

முகலாய மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக 17-ம் நூற்றாண்டில் கட்டியது தாஜ்மகால். உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன மிகவும் அழகான கட்டிடம். தாஜ்மகாலைப் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வாடிக்கைதான்.
புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்.
முகலாயர்களின் ஆட்சி மொழியான பாரசீகத்தில் எழுதப்பட்டவற்றை ஆராய்ந்தும் பல நூல்கள் வெளியாகிவிட்டன. ஆங்கிலேயர்கள் உள்ளிட்டோர் எழுதிய இந்நூல்களில், தமிழரான டி.தயாளன் எனும் தொல்பொருள் ஆய்வாளரும் ‘Tajmahal and Its Conservation’ என்ற நூலை எழுதியுள்ளார். இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் இந்தியத் தொல்லியல் ஆய்வு அமைப்பின் (ஏஎஸ்ஐ) ஆக்ரா மண்டலக் கண்காணிப்பாளராக 2003 முதல் 2007 வரையில் தாஜ்மகாலை நிர்வகித்தவர். தனது பணிகளுக்கு இடையே, தாஜ்மகாலைத் துருவி ஆராய்ந்த அனுபவம் முனைவரான தயாளனுக்கு உண்டு. இவரது ஆதாரபூர்வமான கூற்றின்படி, தாஜ்மகாலின் அடித்தளத்தில் பெரிய அளவிலான நிலவறைகள் மட்டுமே அமைந்துள்ளனவே தவிர, அறைகள் இல்லை. இந்நிலவறைகளின் விரிசல் 1976-ல் பழுதுபார்க்கப்பட்டது பற்றியும் தயாளன் நூலில் குறிப்புகள் உள்ளன.
இந்த நிலவறைகள், தாஜ்மகாலின் பின்புறமான தெற்குப் பகுதியில் யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் யமுனையில் படகுகள் மூலம் பயணித்து தாஜ்மகாலுக்கு முகலாயர்கள் வருவது உண்டு. அப்போது தாஜ்மகாலுக்குள் செல்லும் முன் உடைகளைச் சரிசெய்துகொள்ளவும், ஓய்வெடுக்கவும் இந்த நிலவறைகளைப் பயன்படுத்தினார்கள். வெளிச்சம் குறைவாக உள்ள இந்த நிலவறைகளிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளும் மிகக் குறுகலானவை. இதன் காரணங்களால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால், டெல்லியின் குதுப் மினாரில் 1981-ல் நிகழ்ந்ததுபோல் நெரிசல் விபத்துகள் நேரும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே, அதனுள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இவற்றை அவ்வப்போது பராமரிப்புப் பணிகளுக்காக தொல்லியல் ஆய்வு அமைப்பினர் திறப்பது உண்டு.
மன்னர் பதவிக்காக, தன் மகன் ஔரங்கசீப்பால் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்ட ஷாஜஹான், 1666-ல் இறந்தபின் அவரது சடலம், அங்கிருந்து படகு மூலமாகத்தான் தாஜ்மகாலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கும் யமுனை ஆற்றின் நீர்வழிப் பாதையை முகலாயர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அப்பகுதியில் நடந்த தொல்லியல் அகழாய்வில் படகுகளைக் கரைகளில் கட்டப் பயன்படும் இரும்பு மற்றும் கல்லாலான வளையங்களும் கிடைத்துள்ளன.
தாஜ்மகாலைக் கட்டுவதற்காக அங்கிருந்த புராதன சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகவும் ஒரு புகார் உண்டு. இதுவும் உண்மையில்லை என்கிறது, அக்காலத்தில் இந்தியா வந்த பாரசீகப் பயணியான அப்துல் ஹமீது லாகூரி எழுதிய ‘பாத்ஷா’ நூல். இவர், தன் நூலில் தாஜ்மகாலின் ஆரம்பம் முதல் கட்டி முடிந்த பின் சில ஆண்டு விழாக்கள் வரை அன்றாடம் நடந்தவற்றை குறிப்புகளாக எழுதியுள்ளார். இதன்படி, உடல்நலம் குன்றியிருந்த மும்தாஜ், தற்போதைய மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரில் உயிர்துறந்திருக்கிறார்.
பிறகு, தாஜ்மகால் கட்டும் வரையில் அவரது சடலம், அங்குள்ள அவுக்கானா எனும் இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தாஜ்மகாலைக் கட்ட நிலம் தேடிய மன்னர் ஷாஜஷானுக்கு, அவர் ஆட்சியின் கீழ் இருந்தவர்களில் ஒருவரான ராஜா ஜெய்சிங், இலவசமாக நிலம் அளிக்க முன்வந்துள்ளார். ஒரு புனிதமான பணிக்காக எனக் கூறி மன்னர் ஷாஜஹான் அதை ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலத்துக்கு ஈடாகத் தனது இரண்டு ஹவேலிகளைக் கொடுத்து நிலம் பெற்றதற்கான ராஜரீதியான உடன்படிக்கைகளும் வரலாற்றுப் பதிவாக உள்ளன. இந்த நிலம் அமைந்த பகுதி அப்போதைய உயர்குடிச் செல்வந்தர்கள் வாழும் பகுதியாக இருந்துள்ளது. இவர்களது முப்பது ஹவேலிகள் யமுனை நதிக்கரையில் இருந்துள்ளன.
தாஜ்மகால் அறைகள் குறித்த வழக்கு, சிவன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாக நிலவும் புகாருக்கு அடித்தளமாகிவிட்டது. தாஜ்மகால் பற்றி மூன்றுக்கும் மேற்பட்ட நூல்களை ராஜஸ்தானைச் சேர்ந்த புருஷோத்தம் நாகேஷ் ஓக் எழுதினார். இதற்காகத் தான் திரட்டிய 109 ஆதாரங்களைக் காட்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். தாஜ்மகால் சிவன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்ற இவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் 2000-ல் தள்ளுபடி செய்தது. இந்த நூல்கள் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாகப் புகார்கள் இருந்தும், அதன் அடிப்படையிலான வழக்குகள் நின்றபாடில்லை.
முஸ்லிம்கள் தரப்பிலும் தாஜ்மகால் மீது ஒரு வழக்கு 1998-ல் தொடுக்கப்பட்டிருந்தது. இதில், தாஜ்மகால் உத்தர பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்று வாதிடப்பட்டது. ஆக்ரா நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் நீதிபதிகள் ‘தாஜ்மகால் உங்களுடையது என்பதற்கு ஆதாரமாக ஷாஜஹானின் கையெழுத்து உள்ளதா?’ எனவும் கேட்டிருந்தனர். இவ்வழக்கை எதிர்கொள்ள ஏ.எஸ்.ஐ. சார்பில் தேடப்பட்ட வரலாற்று ஆதாரங்களில் அவர் தாஜ்மகாலை வஃக்புக்கு அளிக்கவில்லை என உறுதியானது. இருப்பினும், தாஜ்மகாலின் விழாக்களுக்காகப் பராமரிக்க 30 கிராமங்களை வஃக்புக்கு அளித்திருந்தார் ஷாஜஹான். இந்த வழக்குக்காக ஏ.எஸ்.ஐ.யினர் தேடிப்பிடித்த 30 கிராமங்களும் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியாலும் தாஜ்மகால் சிக்கலுக்கு உள்ளானது. இவர் உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, தாஜ்மகாலை அழகுபடுத்தும் பெயரில் அதன் அருகில் வணிக வளாகம் கட்டத் திட்டமிட்டார். இதனால், தாஜ்மகால் கட்டிடத்துக்கு ஆபத்து எனவும் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதில் கிளம்பிய ஊழல் புகாரால் முதல்வர் மாயாவதி 2003-ல் ஆட்சியை இழந்தார்.
தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளைத் திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை அமர்வு நேற்று நிராகரித்துள்ளது. இப்படியாக பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டபடி தாஜ்மகால் தன் ஈர்ப்பில் குறைவுபடாமல் இந்தியப் பெருமையை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
- ஆர்.ஷபிமுன்னா,
தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in