அரசுப் பள்ளிகளின் விசித்திர வழக்கு

அரசுப் பள்ளிகளின் விசித்திர வழக்கு
Updated on
3 min read

மு.கருணாநிதி 70 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, ‘இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது’ என்ற வசனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நினைவுக்கு வந்தது. அதற்கு ஒரு விசித்திரமான வழக்குதான் காரணம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் அல்ல, பொதுமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் அரசுப் பள்ளிகளும் அதன் மாணவர்களும் நின்றிருந்தார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களே தங்களுக்கு எதிரான சாட்சியங்களைச் சமூக ஊடகங்களில் சமர்ப்பித்தார்கள். மக்களில் ஒரு சாரார் வழக்கறிஞர்களானார்கள். தப்பில்லை. ஆனால் அவர்களே தீர்ப்பும் எழுதினார்கள்.

ஏப்ரல் மாத மத்தியிலிருந்து அரசுப் பள்ளி தொடர்பான காணொளிகள் வரலாயின. ஒரு பதிவில், மாணவர்கள் வகுப்பறை பெஞ்சின் மீதேறி அதை உடைத்தார்கள். இன்னொரு பதிவில் ஆசிரியரை நோக்கிக் கை ஓங்கினான் ஒரு மாணவன். பிற்பாடு கையைப் பின்னிழுத்துக்கொண்டான். புதிதாய் முளைத்திருக்கும் ராகிங் கலாச்சாரம், வகுப்பறைக்குள் குத்தாட்டம் என்று படங்கள் தொடர்ந்தன. எல்லாக் காணொளிகளையும் மாணவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும். இதை அவர்கள் சாகசமாகக் கருதியிருக்கலாம்.

விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இப்படித்தான் வழக்கறிஞர்களே தீர்ப்பு எழுதுவோருமாயினர். ஆசிரியர்கள் மீண்டும் பிரம்பை எடுக்க வேண்டிய நேரமிது என்று ஓர் அமர்வில் முடிவாகியது. ‘ஆல் பாஸ்’ நடைமுறைதான் எல்லாச் சீரழிவுக்கும் காரணம் என்கிற தீர்மானத்துக்கு வந்தது பிறிதொரு அமர்வு.

இப்படிச் சொல்பவர்களின் உளவியலை விளங்கிக்கொள்ள, எனது ஆஸ்திரேலியப் பயணம் உதவியது. சிட்னியில் நான் வசிக்கும் இடத்துக்கு நேரெதிரே ஓர் அரசு ஆரம்பப் பள்ளி இருக்கிறது. எல்லா மேலை நாடுகளிலும், ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் முதலான வளர்ச்சியடைந்த கீழை நாடுகளிலும், அரசுப் பள்ளிகளில்தான் அதிகமான மாணவர்கள் படிப்பார்கள். ஆஸ்திரேலியாவிலும் அப்படித்தான். தனியார் பள்ளிகள், குறைவானவை, மிகுந்த செலவு பிடிக்கக்கூடியவை. ஆரம்பப் பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை இருக்கும். பள்ளி காலை எட்டு மணிக்குத் தொடங்கும். பெற்றோர் பிள்ளைகளை அழைத்து வருவார்கள்.

அதிகமும் ஆஸ்திரேலியப் பிள்ளைகள், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தியப் பிள்ளைகளும் வருகிறார்கள். இவர்களிடையே வித்தியாசம் துலக்கமாகத் தெரியும். அது நிறத்தால் மட்டும் வருவதல்ல. ஒன்றாம் வகுப்புப் பிள்ளையாய் இருந்தாலும் தனது முதுகுப் பையைத் தானே சுமந்து வந்தால், அது ஆஸ்திரேலியப் பிள்ளை. ஆறாம் வகுப்பாக இருந்தாலும் பின்னால் வரும் அம்மாவோ அப்பாவோ முதுகுப் பையைச் சுமந்துவர, முன்னால் பீடுநடை போட்டு வந்தால், அது இந்தியப் பிள்ளை. தங்கள் பிள்ளைகளின் முதுகுப் பையை மட்டுமல்ல, அந்தப் பிள்ளைகளின் பாடம், படிப்பு எல்லாவற்றையும் தங்கள் முதுகில் தூக்கிச் சுமக்கச் சித்தமாக இருப்பவர்கள்தாம் இந்த ஆஸ்திரேலிய வாழ் இந்தியப் பெற்றோர்.

இவர்களின் சகபாடிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது மேட்டுக்குடியினர். இவர்கள்தான் தங்களது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை உள்ளவர்கள். அதைக் கேட்டுப் பெறும் வலிமையுடையவர்கள். கெடுவாய்ப்பாக, கடந்த 30 ஆண்டுகளில் இவர்கள் ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

ஏன்? இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவது, பள்ளிகளில் பணம் காய்க்கும் என்பதைக் கல்வி வணிகர்கள் கண்டுகொண்டனர். அவர்கள் ஆங்கில மோகத்தையும், மதிப்பெண் போதையையும் கடைவிரித்தனர். நடுத்தர வர்க்கத்தினரும் மேட்டுக்குடியினரும் அதை வாங்கப் போட்டியிட்டனர். இரவிரவாக வரிசையில் நின்று, தங்கள் அந்தஸ்துக்கேற்ற பள்ளிகளில் இடம் பிடித்தனர். இரண்டாவது, கடந்த 30 ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகள் அதிகமில்லை. அதாவது, இந்த தனியார் பள்ளிப் பெருக்கத்துக்கு அரசு இயந்திரத்தின் மெளன சம்மதமும் இருந்தது.

அகில இந்தியாவிலும் இதுதான் நிலை. நாடு முழுவதிலுமாக தனியார் பள்ளிகள் சரிபாதி இடத்தைப் பிடித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் (60%). 30 ஆண்டுகளுக்கு முன்னால் எல்லாச் சமூகத்தினரும் ஒரே கூரையின் கீழ் படித்தார்கள். அது மாணவர்களிடையே இணக்கத்தையும் பரிவையும் வளர்த்தது. ஆனால், இப்போது வலியவர்களுக்குத் தனியார் பள்ளிகள், எளியவர்களுக்கு அரசுப் பள்ளிகள் என்றாகிவிட்டன. காலப்போக்கில் எளியவர்களும் தனியார் பள்ளி மோகத்தில், மிக அதிகமான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றாலும்கூட, அங்கே போய் விழ ஆரம்பித்ததும் நடந்தது.

இந்தத் தனியார் பள்ளிப் பெற்றோர்தாம் சமூக ஊடகங்களில் நடந்த விசாரணையில் நீதியரசர்களாக மாறித் தீர்ப்பு வழங்கியவர்கள். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை அடிக்கச் சொல்லியவர்கள். இவர்கள் யாரும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் அப்படிச் சொல்ல மாட்டார்கள். அந்த ஆசிரியர்களும் அப்படியெல்லாம் அடித்துவிட மாட்டார்கள். பிள்ளைகளைக் கை நீட்டி அடிப்பது இன்று குற்றச் செயல். அடி எதற்கும் தீர்வாகாது. மாறாக, அது ஆறாத வடுவாக மாறிவிடும்.

மாணவர்களின் காணொளிக்கு எதிர்வினையாகத் தமிழ்நாட்டுக் காவல் துறைத் தலைவரும் ஒரு காணொளி வெளியிட்டார். “பிள்ளைகளே, இந்த ஆசிரியர்களும் மேசை நாற்காலிகளும் உங்கள் சொத்து, இதை நீங்கள் நாசம் செய்யலாமா?” என்று கேட்டிருந்தார். இந்தக் கேள்வியை அவர் பொதுச் சமூகத்தை நோக்கியும் கேட்டிருக்கலாம். அரசுப் பள்ளிகள் நம் அனைவரின் சொத்து இல்லையா? இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் மதிப்பெண் எனும் மாயமானைத் துரத்திக்கொண்டு இடம்பெயர்ந்துவிட்டதால், அது அவர்கள் சொத்தாக இல்லாமல் போய்விடுமா? அரசுப் பள்ளிகளில்தான் நல்ல உள்கட்டுமானம் இருக்கிறது. மைதானங்கள் இருக்கின்றன. தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறது. அதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நடுத்தர வர்க்கத்தினரை அரசுப் பள்ளிகளை நோக்கி வரச்செய்ய வேண்டும்.

முதற்கட்டமாக, அரசுப் பள்ளிகளைப் பழிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று நாம் உணர வேண்டும். அரசுப் பள்ளிகளில் குறைகள் உண்டு. அவற்றைக் களைவதில் நம் அனைவருக்கும் பங்கும் உண்டு. எளிய மக்களின் ஒரே பற்றுக்கோடான அரசுப் பள்ளிகள் பலமிழந்தால், அவர்களின் வறுமையுடன் கல்லாமையும் சேர்ந்துகொள்ளும். கல்வியின் சாத்தியங்களை அறியாததால்தான் இந்தப் பிள்ளைகள் பெஞ்சுகளை உடைக்கிறார்கள், வன்முறையை நாடுகிறார்கள்.

அடுத்து, எல்லோரும் அவரவர் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரவரால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும். ஆசிரியர்-பெற்றோர் உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு உள்ளூர்க்காரர்களால் உதவ முடியும். நம் கல்வி, நம் உரிமை, நம் சமூகம், நம் பள்ளி என்கிற உணர்வு மேலெழும்ப வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in