நல விடுதிகள்: அவலம் தீர்க்கப் புறப்பட்ட அரசு!

நல விடுதிகள்: அவலம் தீர்க்கப் புறப்பட்ட அரசு!
Updated on
3 min read

ஒரு நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரை, அதே நாளிதழில் மீண்டும் ஒரு நடுப்பக்கக் கட்டுரையை எழுதத் தூண்டும் அளவுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கிறது. ‘ஆதிதிராவிடர் நல விடுதிகள்: அவலம் தீர்க்குமா அரசு?’ என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் 25.02.22 அன்று நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாகப் பல கடிதங்கள் வந்தன. இத்துறை நடத்தும் பெண்கள் விடுதி மாணவிகள் கூட்டாக ஒரு கடிதம் எழுதினார்கள்.‌ உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், சாம்பார் வடிநீர்போல் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். ரேஷன் அரிசிக்குப் பதிலாக நல்ல அரிசிச் சோறு போட்டால் நல்லது என்றனர்.

ஒரு மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர், ‘எங்கள் மாவட்டத்தில் போலிக் கணக்குகள் கருவூல அளவில் கண்டுபிடிக்கப்பட்டு, பலர்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். இத்துறை விடுதியில் இருக்கும் காப்பாளர் ஒருவரே, கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அனைத்தும் உண்மை என்று கூறி, அதனையும் தாண்டி அங்கு நடக்கும் தவறுகளைப் பட்டியலிட்டு, ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். ‘அரசும் மக்களும் இந்தக் கட்டுரையை வாசித்திருப்பார்கள். நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவோம்’ என்று அவர் அந்த மின்னஞ்சலை முடித்திருந்தார். அக்காப்பாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, அதற்கேற்ப அரசு செயல்படுகிறது என்பதற்கு, ஆதிதிராவிடர் நல விடுதிகளைப் பொறுத்தமட்டில் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, 18.03.22 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ‘ஆதிதிராவிடர் நல விடுதிகளின் கட்டமைப்பு, சுகாதாரம், கல்விச் சூழல், உணவின் தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பு.

அடுத்து, ஆதிதிராவிடர் நல விடுதிகளில், நூறு விழுக்காடு முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி 29.03.22 அன்று தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் பட்டியலின, பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்துவதில் கல்விக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அந்தக் கல்வியை வழங்க அரசு நூற்றுக்கணக்கான விடுதிகளை நடத்திவருகிறது; இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிப் பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர்கள் ஒரே நாளில் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனைத்து மாணவர்களும் அந்த விடுதிகளில் தங்கிப் படித்துவருகிறார்களா, விடுதி நிர்வாகம் எப்படி இருக்கிறது, குடிநீர், கழிப்பறை வசதி, பராமரிப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆய்வுகள் வழியாக, அடிப்படை வசதிகள் மற்றும் விடுதி சேவையின் தரம் ஆகியவற்றை அதிகரிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஓர் அறிக்கை தயார்செய்து, அரசுக்கு அனுப்ப வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், விடுதிகளில் பரிசோதனைகள் நடைபெற்றுவருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், அங்குள்ள 104 விடுதிகளுக்கும் இரண்டு இரண்டு பேர் வீதம் 204 பேர் கொண்ட 104 குழுக்களை உருவாக்கி, ஒரே நாளில் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை ஆய்வுகளை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில், அந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். சில மாவட்டங்களில் திடீர் சோதனைகளாக அல்லாமல், ஆனால் மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.

இந்த ஆய்வுகளில், உணவின் தரம், பாதுகாப்பு, குடிநீர் என்று பல தகவல்களைத் திரட்டியுள்ளனர். அத்தோடு, விடுதி மாணவர்கள் எண்ணிக்கையில் இனிமேல் மோசடிகளில் ஈடுபட முடியாத அளவுக்குப் பல்வேறு தகவல்கள் மாணவர்களிடமிருந்து பெறப்படுகின்றன. தங்கிப் படிக்கும் மாணவர்களின் தாய், தந்தை இருவரின் கைபேசி எண்கள், ஆதார் எண்கள், ரத்த வகை, பள்ளியின் எமிஸ் எண் இப்படிச் சேகரித்துள்ளனர்.

இதன் விளைவாக, எப்போதாவது விடுதிக்கு வரும் காப்பாளர்கள், அடிக்கடியோ அல்லது தினந்தோறும் கணக்கெழுத மட்டும் வரும் காப்பாளர்கள், இப்போது தினந்தோறும் விடுதிக்கு வருவதும் நீண்ட நேரம் விடுதிகளில் நேரத்தைச் செலவழிப்பது, மாலை நேரத்தில் டியூஷன் சொல்லிக்கொடுப்பது போன்ற பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. விடுதிகளில் காப்பாளர்கள் இல்லாத நேரத்தில் உயர் அதிகாரிகள் வந்துவிட்டால், காப்பாளர்கள் சொல்லிக்கொடுத்த பொய்களைக் கீழ்நிலைப் பணியாளர்கள் கூறிவந்தனர். இந்த நிலை மாறி, உண்மையை மட்டுமே உரைக்கும் துணிவு தற்போது வந்துள்ளது.

நம் முந்தைய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மேற்கு மண்டலம் சார்ந்தவை மட்டுமே; மாநிலம் முழுவதும் இப்படியில்லை என்று கூறியவர்கள் உண்டு. ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் நடத்திய ஆய்வுகள், மாநிலம் முழுவதும் இப்படித்தான் என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கின்றன. ஆட்சியர்கள் திடீர் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியதும் காப்பாளர் சங்கம், துறை அமைச்சரைச் சந்தித்துள்ளது. “உங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்யும்பட்சத்தில் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று அமைச்சர் அறிவுரை கூறி அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது.

அத்தோடு, அமைச்சரும் தன் பங்குக்கு ஆய்வுகளை நடத்திவருகிறார். இது போன்ற நடவடிக்கைகள் பிற்பட்டோர் நலத் துறை நடத்தும் விடுதிகளிலும் எடுக்கப்பட்டுவருகின்றன என்பது மிகவும் ஆரோக்கியமான போக்காகும். விடுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு உட்பட ஒட்டுமொத்த மறுசீரமைப்புக்கு அரசு தயாராக இருக்கும்போது, முந்தைய காலத்திலும் இப்போதும் முன்னுதாரணமாகச் செயல்படும் விடுதிக் காப்பாளர்கள்போல் எல்லா விடுதிக் காப்பாளர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் குழந்தைகள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தாயுள்ளத்தோடு அரவணைத்துக்கொள்ளும் கரங்களும் பயிற்சிகளும் காப்பாளர்களுக்கு வாய்க்கப்பெற வேண்டும். நலிவடைந்த பிரிவினருக்குக் கல்வியே முன்னேற்றத்தின் திறவுகோல் என்று தலைமைச் செயலாளர் குறிப்பிடுகிறார். அந்தக் கல்வி இளமையில் தரமானதாகக் கிடைக்க அரசோடு காப்பாளர்கள் இதயபூர்வமாக ஒன்றிணைய வேண்டும்.

- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை, தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in