

அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்துள்ள ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - பெண்ணெழுத்து’ என்ற நூலின் முன்னுரையில், ‘இலக்கிய வரலாறுகளில் அக்காலத்துப் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேரா. ப.பத்மினி, ‘மறக்கப்பட்ட பதிவுகள்’ என்ற தன் ஆய்வு நூலிலும் பெண் எழுத்தைச் சரியாக ஆவணப்படுத்தாத இலக்கிய வரலாறுகளின் போதாமைகள் குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளார். ‘மறக்கப்பட்ட பதிவுகள்’ 1896-1950 காலகட்டங்களில் பெண்கள் எழுதிய நாவல்கள் குறித்த ஆய்வு நூலாகும். இக்காலத்தில் சுமார் இருநூறு நாவல்கள் பெண்களால் எழுதப்பட்டுள்ளன; 1896-ல் கிருபை சத்தியநாதனின் ‘கமலம் - ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்’ என்ற நாவல் வெளிவந்துவிட்டது; ஆனால், இலக்கிய வரலாற்று நூல்கள் இதனை மறைத்துவிட்டன என்கிறார் பத்மினி.
கா.சுப்பிரமணியப் பிள்ளையின் ‘இலக்கிய வரலாறு’ (1928) என்ற நூல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கிய வரலாற்று நூலாகும். இதில் புனைவிலக்கியம் குறித்து அவர் எழுதவே இல்லை. தமிழில் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாறுகளில் நவீன இலக்கியம் குறித்து எழுதப்படுவதே மிகக் குறைவு. அதில் பெண்களின் பங்களிப்புகள் குறித்து எழுதியிருப்பது மிகமிகக் குறைவு. இன்றைய சூழலில் பெண்கள் பலரும் இலக்கிய வரலாற்று நூல்களைத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். ஹரி.விஜயலட்சுமி, பாக்யமேரி, கமலா முருகன், தெ.வாசுகி, சிவப்பிரியா, அ.ஜெயம் - சந்திரலேகா வைத்தியநாதன், பு.இந்திரா காந்தி - பொ.திராவிடமணி போன்றோரின் இலக்கிய வரலாறுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இவர்கள் எழுதிய இலக்கிய வரலாறுகளும் பெண் எழுத்துக்களை முறையாகக் கவனப்படுத்துவதில் தவறியிருக்கின்றன. பேரா.வீ.அரசுவின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட இரெ.மிதிலா, 1901-1950 காலகட்டத்தில் உருவான பெண் படைப்பாளர்களின் விவரங்களைத் திரட்டியுள்ளார். இக்காலகட்டத்தில் 575 பெண் எழுத்தாளர்கள் எழுதியிருப்பதாகத் தன் ஆய்வில் கூறியுள்ளார். பெண்களும் ஆண்களுமாக எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்று நூல்களை வாசித்ததில், பெண்களால் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாற்று நூல்களைவிட ஆண்கள் எழுதியுள்ள இலக்கிய வரலாற்றுப் பிரதிகளே பெண் எழுத்துக்களுக்குக் குறைந்த அளவிலேனும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ‘ஏன் குறைந்த அளவிலேனும்’ என்பதற்கும் காரணம் இருக்கிறது.
இலக்கிய வரலாறுகள் எழுதிய பலரும் கல்லூரிப் பேராசிரியர்கள். இதில் பல இலக்கிய வரலாறுகள் அவர்கள் பணிபுரியும் கல்லூரி மாணவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை; சில போட்டித் தேர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவை. அடுத்து, 90% பேராசிரியர்கள் மரபிலக்கிய வாசிப்பின் பின்புலத்திலிருந்து இயங்குபவர்கள். அவர்களது இலக்கிய வரலாறுகளைக் கொண்டே இதனைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்து, நவீன இலக்கியம் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கொண்டது. அடுத்தடுத்த பதிப்புகளில் இலக்கிய வரலாற்றை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதனைப் பலரும் செய்வதே இல்லை.
‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதியுள்ள பாக்யமேரி, ‘பெண் எழுத்தாளர் புதினங்கள்’ என்ற உள்தலைப்பில் ஹெப்ஸிபா ஜேசுதாசன், லக்ஷ்மி, வாஸந்தி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், சிவகாமி ஆகியோரின் பெயருடன் ‘பாக்யா’ என்றொருவரின் பெயரையும் கொடுத்துள்ளார். பிறரது புனைவிலக்கியப் பங்களிப்புகளைவிட ‘பாக்யா’ குறித்து விரிவாக எழுதியுள்ளார். இறுதியில்தான் தெரிகிறது அது நூலாசிரியர் என்று. பேரா.சிவப்பிரியா எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2011) நூலையும் இங்கே குறிப்பிட வேண்டும். ‘உரைநூல்கள்’ என்றொரு தலைப்பின்கீழ் இளம்பூரணர், பேராசிரியர் உள்ளிட்ட உரையாசிரியர்களுக்கு நன்னான்கு வரிகளை மட்டுமே எழுதியவர், ‘சிவப்பிரியா’ என்ற முதல் பெண் உரையாசிரியரான (அவரே குறிப்பிட்டுக்கொள்கிறார்) தன்னைப் பற்றி ஐந்து பக்கங்கள் எழுதியுள்ளார். பெண்கள் எழுதிய இலக்கிய வரலாறொன்று, இந்திரா பார்த்தசாரதியைப் பெண் எழுத்தாளர் வரிசையில் சேர்த்திருக்கிறது. அரசு மணிமேகலை, நிர்மலா சுரேஷ், சரளா ராஜகோபாலன் போன்றவர்களைக் கடந்து பெண் கவிஞர்களின் பட்டியல் நகரவில்லை. நவீன இலக்கியம் குறித்த எவ்விதப் புரிதலும் இல்லாமல் எழுதப்படும் இலக்கிய வரலாறுகள் இப்படித்தான் இருக்கும்.
பு.இந்திரா காந்தி, பொ.திராவிடமணி ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ள இலக்கிய வரலாறு (2015) நவீன இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்புக்குக் கொஞ்சம் கவனம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. குட்டிரேவதி, சு.தமிழ்ச்செல்வி வரை வரலாறு நீண்டிருக்கிறது. கவிதை எழுதிய பெண்கள் பலர் புனைகதைகளிலும் பங்களித்திருக்கிறார்கள். இதனைப் பெரும்பாலான இலக்கிய வரலாறுகள் பொருட்படுத்தவே இல்லை.
நான் வாசித்ததில் நவீன இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பைப் பொருட்படுத்தி எழுதப்பட்ட இரண்டு இலக்கிய வரலாற்று நூல்கள் முக்கியமானவை. ஒன்று, க.பஞ்சாங்கம் எழுதியுள்ள ‘புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு.’ புனைவில், வை.மு.கோதைநாயகி முதல் திருநங்கையரின் இலக்கியப் பணிகள் வரை அவர்கள் இயங்கிய களத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை எழுதியுள்ளார். மற்றொன்று, மு.அருணாசலம் (திருச்சி), இராஜா வரதராஜா ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ள ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2012) குறிப்பிடத்தக்கது. சக்தி ஜோதி, தேன்மொழி, பெருந்தேவி எனத் தற்காலம் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அக்காலத்தில் கட்டுரைகளையே பெண்கள் அதிகமாக எழுதியிருக்கிறார்கள் என்கிறது இரெ.மிதிலாவின் ஆய்வு நூல். ஆனால், இலக்கிய வரலாற்று நூல்களின் கட்டுரை இலக்கியப் பகுதியில் பெண்கள் பெயர் இல்லை. மேலும், சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ‘புதிய தமிழ் இலக்கிய வரலாறு’ (மூன்று பாகங்கள்) என்ற நூலில் 53 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள; அதில் இரண்டு மட்டுமே (இரா.பிரேமா, ஸ்ரீ லட்சுமி) பெண்கள் எழுதியவை. ‘விடுதலைக்குப் பின் கட்டுரைகள்’ என்ற கட்டுரையில் 58 அபுனைவு எழுத்தாளர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பெண்களின் பங்களிப்பாக வ.கீதாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இலக்கிய வரலாற்றிலும் பெண் எழுத்துக்கு ஆண்கள் சிலராலேயே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களில் கணிசமானோர் தங்களை முன்னிறுத்துவதிலேயே கவனம் செலுத்தியிருக்கின்றனர். கல்விப் புலங்களில் நடைபெற்றுள்ள ஆய்வேடுகளின் துணையுடன் நவீன இலக்கியத்துக்கான பெண்களின் பங்களிப்பினை வரலாறாக எழுதுவது என்பது காலத்தின் தேவை. தற்சார்பற்று அதனைப் பெண்கள்தாம் செய்ய வேண்டும்.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com