

தி.ஜானகிராமனின் நூற்றாண்டில் (2021) தி.ஜா.வுடன் தொடர்புடைய மேலும் இரு நூல்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கின்றன. தி.ஜா. அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் எழுத்து, முன்னுரை-மதிப்புரை, கலை, பயணம், சமூகம், தன் அனுபவம் போன்ற உட்தலைப்புகளில் ‘தி.ஜானகிராமன் கட்டுரைகள்’ என்ற பெயரில் சுகுமாரனால் தொகுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, தி.ஜா.வின் படைப்புகள் குறித்து சுகுமாரனால் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள், முன்னுரைகள், பதிப்புரைகள் போன்றவை ‘மோகப் பெருமயக்கு’ என்ற நூலாகியுள்ளது. தி.ஜா.வின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு முதல் தி.ஜா.வின் கட்டுரைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பதிப்புரை வரை, கடந்த நாற்பதாண்டு காலத்தில் எழுதப்பட்ட பதினோரு கட்டுரைகளும் நேர்காணல் ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு நூல்களுமே சுகுமாரன் என்ற தீவிர வாசகரால் தி.ஜா. எனும் படைப்பாளுமைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட காணிக்கைகள்.
தி.ஜானகிராமன் கட்டுரைகள்
‘தி.ஜானகிராமன் கட்டுரைகள்’ என்ற இத்தொகை நூலின் கட்டுரைகள் தி.ஜா. ஒரு சிறந்த கட்டுரையாளரும்கூட என்பதை நிறுவுவதற்கான சாத்தியங்களுடன் அமைந்துள்ளன. இதழ்களிலும் வெவ்வேறு நூல்களிலும் சிதறிக்கிடந்த தி.ஜா.வின் கட்டுரைகளைப் பெரிதும் முயன்று பலரது உதவியுடன் சுகுமாரன் இந்நூலைத் தொகுத்துள்ளார். நாற்பதாண்டு கால இலக்கியப் பயணத்தில் தி.ஜா.வின் அபுனைவு பங்களிப்பு சக எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவுதான். ஆனாலும் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது புனைவுக்கு இணையான நுண்ணுணர்வுடனும் காத்திரத்துடனும் அவரது அபுனைவுகளும் இருக்கின்றன என்பதுதான் இத்தொகுப்பின் சிறப்பு.
நண்பர்களுக்காக எழுதிய சில கட்டுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால், கறாரான ஓர் இலக்கிய மதிப்பீடும் கலை குறித்த தீர்க்கமான பார்வையும் தி.ஜா.விடம் இறுதிவரை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், தனது புனைவுகள் குறித்துப் பேசும்போது மட்டும் அடக்கத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு பதில் சொல்கிறார். “என் எழுத்து மனித வாழ்க்கையை மாற்றவோ உலுக்கவோ போவதில்லை” என்று சாகித்ய அகாடமியின் விருதளிப்பு விழாவில் பேசிய தி.ஜா., நான் எனக்கே எனக்காக எழுதுகிறேன் என்கிறார். “நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன” என்ற தன்னடக்கமும் தி.ஜா.வின் புனைவுகள் இன்றும் வாசிக்கப்படுவதற்குக் காரணம். “தோல்வி பெற்றவர்கள்தாம் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று கூற முடியும்” என்றும் தி.ஜா. எழுதியிருக்கிறார். தன் எழுத்தைத் தாழ்த்திக்கொண்ட தி.ஜா., கு.ப.ரா. கதைகளை அவ்வளவு நுணுக்கமாக மதிப்பிட்டிருக்கிறார்.
மேலை இலக்கியக் கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யும் எழுத்துகள்மீது தி.ஜா.வுக்கு அதிருப்தி இருந்ததையும் இக்கட்டுரைகளில் உணர முடிகிறது. பராங்குசம், கிருத்திகா, எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் குறித்த கட்டுரைகளும் முக்கியமானவை. புனைவுக்கு நிகரான சொற்சிக்கனமும் உட்பொருளை நேரடியாக அணுகுவதும் தி.ஜா.வின் கட்டுரைகளில் கூடிவந்திருக்கின்றன. வெவ்வேறு தன்மையிலமைந்த தி.ஜா.வின் மூன்று செவ்விகளும் லால்குடி ஜெயராமன் எழுதிய ‘ஜானகிராமன் செய்த ஜாலம்’ என்ற கட்டுரை ஒன்றும் நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.
மோகப் பெருமயக்கு
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தி.ஜா.வின் எழுத்துக்களைத் திரும்பத் திரும்ப வாசித்ததனூடாக ஏற்பட்ட அனுபவப் பகிர்வுகளைப் பல நுண்ணடுக்குகளாக சுகுமாரன் கட்டுரைகளாக எழுதியுள்ளார். தி.ஜா.வின் எழுத்துக்கள் ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு புரிதலுக்கு அழைத்துச் சென்றதை சுகுமாரன் தன் அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார். இந்தப் புரிதலுக்கு வயது ஒரு காரணியாக இருந்ததைக் கண்டடைகிறார். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தி.ஜா. நாவல்களில் வரும் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பித்துநிலை சுகுமாரனுக்குக் கல்லூரிக் காலத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ‘மோக முள்’ளின் யமுனாவை இன்றும் தன் நினைவுகளில் சுமந்துகொண்டிருக்கிறார். ‘மோக முள்’ நாவலுக்கு எழுதப்பட்ட ஆகச் சிறந்த கட்டுரை இந்தப் புத்தகத்தில் உள்ள ‘மோகப் பெருமயக்கு’ கட்டுரை. தி.ஜா.வின் எழுத்துக்களை இழை இழையாக உள்வாங்கிக்கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுத முடியும். இந்நூலின் பலமே வாசிப்பவர்களை மூல நூல்களுக்குத் திருப்புவதுதான். ரசனை சார்ந்தும் பிரதி தரும் பல்வேறு நுண்ணுணர்வு சார்ந்தும் இந்த நூலை சுகுமாரன் எழுதியிருக்கிறார்.
இந்நூலை மொத்தமாக வாசிக்கும்போது இரண்டு அம்சங்கள் தூலமாகப் பிடிபடுகின்றன. ஒன்று, தி.ஜா.வின் படைப்புகள்மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்குத் தன் வாசிப்பின் நிலையிலிருந்து சுகுமாரன் எழுதியிருக்கும் பதில். இரண்டு, தி.ஜா. ஒரு செவ்வியல் எழுத்தாளர் என்பதை அவரது ஆக்கங்களில் இருந்தே நிறுவுதல். அதேபோல தி.ஜா.வின் அனைத்துப் படைப்புகளையும் கண்மூடித்தனமாக சுகுமாரன் தூக்கி நிறுத்தவும் முயலவில்லை. ‘அன்பே ஆரமுதே’ நாவலைக் கலை வறுமை நிரம்பிய தொடர்கதை என்று விமர்சிக்கிறார். மற்றொரு இடத்தில், “தி.ஜா.வை அநாயாசமான எழுத்தாளர் என்று சொல்லலாமே தவிர, சரளமான எழுத்தாளர் என்று சொல்ல மாட்டேன்” என்றும் எழுதியிருக்கிறார். தி.ஜா.வின் எழுத்துக்களை நாற்பது வருடங்களாக வாசித்துவருவதன் நிறைநிலை இது.
லட்சியவாதத்துடன் பொருத்தி ‘உயிர்த்தேன்’ நாவல் குறித்து எழுதிய ‘சந்திரப் பிறையின் செந்நகை பொலிக’ என்ற கட்டுரையும் ‘அம்மா வந்தாள்’ நாவல் குறித்து எழுதப்பட்ட ‘மீறலின் புனிதப் பிரதி’ கட்டுரையும் வாசிக்கத் தவறவிடக்கூடாதவை. தி.ஜா.வின் எழுத்துக்களைத் தேடித் தொகுக்கும்போது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து எழுதப்பட்ட பதிப்பு சார்ந்த கட்டுரைகளும் அதன்மீது வைக்கப்பட்ட சுகுமாரனின் விமர்சனங்களும் கவனிக்க வேண்டியவை. தி.ஜா. மிகச் சிறந்த சிறுகதையாளர் என்பதைப் புரிந்துகொள்ள இந்நூலிலுள்ள ‘அழகின் சிலிர்ப்பு’ என்ற கட்டுரை ஒன்று போதும். ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது தி.ஜா. படைப்புகள் மீதான சில கருத்துகள் திரும்பத் திரும்ப வருவதையும் குறிப்பிட வேண்டும். வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால், இதனைத் தவிர்ப்பதும் எளிதானதல்ல. தி.ஜா.வுக்கு எழுதிய அஞ்சலியை முழுமையாக வாசிக்க முடியாமல் கண் கலங்கி நின்ற சுகுமாரனைப் போன்ற தீவிர வாசகர்கள்தான் தி.ஜா.வின் பலம்.
இவ்விரு நூல்களுமே தி.ஜா.வின் புனைவு, அபுனைவின் எல்லைகளை மேலும் விரிவாக்கி வாசகர் முன் நிறுத்துபவை. அவ்வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com
| தி.ஜானகிராமன் கட்டுரைகள் தொகுப்பாசிரியர்: சுகுமாரன் விலை: ரூ.290 மோகப் பெருமயக்கு சுகுமாரன் விலை: ரூ.160 இரண்டு நூல்களையும் வெளியிட்டவர்கள்: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629 001 தொடர்புக்கு: 96779 16696 |