைகள்தானே என்கிற உரிமையிலும் அக்கறையிலும் குழந்தைகள்மீது நாம் அதிகாரத்தையே செலுத்திவருகிறோம் என்பதைப் பல நேரங்களில் பெற்றோரான நாம் உணர்வதேயில்லை. பொதுவெளியில் குழந்தைகளின் அகவுலகம் சார்ந்து இன்னமும் பேசப்படாத, கவனிக்கப்பெறாத பல நூறு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழில் குழந்தைகளின் நிராதரவான ஏக்கப் பெருமூச்சு படைப்புகளின் வழியாக மெல்ல மேலெழுந்துவரும் சூழலில் வெளிவந்திருக்கிறாள் இந்த ‘அதிஸ்யா’. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டும், கல்விப் பணியில் ஈடுபாட்டோடு செயல்பட்டுக்கொண்டும் இருக்கும் கவிஞர் க.அம்சப்ரியாவின் பல கவிதை நூல்களிலிருந்து குழந்தைகளின் மனவுலகம் சார்ந்த கவிதைகளை மட்டும் தேர்வுசெய்து தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் ப்ரியம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையே இந்நூலிலுள்ள எல்லாக் கவிதைகளின் ஊடாகவும் கண்டுணர முடிகிறது. குழந்தைகள் உலகின் மையக்குரலாக அதிஸ்யாவின் குரல் கவிதைகள்தோறும் ஒலிக்கிறது. ‘அதிஸ்யாவிடம் அவர்கள் / ஓர் ஆப்பிள் துண்டைத் தந்தார்கள் / வேணிக்குக் கொஞ்சம் / விசாலாட்சிக்குக் கொஞ்சம் / உமாவுக்குக் கொஞ்சம் / ரித்திகாவுக்குக் கொஞ்சமென / காக்காக்கடி போட்டுக்கொண்டே இருந்தாள் / ஆப்பிள் துண்டு / ஆப்பிள் தோட்டமாகிக்கொண்டிருந்தது’ எனும் வரிகளில் உலகக் குழந்தைகளின் ஒற்றைப் பிரதிநிதியாக நம் முன்னே புது ரூபம் கொள்கிறாள் அதிஸ்யா. குழந்தைமையைத் தொலைத்துவிடாத மனதோடு அதிஸ்யாவையும் சுமந்துவரும் க.அம்சப்ரியாவின் இக்கவிதைகள், நமக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான புரிதலைத் தருவதில் துணைநிற்கின்றன.

- மு.முருகேஷ்

‘நந்திபுரத்து நாயகி’ - புதிய பதிப்பு

நந்திபுரத்து நாயகி
விக்கிரமன்
வெளியீடு: யாழினி பதிப்பகம்,
சென்னை - 600108
விலை: ரூ.888
தொடர்புக்கு:
044-2536 9892

சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டியை முன்வைத்து, அமரர் கல்கி எழுதிய மாபெரும் வரலாற்றுப் புதினம் ‘பொன்னியின் செல்வன்’. நவீனத் தமிழர்கள் சோழப் பேரரசு குறித்துப் பெருமிதம் கொள்ளவும் அந்தக் காலகட்டத்து அரசியல், சமூக நிகழ்வுகளைத் தேடித் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளவும் உந்திய இந்த நூல், இன்றளவும் தமிழில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நூலின் தொடர்ச்சியாக விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினம் ‘நந்திபுரத்து நாயகி’. ‘பொன்னியின் செல்வன்’ நிறைவடைந்தபோது, தொக்கிநின்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையிலும் அதன் முதன்மைக் கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்த மனிதர்களுமான அருண்மொழிவர்மன் (ராஜராஜ சோழன்), குந்தவை, வந்தியத்தேவன் உள்ளிட்டோருக்கு அதற்குப் பின் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ளும் வாசகர்களின் வேட்கையை நிறைவேற்றும் விதமாகவும் விக்கிரமன் எழுதிய தொடர்கதை 1957-59 வரை ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. நூல் வடிவத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கடந்துவிட்ட ‘நந்திபுரத்து நாயகி’, இப்போது மூன்று பாகங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது. 2015 சென்னை பெருவெள்ளத்தில் எழுத்தாளர் விக்கிரமன் மறைந்த பிறகு வெளியாகும் முதல் பதிப்பு இது.

- கோபால்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x