அரசியலைச் சரிசெய்வது எப்படி?

அரசியலைச் சரிசெய்வது எப்படி?
Updated on
3 min read

அயர்ச்சியடையவைக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுவில், நமது அரசியலை எப்படித்தான் சரிசெய்வது என்று சில சமயம் தோன்றும். அதற்கு ஒரு சுகமான தீர்வைக் கற்பனை செய்துகொள்வது எளிது. அமெரிக்காவின் அடுத்த அதிபர், நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, “அமெரிக்க அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறோம். எந்த விஷயமானாலும் நாம் அனைவரும் இணைந்து அதை ஆராய்வோம், விவாதிப்போம். நமக்குள் கருத்துவேறுபாடு இருக்கலாம், சச்சரவுகூட ஏற்படலாம். ஆனால், அதை நன்மை x தீமை ரத்தக்களரிப் போட்டியாக நாம் கருதப்போவதில்லை” என்று சொல்வார். இதுபோன்ற தலைமையால், பணக்காரர்களின் செல்வத்தையும் ஏழைகளின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த முடியும்.

ஆனால், சமூகத்தின் அடிமட்டம் வரை அரசியல் ரீதியான பிறழ்ச்சி இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவ்விஷயத்தில் உண்மையிலேயே மாற்றம் வேண்டும் என்றால், அரசியலுடன் பிணைந்துகிடக்கும் சமூகச் சூழலில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

ஒத்திசைவான அமைப்பு

ஆரோக்கியமான சமூகங்களில், வசதியான வட்டத்துக்குள் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு குடும்பம், அண்டை வீட்டுக்காரர்கள், பள்ளி, குடிமை அமைப்பு, பொழுதுபோக்குக் குழு, நம்பிக்கை, உள்ளூர்க் கலாச்சாரம், தேசம், கண்டம் உலகம் என்று பலவற்றின் உறுப்பினர்கள் அவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு அடுக்கும் மற்றவற்றுடன் பிணைந்து ஒன்றுக்கொன்று வித்தியாசமான அதேசமயம் மொத்தத்தில் ஒத்திசைவான அமைப்பை உருவாக்கியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில், அமெரிக்க சமூகத்தில் தனிப்பட்ட வாழ்வு, சுதந்திரமான சுயசார்புள்ள வாழ்வுக்கான மனநிலை ஏற்பட்டது. ஒரு தனிநபர் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாமல், தான் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற மனநிலை அது.

சரியான செயல்கள்

“இந்த நூற்றாண்டின் பெரும்பகுதி காலமும், தன்னலம் மறத்தல், தியாகம், விதிகளைப் பின்பற்றுவது, ஒரு நிறுவன அமைப்புக்குள் கரைந்துவிடுவது - இவையெல்லாம் சரியான செயல்கள் என்றே அமெரிக்கர்கள் நினைத்தனர். ஆனால், தற்போது அவற்றுக்கு எதிரான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. பழைய நடைமுறைகள் தனிநபர்களை அநாவசியமாகக் கட்டுப்படுத்துகின்றன என்றும், பெரிய நிறுவனங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்கள் சொந்த நலனுக்காக மக்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்றும் அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று 1981-ல் சமூக ஆய்வாளர் டேனியல் தெரிவித்திருக்கிறார்.

இப்படி தனிமனித சுதந்திரத்தின் பக்கம் அமெரிக்கர்கள் திரும்பியது மிகப் பெரிய தாக்கத்தைக் கொடுத்தது என்றாலும், சரிவுகளுக்கும் குறைவில்லை. 2005-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தங்கள் அண்டை வீட்டுக்காரர்களில் சிலரின் பெயர் மட்டுமே தெரியும் என்றும் பலரின் பெயர் தெரியாது என்றும் 47% அமெரிக்கர்கள் தெரிவித்திருந்தனர். மனம் விட்டுப் பேசுவதற்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று சொல்லும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

நடுவட்டப் பாதிப்பு

பொது வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. ‘தி வேனிஷிங் நெய்பர்’எனும் புத்தகத்தில் மார்க் ஜே. டங்கல்மேன் குறிப்பிட்டதுபோல், குடும்பம், நண்பர்கள் போன்ற உள்வட்டத்தில் உள்ள உறவுகளை அமெரிக்கர்கள் நன்றாகவே பேணுகிறார்கள். ஃபேஸ்புக் நண்பர்கள் போன்ற வெளிவட்ட உறவுகளையும்தான்.

ஆனால், பெற்றோர் - ஆசிரியர் குழுமத்தில் உள்ளவர்கள், அண்டை வீட்டில் வசிப்பவர்கள் போன்ற நடுவட்டத்தில் உள்ள உறவுகளிடம் மிகக் குறைவான நேரத்தையே செலவிடுகிறார்கள்.

உண்மையில் நடுவட்டத்தில் உள்ள உறவுகள், மனிதர்களின் சிந்தனை மேம்பட உதவுகின்றன என்று வாதிடுகிறார் டங்கல்மேன். தன்னார்வத் தீயணைப்பு நிலையத்தில் உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் நபர் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு உங்களுக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால், சில வாரங்களில் அவருடனான நட்பில் பல விஷயங்கள் உங்களுக்குத் தெரியவரலாம்.

நடுவட்டத்தில் உள்ள உறவுகளைப் பொறுத்தவரை, அவர்களின் பின்னணி வெவ்வேறாக இருக்கும். நீங்கள் அயர்லாந்தைப் பூர்விகமாகக் கொண்டவராக இருக்கலாம். ஒரு பேராசிரியராக இருக்கலாம். ஆனால், உங்களைப் போலவே, நடுவட்டத்தில் இருக்கும் மற்றொருவரும் அமெரிக்கக் குடிமகனே!

நடுவட்டத்தில் உள்ளவர்களுடனான, குறிப்பாகப் பொது வாழ்வில் எதிர்கொள்ளும் அண்டை வீட்டுக்காரர்கள், பொது இடங்களில் எதிர்ப்படும் நபர்கள் போன்றோருடனான உறவு மோசமானதன் விளைவு, அமெரிக்கர்களின் பொதுச் சிந்தனை மோசமாகியிருப்பதுதான். தங்களுக்கு உவப்பில்லாத கருத்துகளையும் தகவல்களையும் எளிதாகப் புறக்கணித்துவிடுகிறார்கள். ஒருதலைப்பட்சமான கருத்து ஒரே கண்ணோட்டத்தில் உலகைப் பார்ப்பதற்கு வித்திடும். ஒருவர் நல்லது நடக்கும் என்ற நேர்மறைச் சிந்தனை கொண்டவரா, அல்லது அவநம்பிக்கையாளரா என்பது அவர் இருக்கும் அணி அதிகாரத்தில் இருக்கிறதா என்பதைப் பொறுத்தது.

டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்களால், அவர் அதிபர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று உணர முடியாமல் போவதற்குக் காரணம், தங்களைப் போலவே சிந்தனை கொண்டவர்களுடன் சேர்ந்துகொள்வதுதான். நாம் எப்போதுமே நம்மைப் போன்ற கருத்துகொண்டவர்களுடன் நல்ல உறவு கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்க்கருத்து கொண்டவர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வதில் தோற்றுவிடுகிறோம்.

வாழ்வில் அரசியல்

இனம் மற்றும் பூர்வீகம் தொடர்பான சில தகவல்களை வைத்துக்கொண்டு இடைவெளிகளை அரசியல் நிரப்ப வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருப்பது அல்லது குடியரசுக் கட்சியின் ஆதரவாளராக இருப்பது என்பதே ஒருவரின் இன அடையாளமாகிவிட்டது. உளவியல் ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும், ஏன் ஆன்மிக வாழ்விலும்கூட அரசியலைப் பொருத்திப் பார்க்கிறார்கள்.

அடையாளத்தின் மையமாக அரசியலை வைத்துவிட்டால், அரசியல் என்பது உங்கள் இன அடையாளமாகவும், தார்மிக அடையாளமாகவும் ஆகிவிட்டது என்றால், அதில் சமரசத்துக்கு இடமே இருக்காது. ஏனெனில், சமரசம் செய்வது என்பது நேர்மையற்ற ஒன்றாகிவிடும். இரண்டு ஆண்டுகளாக அசுரத்தனமாக நடக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள், அமெரிக்கர்களின் வாழ்வில் பெரும்பகுதியை விழுங்கிவிடுகின்றன. நமது அரசியலை மீட்டெடுக்க வேண்டும் என்றால், அரசியலைச் சுருக்க வேண்டியிருக்கும். அரசியலைச் சார்ந்து அடர்ந்திருக்கும் உள்ளூர்ச் சமூக வலையை வளர்த்தெடுக்க வேண்டியிருக்கும். 1960-களில் உருவான சுயசார்பு கலாச்சாரத்தைக் குறைக்க வேண்டியிருக்கும். அந்தக் காலகட்டத்துக்கு அது பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால், அது எல்லை கடந்துவிட்டது.

இந்தக் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தால் அது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமையலாம். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான விஷயத்தை நிறைவேற்றிக்கொண்டால், முடிவில் இந்தச் சமூகமே நமக்கு விருப்பமில்லாத ஒன்றாகிவிடும்.

தனது அண்டை வீட்டுக்காரருக்கு உதவுவதில்தான் ஒருவர் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை!

‘தி நியூயார்க் டைம்ஸ்’
சுருக்கமாக தமிழில்: வெ. சந்திரமோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in