

கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை உலகில் இயங்கிவருபவர் பவுத்த அய்யனார். ‘இங்கே இன்று’, ‘காலச்சுவடு’, ‘உலகத்தமிழ்’ போன்ற இதழ்களில் பணியாற்றியவர். ‘விடுவிப்பு’, ‘அலைபுரளும் வாழ்க்கை’, ‘மேன்ஷன் கவிதைகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவர் நடத்திய ‘நேர்காணல்’ இதழ், தமிழில் நேர்காணலுக்காகவே வெளிவந்த முதல் இதழாகும். அந்த இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு ‘காலத்தை வரைந்த தூரிகைகள்’ (துருவம் வெளியீடு) என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பவுத்த அய்யனாருடன் உரையாடியதிலிருந்து...
தமிழில் சிறுபத்திரிகை நடத்துவது சாகசமான விஷயம். அதுவும் நேர்காணலுக்காகச் சிறுபத்திரிகை கொண்டுவர வேண்டுமென எப்படித் தோன்றியது?
1996-ல் கவிஞர் பிரம்மராஜனை ‘புதிய பார்வை’ இதழுக்காக நேர்காணல் செய்வதற்கு தர்மபுரி சென்றிருந்தேன். அப்போது ‘த பாரிஸ் ரிவ்யூ’ (The Paris Review) இதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்கள் உட்பட உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிடுவதாக அவர் கூறினார். பிரம்மராஜனின் வார்த்தைகளே ‘நேர்காணல்’ இதழ் தொடங்குவதற்கு முக்கியக் காரணம். இதழ் தொடங்கும்போது 50 தமிழ் ஆளுமைகளின் பட்டியல் வைத்திருந்தேன். ஆனால் 6 ஆளுமைகளுக்காக மட்டுமே ‘நேர்காணல்’ இதழைக் கொண்டுவர முடிந்தது. புரவலர்கள் கிடைத்தால் மறுபடியும்கூடக் கொண்டுவரலாம்.
இலக்கியம், சினிமா, நாடகம் என்று வெவ்வேறு துறைகளில் இந்த இதழுக்காக ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் இவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
எண்பதுகளில் இருந்த இலக்கியச் சூழலில் இலக்கியத்தோடு நின்றுவிடாமல் ஓவியம், சினிமா, நவீன நாடகம், தெருக்கூத்து என்றெல்லாம் விவாதிக்கவும் எழுதவும் செய்தார்கள். என் இளம் வயதிலேயே கவிஞர் அபி, வண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோர் சிறந்த நூல்களைப் படிப்பதற்கு எனக்கு வழிகாட்டினார்கள். இப்படியான வாசிப்புச் சூழல் அமைந்ததே என் நேர்காணல் தேர்வுக்கான காரணம்.
‘நேர்காணல்’ இதழ்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?
இதழ் வெளிவந்தபோது இலக்கிய உலகில் பரவலான கவனம் பெற்றது. ‘இந்தியா டுடே’, ‘இந்து தமிழ்’, ‘குங்குமம்’, ‘காலச்சுவடு’ போன்ற அச்சு ஊடகங்கள் கவனப்படுத்தின. ‘தி இந்து’ ஆங்கில இதழின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாளராக அப்போது இருந்த எஸ்.அண்ணாமலை ‘நேர்காணல்’ இதழ் பற்றி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தார். இப்போதும் அந்த இதழின் பிரதிகளைப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என்னிடம் மாதிரிக்குக்கூட தற்போது அச்சுப் பிரதிகள் இல்லை.
இலக்கியத்துக்காகப் பொருளாதாரரீதியில் இழப்புகள் ஏற்பட்டாலும் திரும்பத் திரும்ப இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் காரணம் என்ன?
1982-ல் கவிஞர் அபி மூலமாக எனக்கு நவீன இலக்கியம் அறிமுகம். அப்போது நான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். எண்பதுகளில் ‘மீட்சி’, ‘கொல்லிப்பாவை’, ‘யாத்ரா’, ‘அன்னம் விடு தூது’ போன்ற பல சிற்றிதழ்கள் வந்துகொண்டிருந்தன. ‘கசடதபற’, ‘பிரக்ஞை’, ‘சதங்கை’, ‘அஃ’ போன்ற பழைய இதழ்களின் தொகுப்புகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் இலக்கியத்தில் சோதனை முயற்சிகள் நிறைய நடைபெற்றன. பணத்தின் மதிப்பையோ, இலக்கியத்தால் கிடைக்கும் புகழையோ குறித்து யாரும் பெருமைகொள்ள மாட்டார்கள். அப்போது, எழுத்தாளர்களின் புகைப்படங்கள் கிடைப்பதே அரிது. வெகுஜன இதழ்களில் எழுதுவதை அவமானமாகக் கருதினார்கள். இப்படியான மனப்போக்கே இலக்கியச் செயல்பாடுகளில் நான் ஈடுபடக் காரணம். என் இலக்கியச் செயல்பாடுகளால் நிறையப் பொருளாதார இழப்பு. இன்னும் மீள முடியவில்லை. இதை நான் பெரிதாகக் கருதாவிட்டாலும், மனைவி, மகனின் வாழ்வில் சிரமங்கள் வரும்போது மனதை மிகவும் பாதிக்கும்.
தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் நிறைய நேர்காணல் செய்தவர்களுள் நீங்களும் ஒருவர் அல்லவா...
சுபமங்களா இதழில் விரிவான நேர்காணல்களைத் தொடர்ந்து படித்ததனாலேயே நேர்காணல் எடுக்கும் ஆர்வம் எனக்கு வந்தது. 1996-97 ஆண்டுகளில் ‘புதிய பார்வை’யில் நான் எடுத்த நேர்காணல்கள் வெளியாகின. பின்பு, ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உலகத்தமிழ் இணைய இதழ்’, ‘போதி’, ‘தலித்’, ‘ஆழி’ ஆகிய இதழ்களில் 50-க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் செய்துள்ளேன். பிரம்மராஜன், கந்தர்வன், நகுலன், நீல.பத்மநாபன், அபி, ந.முத்துசாமி, கிருஷ்ணமூர்த்தி, நாசர், தீபச்செல்வன், வெ.ஸ்ரீராம், வண்ணநிலவன், பேராசிரியர் நீலகண்டன், சல்மா, இமையம், பொ.வேல்சாமி, மு.ராமசாமி, ஜெயமோகன், எம்.ஜி.ரஃபீக், மதன், இன்னும் பல பல்துறை சார்ந்தவர்களை விரிவாக நேர்காணல் செய்திருக்கிறேன். கனிமொழியுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பாமாவை நேர்காணல் எடுப்பதற்காக உத்திரமேரூர் சென்றதை முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு நேர்காணலை எப்படி எடுப்பது என்பதை கனிமொழியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
ஆனால், ஆத்மார்த்தமாகச் செய்தாலும் தமிழில் நேர்காணல் என்பதற்குப் பெரிதும் இலக்கியரீதியான மதிப்போ, அங்கீகாரமோ எதுவும் கிடையாது.
உங்கள் வீடும் இலக்கியச் சூழலைக் கொண்டது அல்லவா...
என் மனைவி முத்துமீனாளின் ‘முள்’ பெரிய அளவில் கவனம் பெற்ற நூல். இப்போது நடந்த புத்தகக்காட்சியில் துருவம் பதிப்பகம் புதிய பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. முதல் பதிப்பை கார்ட்டூனிஸ்ட் மதன் வெளியிட்டார். ஜப்பானின் நிப்பன் பவுண்டேஷன் ஆங்கிலத்தில் வெளிவர உதவியது. கமல்ஹாசன் ஆங்கில நூலை வெளியிட்டார்.
முத்துமீனாள் இப்போது அடுத்த நாவலை எழுதி முடித்திருக்கிறார். விரைவில் வெளியாகும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in