

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் கூட்டுறவுத் துறையில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் (சிஐடியு) கிருஷ்ணமூர்த்தி...
நிறைகள்: "கரோனா தொற்று காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பாக 20-க்கு மேற்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நகைக்கடன் அளித்ததில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
குறைகள்: நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், பல சங்கங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. கூட்டுறவுத் துறையில் இருந்தது பொது விநியோகத் துறையை பிரித்து தனித் துறை அமைக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பால் விலையைக் குறைத்துவிட்டு பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
> தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
> கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க, கூட்டுறவு சங்கம் மூலம் மற்ற வியாபாரிகளுக்கும் குறுகிய கால கடன் வழங்க வேண்டும்.
> தையல் கூட்டுறவுச் சங்கங்கள் செய்யும் பணிகளுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்.
> நியாவிலைக் கடையில் பொருட்களை பாக்கெட் போட்டு விற்பனைச் செய்தால் எடை குறைவு போன்ற புகார்களைத் தவிர்க்கலாம்.